ஸ்டோக்ஸ், வில்லி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து
இங்கிலாந்து இந்த உலகக் கோப்பையில் தேடி வந்த பேட்டிங் பாட்னர்ஷிப், பந்துவீச்சு பாட்னர்ஷிப் எல்லாம் கடைசி ஆட்டத்தில் கைகூட பாகிஸ்தானை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பையை வெற்றியுடன் நிறைவு செய்திருக்கிறது.
பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதிபெற முதல் பேட்டிங் செய்து 287 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். துரதிருஷ்டவசமாக டாஸ் தோற்றது பாகிஸ்தான். இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு பறிபோனது ஏகதேசம் டாஸில் உறுதியானது.
தொடக்கத்தில் பந்து மிகப் பெரிய அளவில் ஸ்விங் ஆனது. அஃப்ரிடி பந்தை வெளிப்பக்கமாக ஸ்விங் செய்து மிரட்டி நெருக்கடி கொடுத்தார். இவருக்குத் துளியும் உதவாத வகையில் மறுமுனையிலிருந்து நிறைய பவுண்டரிகளை வாரி வழங்கினார் ஹாரிஸ் ராஃப். முதல் மூன்று ஓவர்களில் வைட் மூலம் இரு பவுண்டரிகள் உள்பட மொத்தம் 6 பவுண்டரிகள் கொடுத்து 31 ரன்கள் கொடுத்தார் ராஃப். இவரும் சரியான லெங்த்தில் வீசியபோது பேர்ஸ்டோ திணறினார். இதைத் தொடர்ச்சியாக செய்யத் தவறினார்.
விளைவு, களத்தில் நம்பிக்கை பெற்ற பேட்டர்கள், அஃப்ரிடியின் 4-வது, 5-வது ஓவர்களில் விளாசத் தொடங்கினார்கள். இதனால், பவர் பிளே முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் எடுத்தது.
31 ரன்கள் எடுத்த மலான், இஃப்திகார் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயற்சித்து ரிஸ்வானிடம் கேட்ச் ஆனார். 52 பந்துகளில் அரை சதம் அடித்த பேர்ஸ்டோ, ராஃபின் இரண்டாவது ஸ்பெல்லில் 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இவர்களது விக்கெட்டுக்குப் பிறகு ஜோ ரூட்டும், பென் ஸ்டோக்ஸும் கூட்டணி அமைத்தார்கள். ரூட் அடக்கி வாசிக்க, ஸ்டோக்ஸ் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து பந்துவீச்சாளர்கள் மீது ஆதிக்கம் செலுத்தினார்.
நடு ஓவர்களில் ஷதாப் கான் மீண்டும் விக்கெட் வீழ்த்தி நெருக்கடி கொடுக்க தவறினார். நடு ஓவர்களில் பந்துவீச வந்த அஃப்ரிடி பந்துகளும் பவுண்டரிகளுக்கு பறந்தன.
35-வது ஓவரில் இங்கிலாந்து 200 ரன்களைத் தாண்டியது. ஸ்டோக்ஸும் அரை சதத்தைக் கடந்திருந்தார். சல்மான் வீசிய 36-வது ஓவரில் இரு பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை விளாசினார் ஸ்டோக்ஸ். இங்கிலாந்து பேட்டிங்கில் கியர் மாறியது. ஜோ ரூட்டும் 65 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார்.
40 ஓவர்களில் 240 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அதிரடி ஃபினிஷிங்குக்குக் காத்திருந்தது. 41-வது ஓவரை வீசிய அஃப்ரிடி முதல் பந்தையே சிறப்பான யார்க்கராக வீசி ஸ்டோக்ஸை வீழ்த்தினார். ரூட் - ஸ்டோக்ஸ் இணை 131 பந்துகளில் 132 ரன்கள் சேர்த்தது. தனது அடுத்த ஓவரில் ரூட்டையும் காலி செய்தார் அஃப்ரிடி.
விக்கெட்டுகள் சரிந்தாலும் இங்கிலாந்து பேட்டர்கள் அதிரடி காட்டி வந்தார்கள். பட்லர் 18 பந்துகளில் 27 ரன்கள், புரூக் 17 பந்துகளில் 30 ரன்கள் என அடிக்க 47-வது ஓவரில் இங்கிலாந்து 300 ரன்களைக் கடந்தது. கடைசி சர்வதேச ஆட்டத்தில் களமிறங்கிய டேவிட் வில்லி கடைசி ஓவரில் இரு பவுண்டரிகள், சிக்ஸர்களை பறக்கவிட்டு இங்கிலாந்து உதவினார்.
50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 337 ரன்கள் குவித்தது. புள்ளிகள் பட்டியலில் டாப் -4ல் நுழைந்து அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்ய பாகிஸ்தான் இந்த இலக்கை 6.4 ஓவர்களில் அடைய வேண்டியிருந்தது.
பாகிஸ்தானுக்கு நேர்மாறாக தொடக்கம் அமைந்தது. முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே முழு நீள இன்ஸ்விங் பந்து மூலம் ஷஃபிக்கை ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்த ஓவரில் ஸமானை வீழ்த்தினார். 6.4 ஓவர்களில் பாகிஸ்தான் 2 விக்கெட்டுகளை இழந்து 30 ரன்கள் எடுத்திருந்தது. இதன்மூலம், அரையிறுதிக்குள் நியூசிலாந்து அதிகாரபூர்வமாக நுழைந்தது.
பாபர் ஆஸமும், ரிஸ்வானும் நிதானமாக கூட்டணி அமைத்து 50 ரன்கள் சேர்த்தார்கள். கஸ் அட்கின்சனின் ஷார்ட் பந்தில் பாபர் ஆஸம் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இடக்கை பேட்டர் ஷகீல் இருப்பதால் மொயீன் அலியைக் கொண்டு வந்தார் பட்லர். ஆடுகளத்தில் பந்து திரும்புவதற்கு உதவியும் இருந்தது.
மொயீன் அலிக்கு நெருக்கடி கொடுக்க முயற்சித்து அவரது பந்தில் போல்டானார் ரிஸ்வான். இதன்பிறகு, பாகிஸ்தான் பேட்டர்கள் வரிசையாக நடையைக் கட்டத் தொடங்கினார்கள். சல்மான் மட்டும் 45 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். டேவிட் வில்லி தனது 100-வது விக்கெட்டாக இவரை வீழ்த்தினார். இதன்பிறகு, கடைசியில் ஹாரிஸ் ராஃப் பேட்டை சுழற்றி 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் விளாசினார். இதனால், அணியின் ஸ்கோர் 200-ஐ தாண்டியது. கடைசி விக்கெட்டுக்கு முகமது வாசிமும், ராஃபும் 53 ரன்கள் சேர்த்தார்கள்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் நீடிக்கிறது. சாம்பியன்ஸ் கோப்பைக்குத் தகுதி பெறும் வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது. பாகிஸ்தான் அணி இடையில் தொடர்ச்சியாக 4 ஆட்டங்களிலும், இங்கிலாந்து இடையில் தொடர்ச்சியாக 5 ஆட்டங்களிலும் தோல்வியடைந்தது அவர்களுக்குப் பின்னடைவாக அமைந்தது.