இலங்கை கிரிக்கெட் வாரியம்: என்ன நடக்கிறது?

ESPNcricinfo staff

இலங்கை கொடியுடன் ரசிகர் © Getty Images

அர்ஜுனா ரணதுங்கா தலைமையிலான இடைக்காலக் குழு இலங்கை கிரிக்கெட் வாரியத்தை வழிநடத்துவது குறித்த இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கேவின் உத்தரவை அந்த நாட்டு நீதிமன்றம் 14 நாள்களுக்கு நிறுத்திவைத்துள்ளது.

இலங்கை நாட்டு விளையாட்டுச் சட்டத்தின்படி, எந்தவொரு விளையாட்டினுடைய நிர்வாக அமைப்பையும் கலைக்க அந்த நாட்டு அரசுக்கு அதிகாரம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இந்த அதிகாரம் அதிக முறை பயன்படுத்தப்பட்டது இலங்கை கிரிக்கெட் வாரியத்தில்தான்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிதி கையாடல் மற்றும் நிர்வாகக் கோளாறு குறித்த குற்றச்சாட்டுகளை இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் தொடர்ந்து முன்வைத்து வந்தார். இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கான பொறுப்பை தன்னிடம் வழங்கினால், தான் மேற்கொள்ளவிருக்கும் மாற்றங்கள் குறித்து ரணதுங்காவும் தொடர்ந்து பேசி வந்தார்.

இந்த நிலையில், உலகக் கோப்பையிலிருந்து இலங்கை வெளியேறியதைத் தொடர்ந்து, குறிப்பாக வான்கெடேவில் இந்தியாவுக்கு எதிராக 55 ரன்களுக்குச் சுருண்ட பிறகு இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டது.

இதற்கு முன்பு 2014-2015 காலகட்டத்தில் இலங்கை கிரிக்கெட்டை அரசு நியமித்த இடைக்காலக் குழு நிர்வகித்தது. அப்போது, இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை ஐசிசி நிறுத்திவைத்தது. இலங்கை கிரிக்கெட் வாரிய உறுப்பினர்களால் புதிய வாரியம் நியமிக்கப்பட்ட பிறகே, நிதி விடுவிக்கப்பட்டது. இலங்கை கிரிக்கெட் வாரியம் தற்போது கலைக்கப்பட்டிருப்பது குறித்து ஐசிசியின் நிலைப்பாடு இதுவரை உறுதிபடத் தெரியவில்லை.

இலங்கை அரசால் அமைக்கப்பட்டுள்ள இடைக்காலக் குழுவில் இடம்பெற்றுள்ள ஒரே முன்னாள் வீரர் ரணதுங்கா மட்டும்தான். தவி இமாம், ரோஹிணி, இரங்கனி பெரேரா என மூன்று ஓய்வு பெற்ற நீதிபதிகள், இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் முக்கியப் பொறுப்பு வகித்திருந்த தர்மதாசா, ஆளும் அரசியல் தலைவர்களின் மகன்கள் ரகிதா ராஜபட்ச மற்றும் ஹிஷாம் ஜமால்தீன் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளார்கள்.

ஐசிசியின் வாரியக் கூட்டம் இன்னும் இரு வாரங்களில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநராக ரணதுங்கா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து இலங்கை கேபினட் அமைச்சர்கள் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்கள். செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றக் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. இலங்கை கிரிக்கெட் வாரியத்தை வழிநடத்துவதற்காக இடைக்காலக் குழு நியமித்ததை இலங்கை அதிபர் ஊடகங்கள் வாயிலாகவே தெரிந்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த முடிவுக்கு கேபினட் அல்லது அதிபரின் ஒப்புதல் தேவையில்லை என்பது விளையாட்டுத் துறை அமைச்சர் ரணசிங்கேவின் வாதமாக உள்ளது.

வெளியுறவுத் துறை அமைச்சர் தலைமையில் 4 பேர் அடங்கிய துணைக் குழு ஒன்றை அமைக்க கேபினட் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதிபர் அலுவலகத்திலிருந்து வெளியான செய்திக் குறிப்பும் இதை உறுதிபடுத்தியது. இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் ரணசிங்கே, இடைக்காலக் குழு நியமிக்கப்பட்டதைத் திரும்பப் பெறுமாறு அதிபரி வலியுறுத்தியதாகக் கூறினார்.

இந்த நிலையில், இடைக்காலக் குழுவை நியமிப்பதற்கான விளையாட்டுத் துறை அமைச்சரின் உத்தரவை அந்த நாட்டு நீதிமன்றம் 14 நாள்களுக்கு நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷம்மி சில்வா தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments