ஐபிஎல்: லக்னௌ அணியிலிருந்து மும்பைக்கு மாறிய வீரர்

ESPNcricinfo staff

ரோமேரியோ ஷெப்பர்ட் © AFP/Getty Images

ஐபிஎல் போட்டியில் லக்னெள அணிக்காக கடந்த பருவத்தில் விளையாடிய ரோமேரியோ ஷெப்பர்ட், மும்பை அணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2023 போட்டியில் லக்னெள அணிக்காக ஒரேயொரு ஆட்டத்தில் மட்டுமே ஷெப்பர்ட் விளையாடினார். ஹைதராபாத்துக்கு எதிரான அந்த ஆட்டத்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பந்துவீச்சிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்நிலையில், அவரது அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கு மும்பை அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஷெப்பர்ட். ஏலத்தின் வழியாக அல்லாமல் நேரடியாக லக்னெள அணியின் ஷெப்பர்டை மும்பை அணி தேர்வு செய்துள்ளது.

2024 ஐபிஎல் போட்டிக்கான ஏலம் துபாயில் டிசம்பர் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கு வெளியே முதன்முதலாக நடைபெறும் இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தலா ரூ. 100 கோடி வரை செலவழிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

10 அணிகளும் தாங்கள் விடுவிக்கும் மற்றும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த காலக்கெடு நவம்பர் 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்காக 31 டி20 ஆட்டங்களில் பங்கேற்றுள்ள ஷெப்பர்ட், 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். லீக் கிரிக்கெட்டிலும் ஷெப்பர்ட் நன்கு பரீட்சயப்பட்ட வீரர் ஆவார். கடந்த பருவத்தில் சிபிஎல் கோப்பையை வென்ற கயானா அமேசான் வாரியர்ஸ் அணியில் ஷெப்பர்ட் இடம்பெற்றிருந்தார். எஸ்ஏடி 20 போட்டியிலும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தமானார் ஷெப்பர்ட்.

Comments