மிட்செல் மார்ஷ் அதிரடி: வங்கதேசத்தை நொறுக்கிய ஆஸ்திரேலியா
மிட்செல் மார்ஷின் அதிரடியால் வெற்றியுடன் அரையிறுதிக்குச் சென்றுள்ளது ஆஸ்திரேலியா. புனேவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
காயம் காரணமாக ஷகிப் அல் ஹசன் உலகக் கோப்பையில் இருந்து விலகியதால் ஷாண்டோ இந்த ஆட்டத்தில் கேப்டனாக செயல்பட்டார். மேலும், தன்ஸிம், ஷோரிஃபுல் ஆகியோருக்குப் பதிலாக முஸ்தஃபிசூர், மெஹதி ஹசன் மற்றும் நசும் அஹமது ஆகியோர் அணியில் இணைந்தனர். ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க், மேக்ஸ்வெல் ஆகியோருக்குப் பதிலாக ஷான் அபாட் மற்றும் ஸ்மித் அணியில் சேர்க்கப்பட்டார்கள்.
ஆடுகளம் தொடக்கத்தில் பேட்டர்களுக்கு சவாலாக இருந்தது. பந்து பவுன்ஸ் ஆகி நின்று வந்ததால் பேட்டர்கள் தடுமாற்றத்துடனேயே விளையாடினார்கள். முதல் ஓவரையே ஹேசில்வுட் மெய்டனாக வீசினார். முதல் 4 ஓவர்களுக்கு ஒரு பவுண்டரி கூட கிடைக்கவில்லை. அதன்பிறகு இறங்கி வந்து அடிக்கத் தொடங்கினார்கள் பேட்டர்கள். இதனால் ரன்களும் வரத் தொடங்கின. அபாட் வீசிய 8-வது ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசினார் லிட்டன் தாஸ்.
10 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் எடுத்தது. 36 ரன்கள் எடுத்த தன்ஸித் 12-வது ஓவரை வீசிய அபாட்டிடமே கேட்ச் ஆனார். ஸாம்பா வீசிய 15-வது ஓவரில் லிட்டன் தாஸின் கேட்சைத் தவறவிட்டார் கம்மின்ஸ். ஆனால் தனது அடுத்த ஓவரிலேயே லிட்டன் தாஸை ஓய்வறைக்கு அனுப்பி வைத்தார் ஸாம்பா.
அதன்பிறகு ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் ரன் கொடுக்காமல் நெருக்கடி கொடுத்தார்கள். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷாண்டோ 45 ரன்கள் எடுத்து, 28-வது ஓவரில் அவசரப்பட்டு ஓடி ரன் அவுட் ஆனார்.
இந்த உலகக் கோப்பையில் நன்றாக விளையாடிய மஹ்மதுல்லா இந்த ஆட்டத்திலும் அதிரடியுடன் தொடங்கினார். மார்ஷ் வீசிய 32-வது ஓவரில் இரு சிக்ஸர்களைப் பறக்கவிட்டார் மஹ்மதுல்லா. 28 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த அவர் 36-வது ஓவரில் ரன் அவுட் ஆனார். லபுஷேனின் முயற்சியைப் பாரட்டியே ஆகவேண்டும்.
மறுபுறம் நிலைத்து விளையாடிய ஹிருதாய் 61 பந்துகளில் தனது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். உலகக் கோப்பையில் ஹிருதாயின் முதல் அரை சதம் இதுவாகும். 40 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது வங்கதேசம். 21 ரன்கள் எடுத்த முஷ்ஃபிகுர், ஸாம்பாவின் சுழலில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதனால் 300 ரன்களை வங்கதேசம் கடக்குமா என சந்தேகம் ஏற்பட்டது. 74 ரன்கள் எடுத்த ஹிருதாயும் 47-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
கடைசி 4 ஓவர்களில் ஒரு பவுண்டரி மட்டுமே வங்கதேசத்துக்குக் கிடைத்தது. இருப்பினும் 49-வது ஓவரில் 300 ரன்களைக் கடந்தது அந்த அணி. கடைசி ஓவரில் மெஹதி ஹசன் மற்றும் நசும் ஆட்டமிழக்க இறுதியில் 306 ரன்கள் எடுத்தது வங்கதேசம்.
இந்த இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலியா 3-வது ஓவரிலேயே டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை இழந்தது. ஆனால் மெஹதி ஹசன் வீசிய அடுத்த ஓவரிலேயே 3 பவுண்டரிகளைப் பறக்கவிட்டார் மார்ஷ். அப்போது தொடங்கிய அதிரடியை அதன்பிறகு வங்கதேச பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா.
மார்ஷ் 37 பந்துகளில் தனது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். 15-வது ஓவரில் 100 ரன்களைக் கடந்தது ஆஸ்திரேலியா. வார்னர் 51 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். ஆனால் அவரால் வெகுநேரம் களத்தில் நீடிக்க முடியவில்லை. 53 ரன்கள் எடுத்து முஸ்தஃபிசூர் வேகத்தில் வீழ்ந்தார். அதன்பிறகு மார்ஷுடன் இணைந்தார் ஸ்மித். இந்தக் கூட்டணி அணியை வெற்றியை நோக்கி நகர்த்தியது.
அதிரடியாக விளையாடிய மார்ஷ் 87 பந்துகளில் சதம் அடித்தார். இந்த உலகக் கோப்பையில் இது அவருடைய இரண்டாவது சதம் ஆகும். மார்ஷ் - ஸ்மித் கூட்டணியைக் கட்டுப்படுத்த பல வியூகங்களை வகுத்தார் ஷாண்டோ. ஆனால் எந்தத் திட்டமும் பலன் கொடுக்கவில்லை. 32-வது ஓவரில் 200 ரன்களைக் கடந்தது ஆஸ்திரேலியா. 117 பந்துகளில் 150 ரன்களைக் கடந்த மார்ஷ் அதன் பின்னரும் அதிரடியைத் தொடர்ந்தார்.
அவருக்கு உறுதுணையாக விளையாடிய ஸ்மித் 55 பந்துகளில் அரை சதம் அடித்தார். மார்ஷின் அதிரடியால் 45-வது ஓவரிலேயே ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் ஸ்மித் 63 ரன்களும் மார்ஷ் 177 ரன்களும் எடுத்தார்கள். 132 பந்துகளை சந்தித்த மார்ஷ், 17 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களை விளாசினார்.
இது ஆஸ்திரேலியாவின் 7-வது வெற்றியாகும். வங்கதேசம் தோல்வியுடன் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.