விராட் கோலி: சாதனைகளின் சக்ரவர்த்தி

ESPNcricinfo staff
சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை தொடர் நாயகன் விருதை வென்றவர்களின் சச்சினுடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார் கோலி.

விராட் கோலி © Associated Press

ஒருகாலத்தில் முறியடிக்கவே முடியாது எனக் கருதப்பட்ட சாதனைகள் ஒவ்வொன்றையும் மெல்ல மெல்ல தகர்த்துக்கொண்டு வருகிறார் விராட் கோலி.

நாம் பார்த்துப் பார்த்து ஆச்சர்யப்படும் கோலியின் மகத்தான சாதனைகள் இவை.

* ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய வீரர்களின் பட்டியலில் 48 சதங்களுடன் கோலி 2-வது இடத்தில் உள்ளார். சச்சினின் (49) சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் இரு சதங்கள் மட்டுமே தேவை.

* சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த வீரர்களின் வரிசையில் சச்சின் 100 சதங்களோடு முதல் இடத்திலும் 78 சதங்களுடன் கோலி 2-வது இடத்திலும் உள்ளார்கள்.

* ஒருநாள் கிரிக்கெட்டில் ஓர் அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்தவர் - விராட் கோலி.

இலங்கைக்கு எதிராக 51 இன்னிங்ஸ்களில் 10 சதங்கள்.

இந்தப் பட்டியலில் 2-வது இடமும் கோலிக்குத் தான். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 41 இன்னிங்ஸ்களில் 9 சதங்கள்.

* ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 8,000, 9,000, 10,000, 11,000, 12,000 13,000 ரன்களைக் கடந்தவர் கோலி.

* ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் கோலிக்கு 2-வது இடம். 2018-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக தொடர்ச்சியாக 3 சதங்களை எடுத்தார்.

* டெஸ்டில் ஒரு தொடரில் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் கோலி 4 சதங்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். 2014-15 பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.

* டெஸ்ட் தொடரில் அதிக இரட்டைச் சதம் அடித்தவர்களின் பட்டியலில் கோலிக்கு 2-வது இடம். 2017-18 இலங்கைக்கு எதிரான தொடரில் 2 இரட்டைச் சதங்களை அடித்தார்.

* சர்வதேச டி20யில் அதிகமுறை தொடர் நாயகன், ஆட்ட நாயகன் விருதுகளை வென்றவர், கோலி. 7 முறை தொடர் நாயகன் விருதுகளும் 15 முறை ஆட்ட நாயகன் விருதுகளும் வென்றுள்ளார்.

* சர்வதேச டி20 ஆட்டங்களில் அதிக ரன் குவித்தவர்களின் பட்டியலில் 4,008 ரன்களுடன் கோலி முதல் இடத்தில் உள்ளார். 107 இன்னிங்ஸ்களில் இந்த ரன்களைச் சேர்த்துள்ளார்.

* சர்வதேச டி20ஆட்டங்களில் அதிக அரை சதம் அடித்தவர்களின் பட்டியலிலும் கோலிக்கே முதலிடம். இதுவரை 38 அரை சதங்களை அடித்துள்ளார்.

* சர்வதேச டி20 ஆட்டங்களில் அதிவேகமாக 3,500 ரன்களைக் கடந்து (96 இன்னிங்ஸ்) முதலிடத்தில் உள்ளார் கோலி. இதுவரை 3 பேர் மட்டுமே 3,500 ரன்களைக் கடந்துள்ளார்கள். மார்டின் கப்தில் 118 இன்னிங்ஸ்களிலும் ரோஹித் சர்மா 126 இன்னிங்ஸ்களிலும் இந்த இலக்கை அடைந்துள்ளார்கள்.

* சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை தொடர் நாயகன் விருதை வென்றவர்களின் சச்சினுடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார் கோலி. சச்சின் 183 தொடர்களிலும் கோலி 157 தொடர்களிலும் விளையாடி தலா 20 விருதுகளை வென்றுள்ளார்கள்.

* ஒரு வருடத்தில் அதிக சதங்களை அடித்ததில் கோலிக்கு 2-வது இடம். சச்சின் 1998-ல் 12 சதங்களும் கோலி 2018-ல் 11 சதங்களும் அடித்தார்கள்.

Comments