நவம்பர் 14: ஆடம் கில்கிறிஸ்ட் பிறந்தநாள்!
1971
அதிரடி விக்கெட் கீப்பர் பேட்டர் ஆடம் கில்கிறிஸ்டின் பிறந்தநாள் இன்று.
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பேஸ்பால் ஆட்டத்தை கண்முன் காட்டிய முந்தைய தலைமுறை ஜாம்பவான்களில் கில்கிறிஸ்ட் மிக முக்கியமானவர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2001-02-ல் 213 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 204 ரன்கள் விளாசியது, ஆஷஸில் 57 பந்துகளில் சதமடித்தது கில்கிறிஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் முத்திரை பதிக்கக்கூடிய ஆட்டங்கள். டெஸ்டில் 100 சிக்ஸர்களை அடித்த முதல் பேட்டர் இவர்தான்.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க பேட்டராக மேத்யூ ஹேடனுடன் இணைந்து அதிரடியான அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதில் இவர் கில்லி தான்! 2007 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் 104 பந்துகளில் 149 ரன்கள் விளாசி ஆஸ்திரேலிய அணி, உலகக் கோப்பையை தொடர்ந்து மூன்றாவது முறையாக வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார்.
டெஸ்டில் 81.95 ஸ்டிரைக் ரேட், 47.60 சராசரியில் 5,570 ரன்கள் விளாசியுள்ளார். ஒருநாளில் 9,619 ரன்கள் குவித்துள்ளார். விக்கெட் கீப்பிங்கில் 905 விக்கெட் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்து 2-வது இடம் பிடித்துள்ளார்.
2004-05-ல் கில்கிறிஸ்ட் தலைமையிலான ஆஸி. அணி இந்தியாவில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. அதேபோல, ஐபிஎல் போட்டியில் 2009-ல் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி கோப்பையை வென்றது.
1976
ஹேமங் பதானி பிறந்தநாள்!
ஃபிக்ஸிங் சர்ச்சைகளுக்குப் பிறகு கட்டமைக்கப்பட்ட இந்திய அணியில் அறிமுகமான ஹேமங் பதானியின் பிறந்தநாள் இன்று.
இந்திய அணியில் இடம்பிடித்த பதானி, அஜய் ஜடேஜா இடத்தை நிரப்பினார். ஒருநாள் கிரிக்கெட்டில் 40 ஆட்டங்களில் விளையாடிய இவர், 2001-02-ல் புனேவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சதமடித்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் நடுவரிசை பேட்டராக விளையாடிய பதானி, டெஸ்டில் தொடக்க பேட்டராக விளையாடினார். டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை சிறப்பாக அமையாததால், 4 ஆட்டங்களில் விளையாடுவதற்கு மட்டுமே இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
2007-ல் இந்தியன் கிரிக்கெட் போட்டியில் ஒப்பந்தமாகி சென்னை சூப்பர் ஸ்டார்ஸுக்காக விளையாடினார். இதனால், பிசிசிஐ விதித்த ஓராண்டு தடையில் இருந்தார். 2009-ல் இதிலிருந்து விலகிய பதானி, 2009-10 விஜய் ஹசாரே கோப்பையில் ராஜஸ்தானுக்காக விளையாடினார். ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கான ஒப்பந்தத்தைப் பெற்றார்.
முதல் தர கிரிக்கெட்டில் தமிழ்நாடு, விதர்பா அணிகளுக்காக விளையாடியுள்ள பதானி, 45.97 சராசரியில் 6,758 ரன்கள் குவித்துள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 4,212 ரன்கள் குவித்துள்ளார்.
ஓய்வுக்குப் பிறகு ஐபிஎல், டிஎன்பிஎல் உள்ளிட்ட போட்டிகளில் பயிற்சியாளராக உள்ளார்.
2021
ஆஸ்திரேலிய அணி டி20 உலகக் கோப்பையை முதல்முறையாக வென்ற நாள் இன்று.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து, கேன் வில்லியம்சனின் அதிரடி பேட்டிங்கால் 172 ரன்கள் எடுத்தது. வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார். இந்த உலகக் கோப்பை முழுவதும் இரண்டாவது பேட்டிங் செய்த அணிகளே தொடர்ந்து வெற்றி பெற்று வந்தன. இதிலும் அதுதான் நடந்தது.
வார்னர், மார்ஷ் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி அரை சதம் அடிக்க, 19-வது ஓவரிலேயே ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
50 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலியா டி20 உலகக் கோப்பையை வென்றது இதுவே முதல்முறை.