நவம்பர் 8: பிரெட் லீ பிறந்தநாள்!

ESPNcricinfo staff

பிரெட் லீ © AFP

1976

எதிரணிகளைத் தனது அசுர வேகத்தால் மிரள வைத்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிரெட் லீயின் பிறந்தநாள் இன்று.

மெக்ராத், கில்லெஸ்பி ஓய்வுக்குப் பிறகு, ஆஸ்திரேலிய பந்துவீச்சுக்கு தலைமை தாங்கியவர் பிரெட் லீ. மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் பந்தை ஸ்விங் செய்யக்கூடிய லீ, ரிவர்ஸ் ஸ்விங் செய்வதிலும் வல்லவர்.

ஆஸ்திரேலியர்களுக்கே உரித்தான ஆக்ரோஷத்துக்கு சிறந்த உதாரணமாக பிரெட் லீயைக் குறிப்பிடலாம். ஷார்ட் பந்து, யார்க்கர் என திணறடித்து, பேட்டர்களை பார்வையாலும் கூடுதலாக மிரட்டிச் செல்வார்.

டெஸ்டில் முதல் 7 ஆட்டங்களில் 42 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார். 76 டெஸ்டுகளில் 310 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் சாதித்ததும் ஏராளம். 221 ஆட்டங்களில் 23.36 சராசரியில் 380 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் மெக்ராத்துடன் முதலிடத்தைப் பகிர்ந்துள்ளார்.

2003 உலகக் கோப்பையில் கென்யாவுக்கு எதிராக ஹாட்ரிக் எடுத்தார். 2007 உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராகவும் ஹாட்ரிக் எடுத்தார். டி20 கிரிக்கெட்டில் முதல்முறையாக ஹாட்ரிக் எடுத்ததும் பிரட் லீ தான். சர்வதேச டி20யில் 25 ஆட்டங்களில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

1987-ல் உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணி © Chris Cole/Allsport

1987

ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதல்முறையாக 1987-ல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. இந்தியாவின் ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்து 253 ரன்கள் எடுத்தது. டேவிட் பூன் அதிகபட்சமாக 75 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்தால் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 246 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆஸ்திரேலிய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற டேவிட் பூன் ஆட்டநாயகனாகத் தேர்வானார்.

உலகக் கோப்பைகளில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்துவதற்கு முதற்காரணமாக இந்த வெற்றி அமைந்தது.

1992

டெஸ்டுக்கு நடுவே ஒருநாள் ஆட்டம் நடைபெற்றதை கேள்விபட்டதுண்டா..?

1992-ல் ஜிம்பாப்வேவுக்குப் பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி தலா இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் விளையாடியது. இதில் இரண்டாவது ஒருநாள் ஆட்டம் நவம்பர் 8-ல் நடைபெற்றது. இந்தத் தேதியில்தான் சுவாரசியம் உள்ளது.

நவம்பர் 7 முதல் 12 வரை இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் நடைபெற்றது. இதில் 8-ம் தேதி ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டு, அந்த தேதியில் இரண்டாவது ஒருநாள் ஆட்டம் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்தில் விநோதமான இந்த முடிவு எடுக்கப்பட்டது.

முடிவு வினோதமாக இருந்தாலும், நியூசிலாந்து கேப்டன் மார்டின் குரோ பேட்டிங்கில் இது எவ்விதத் தாக்கத்தையும் உண்டாக்கவில்லை. டெஸ்டில் முதல் நாளில் சதமடித்த குரோ, அடுத்த நாளில் நடைபெற்ற ஒருநாள் ஆட்டத்தில் 94 ரன்கள் குவித்து வெற்றிக்கு உதவினார். நியூசிலாந்து அணி இந்த ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நவம்பர் 9-ம் தேதி மீண்டும் இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. இந்த டெஸ்டில் நியூசிலாந்து அணி 177 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Comments