இந்தியாவின் சாதனை சிக்ஸர்களும் பெரிய ஸ்கோர்களும்

ESPNcricinfo staff

ஷுப்மன் கில் - ரோஹித் சர்மா © ICC/Getty Images

நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 410 ரன்கள் குவித்தது. ஸ்ரேயஸ் ஐயர், கேஎல் ராகுல் சதமடித்தார்கள். ரோஹித், ஷுப்மன், கோலி அரை சதமெடுத்தார்கள்.

இந்த வருடம் ஒருநாள் கிரிக்கெட்டில் எக்கச்சக்க ரன்கள் எடுத்து நிறைய சாதனைகள் செய்துள்ளது இந்திய அணி. அவற்றின் தொகுப்பு:

* 2023-ல் 8 முறை 350-க்கும் அதிகமான ரன்களை எடுத்துள்ளது இந்தியா. ஒரு வருடத்தில் வேறெந்த அணியும் இத்தனைமுறை 350 ரன்களை அடித்ததில்லை. 2019-ல் இங்கிலாந்து 7 முறை எடுத்தது.

* ஒருநாள் கிரிக்கெட்டில் 7 முறை 400 ரன்களைத் தொட்டுள்ளது இந்திய அணி. தென்னாப்பிரிக்கா அதிகபட்சமாக 8 முறை எடுத்துள்ளது.

* ஒருநாள் உலகக் கோப்பையில் 2-வது முறையாக 400 ரன்களை எடுத்துள்ளது இந்திய அணி. இதற்கு முன்பு, 2007-ல் பெர்முடாவுக்கு எதிராக 413/5 ரன்கள் எடுத்தது. இதிலும் தென்னாப்பிரிக்காவே முதலிடம். உலகக் கோப்பையில் 3 முறை 400 ரன்களை எடுத்துள்ளது.

* ஒருநாள் இன்னிங்ஸில் மூன்று முறை மட்டும் 5 அல்லது அதற்கும் அதிகமான பேட்டர்கள் 50+ ரன்கள் எடுத்துள்ளார்கள். ஆஸ்திரேலியா இருமுறை, இந்தியா இன்றைய ஆட்டத்திலும்.

* உலகக் கோப்பையில் முதல்முறையாக 5 பேட்டர்கள் 50 ரன்களுக்கும் அதிகமாக எடுத்துள்ளார்கள். இந்தப் பெருமை இந்திய பேட்டர்களுக்குக் கிடைத்துள்ளது.

* 62 பந்துகளில் சதமடித்தார் கேஎல் ராகுல். உலகக் கோப்பையில் விரைவாக சதமடித்த இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றார்.

* ஸ்ரேயஸ் ஐயர் - ராகுல் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்தார்கள். உலகக் கோப்பையில் 4-வது விக்கெட்டுக்கு எடுத்த அதிகபட்ச ரன்கள் இவை.

* 2023-ல் இந்திய பேட்டர்கள் 215 சிக்ஸர்கள் அடித்துள்ளார்கள், 30 ஒருநாள் ஆட்டங்களில். ஒரு வருடத்தில் ஓர் அணி அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் இவை. இதற்கு முன்பு 2019-ல், மே.இ. தீவுகள் அணி 209 சிக்ஸர்கள் அடித்திருந்தது.

* 2023-ல் 60 சிக்ஸர்கள் அடித்துள்ளார் ரோஹித் சர்மா. வேறு எந்த பேட்டரும் ஒரு வருடத்தில் இத்தனை சிக்ஸர்கள் அடித்ததில்லை. 2015-ல் டி வில்லியர்ஸ் 58 சிக்ஸர்கள் அடித்தார்.

* ரோஹித் இந்த வருடம் அடித்த 60 சிக்ஸர்களில் 24 சிக்ஸர்கள் இந்த உலகக் கோப்பையில் அடிக்கப்பட்டவை. 2015 உலகக் கோப்பையில் கிறிஸ் கெயில் அதிகபட்சமாக 26 சிக்ஸர்கள் அடித்திருந்தார்.

* இந்த உலகக் கோப்பையில் 7 ஆட்டங்களில் 50+ ரன்கள் எடுத்துள்ளார் கோலி. இதற்கு முன்பு 2003-ல் சச்சினும் 2019-ல் ஷகிப் அல் ஹசனும் இதேபோல 7 ஆட்டங்களில் 50+ ரன்கள் எடுத்தார்கள்.

Comments