நவம்பர் 9: பிரித்வி ஷா பிறந்தநாள்!
அதிரடி ஆட்டக்காரர் பிரித்வி ஷாவின் 23-வது பிறந்தநாள் இன்று.
14 வயதில் பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் 546 ரன்கள் குவித்து சாதனை படைத்தார் பிரித்வி ஷா. 17 வயதில் ரஞ்சி கோப்பைப் போட்டியில் அறிமுகமாகி, தமிழ்நாடு அணிக்கு எதிராக சதமடித்தார். துலீப் கோப்பையிலும் அறிமுக ஆட்டத்தில் சதமடித்து சச்சினுக்கு இணையாகப் பேசப்பட்டார். 2018-ல், பிரித்வி ஷா தலைமையிலான இந்திய அணி, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்றது. அடுத்ததாக ஐபிஎல் போட்டிக்காக தில்லி அணி, அவரைத் தேர்வு செய்தது. 2021 ஐபிஎல்-லில் 479 ரன்கள் எடுத்தார்.
2018-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கான டெஸ்டில் இந்திய வீரராக அறிமுகம் ஆனார். அறிமுக இன்னிங்ஸிலேயே 134 ரன்கள் எடுத்து சாதனை செய்தார்.
இந்திய அணிக்காக 5 டெஸ்டுகள், ஒரு டி20, 6 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடந்த இரு வருடங்களாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு பிரித்வி ஷாவுக்குக் கிடைக்கவில்லை. எனினும் குறைகள் களையப்பட்டு, அதிரடி மன்னனின் ஆட்டத்தை மீண்டும் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்றே கூறவேண்டும்.