டசன் அரை சதம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா
உலகக் கோப்பையில் லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்துள்ள தென்னாப்பிரிக்க அணி மிகுந்த நம்பிக்கையுடன் அரையிறுதியில் விளையாடவிருக்கிறது. இரண்டாவது பேட்டிங் செய்து இந்தியாவுக்கு 83 ரன்களுக்குச் சுருண்டு 243 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்காவுக்கு இந்த வெற்றி உத்வேகத்தை அளிக்கக்கூடிய முக்கியமான வெற்றி.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதல் பேட்டிங்கைக் காட்டிலும் இரண்டாவது பேட்டிங்கின்போது பந்து அதிகம் திரும்புவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் இந்த முடிவை எடுத்ததாக ஷாஹிதி தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் தொடக்க பேட்டர்கள் சீரான தொடக்கத்தைத் தந்தார்கள். முதல் விக்கெட்டுக்கு 8 ஓவர்களில் 41 ரன்கள் சேர்த்தார்கள். 9-வது ஓவரில் கேஷவ் மகாராஜ் அறிமுகப்படுத்தப்பட்டார்.
ஆடுகளம் சுழலுக்கு உதவுவது முதல் பந்திலேயே தெரிந்தது. வெளிப்பக்கமாக கூடுதல் பவுன்ஸுடன் திரும்பிய பந்தைத் தடுத்து விளையாட முயற்சித்து குர்பாஸ் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே கோட்ஸியா பந்தில் ஸ்த்ரானும் ஆட்டமிழந்தார். ஷாஹிதியும் மகாராஜ் பந்தை கட் செய்யப் பார்த்து ஆட்டமிழந்தார். மூன்று ஓவர்களில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்ததால், ரஹ்மத் ஷாவும் அஸ்மதுல்லா ஓமர்ஸாயும் பொறுமை காத்தார்கள்.
முதல் 41 ரன்களை 8 ஓவர்களில் எடுத்த ஆப்கானிஸ்தான், அடுத்த 5 ஓவர்களில் வெறும் 9 ரன்களை மட்டும் எடுத்து 13-வது ஓவரின் முடிவில்தான் 50 ரன்களை எட்டியது. மகாராஜ் பந்தைக் கவனமாகக் கையாண்டார்கள். 20 ஓவர்களில் அந்த அணி 78 ரன்கள் எடுத்தது. 26 ரன்கள் எடுத்திருந்த ரஹ்மத் ஷா இங்கிடி பந்தை டிரைவ் செய்ய முயன்று பேக்வர்ட் பாயிண்ட்டில் கேட்ச் ஆனார். மூன்றாவது முயற்சியில் சிறப்பாக கேட்ச் பிடித்தார் டேவிட் மில்லர். அடுத்து களமிறங்கிய அலிகில், நபி ஆகியோரும் ஜொலிக்கவில்லை. 116 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது ஆப்கானிஸ்தான்.
44 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த அவர், நபி விக்கெட்டுக்குப் பிறகு ரன் வேகத்தை உயர்த்தினார். 28-வது ஓவரிலேயே களமிறங்கியதால் ரஷித் கான் வழக்கத்துக்கு மாறாக தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி ஒத்துழைப்பு தந்தார். ஓமர்ஸாய் 71-வது அரை சதத்தை அடித்தார்.
7-வது விக்கெட்டுக்கு கூட்டணி அமைந்தவுடன், ஷார்ட் பந்து உத்தியை வெளிப்படுத்தத் தொடங்கினார்கள். 44 ரன்கள் சேர்த்த இந்தக் கூட்டணியை ஃபெஹ்லுவாயோ 38-வது ஓவரில் பிரித்தார். ஷார்ட் பந்தை அடிக்கப் பார்த்து 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ரஷித் கான். நூர் அஹமது பவுண்டரிகள் அடித்து விளையாடத் தொடங்கினார். இது ஓமர்ஸாய் மீது இருந்த அழுத்தத்தைத் தணித்தது. 45 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் 198 ரன்கள் எடுத்தது.
இந்தக் கூட்டணியையும் ஷார்ட் பந்து மூலமே பிரித்தார் கோட்ஸியா. 32 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நூர் அஹமது டி காக்கிடம் கேட்ச் ஆனார். டி காக்குக்கு இது ஆறாவது கேட்ச். இந்த விக்கெட்டுக்குப் பிறகு அதிரடிக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 47-வது ஓவரை இங்கிடி வீசினார். ஓவரை பவுண்டரியுடன் தொடங்கி சிக்ஸருடன் நிறைவு செய்தார் ஓமர்ஸாய். இடையில் ஷார்ட் பந்தை விளாசப் பார்த்த முஜீபுக்கு ஃபைன் லெக்கில் சிக்ஸர் கிடைத்தது. இந்த ஓவரில் மட்டும் 20 ரன்கள்.
ஷார்ட் பந்துகளில் மிரட்டி வந்த கோட்ஸியாவுக்கு நான்காவது விக்கெட்டாக முஜீப் விக்கெட் கிடைத்தது. இங்கிடி வீசிய 49-வது ஓவரில் மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்தார் ஓமர்ஸாய். அந்த ஓவரின் முடிவில் அவர் 96 ரன்களில் இருந்தார். ரபாடா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்திலும், மூன்றாவது பந்திலும் நவீன் உல் ஹக் 1 ரன் எடுத்து ஸ்டிரைக்கை ஓமர்ஸாயிடம் ஒப்படைத்தார். ரபாடாவின் சிறப்பான பந்துவீச்சால், நான்கு பந்துகளை எதிர்கொண்ட அவரால் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி பந்தில் நவீன் உல் ஹக் ரன் அவுட் ஆனார்.
உலகக் கோப்பையில் சதமடித்த இரண்டாவது ஆப்கன் வீரர் என்ற பெருமையைப் பெற முடியாமல் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்தார். ஆனால், அணியின் கோணத்தில் பார்த்தால் 116 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தவுடன், ஆப்கானிஸ்தானை 40 ஓவர்களுக்குள் ஆட்டமிழக்காமல் பார்த்துக்கொண்டு அணியை 244 ரன்கள் வரை அழைத்துச் சென்று பந்துவீச்சாளர்களுக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கி தந்தார்.
டெம்பா பவுமா அசௌகரியத்துடன் பேட்டிங் செய்ய வந்து ரன்கள் ஓட சிரமப்பட்டார். இது டி காக்குக்கு அழுத்தம் தந்தது. இரண்டு ரன்கள் ஓட வேண்டிய இடங்களில் ஒரு ரன், வேகமாக ஒரு ரன் எடுக்க வேண்டிய இடங்களில் ரன் ஓடாமல் தவிர்ப்பது என இருந்ததால், டி காக் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்தார். நவீன் உல் ஹக்குக்கு பந்து ஸ்விங் ஆனது. பேட்டின் விளிம்புகளை உரசாமல் சென்ற பந்துகள் விளிம்பில்பட்டு ஃபீல்டர்களிடம் செல்லவில்லை. இடக்கை பேட்டர் டி காக் இருந்ததால் முஜீப்பை நிறுத்திவிட்டு முகமது நபியைக் கொண்டு வந்தார். இது கிட்டத்தட்ட பலன் தந்தது. ஸ்லிப்பில் கேட்ச் வாய்ப்பு செல்ல, ரஹ்மத் கைகளை நகர்த்துவதற்குள் அவரைக் கடந்து பவுண்டரியை அடைந்தது. சிறப்பான தொடக்கத்தை அமைத்துக்கொடுத்த இருவரும் பவர்பிளேயில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்தார்கள்.
முஜீப் பந்தை பவுண்டரிக்கு விரட்ட முயற்சித்து பவுமாவும், நபி பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயற்சித்து டி காக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள். இவர்களது விக்கெட்டுக்குப் பிறகுதான் ரஷித் கான் அறிமுகப்படுத்தப்பட்டார். வான்டர் டசன் - மார்க்ரம் கூட்டணியைக் கட்டமைத்தார்கள். முஜீப், நூர் அஹமது ஓவர்களில் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து ரன் ரேட்டுக்கான நெருக்கடியைத் தணித்துக்கொண்டார்கள். 3-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்த நிலையில், ரஷித் கான் பந்தை விளாச முயற்சித்து 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் மார்க்ரம். சுழற்பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்ளும் கிளாஸெனும் ரஷித் கான் சுழலில் ஆஃப் ஸ்டம்பை இழந்தார்.
தென்னாப்பிரிக்கா நெருக்கடிக்குள்ளாக டசனும், மில்லரும் கவனமாக விளையாடி வந்தார்கள். அதேசமயம், மோசமான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டை 5-ஐ தொடாமல் பார்த்துக்கொண்டார்கள். டனும் அரை சதத்தைக் கடந்தார். ஆப்கானிஸ்தான் விடாமுயற்சியோடு நபியை வைத்து நெருக்கடி கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். இதற்குப் பலனாக நபிக்கு மில்லர் விக்கெட் கிடைத்தது.
மில்லர் விக்கெட்டுக்குப் பிறகு தென்னாப்பிரிக்க பேட்டிங்கில் கவனம் கூடியது. ஃபெஹ்லுவாயோ மிகப் பொறுமையாக விளையாட, ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்கள் ரன் அடிக்க விடாமல் நெருக்கினார்கள். 40 ஓவர்களில் 192 ரன்கள் எடுக்க, கடைசி 10 ஓவர்களில் 53 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. 39-வது ஓவரிலிருந்து 45-வது ஓவர் வரை ஒரு பவுண்டரிகூட இல்லை. இதனால், கடைசி 5 ஓவர்களில் 33 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. நவீன் உல் ஹக் ஓவரில் சிக்ஸர் அடித்தார் ஃபெஹ்லுவாயோ. நூர் அஹமது வீசிய 47-வது ஓவரில் ரிஸ்க் இல்லாமல் 9 ரன்கள் எடுத்தார்கள். கடைசி மூன்று ஓவர்களில் 14 ரன்கள் தேவைப்பட, நவீன் ஓவரில் முதல் மூன்று பந்துகளில் இரு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாசி வெற்றியை உறுதி செய்தார் ஃபெஹ்லுவாயோ.
அடுத்து வர பேட்டர்கள் இல்லை என்றவுடன் சுதாரித்துக்கொண்டு இன்னிங்ஸை கடைசி வரை எடுத்து வந்து வெற்ற கண்டது தென்னாப்பிரிக்கா. லீக் சுற்றை வெற்றியுடன் நிறைவு செய்துள்ள தென்னாப்பிரிக்கா, அரையிறுதிக்குள் மிகுந்த நம்பிக்கையுடன் செல்கிறது.
ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்திருந்தாலும், தென்னாப்பிரிக்காவை எளிதில் வெற்றி பெற அனுமதிக்காமல் கடைசி வரை போராடி நெருக்கடி கொடுத்தார்கள். தவிர, இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் என முன்னாள் சாம்பியன்களை வீழ்த்தி ஒரு கட்டத்தில் அரையிறுதிக்கான போட்டியில் இருந்தார்கள். புள்ளிகள் பட்டியலில் 8 புள்ளிகளுடன் 6-வது இடத்துடன் வெளியேறும் ஆப்கானிஸ்தான் சாம்பியன்ஸ் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளது.