இரண்டாம் அரையிறுதி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனை படைக்குமா தென்னாப்பிரிக்கா?
உலகக் கோப்பை வரலாற்றில் தென்னாப்பிரிக்காவின் பயணம் சோகங்கள் மிகுந்ததாகவே இருந்துள்ளது. இதனைத் திருத்தி எழுத மற்றொரு வாய்ப்பு அந்த அணிக்குக் கிடைத்துள்ளது. 2023 உலகக் கோப்பையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய தென்னாப்பிரிக்கா புள்ளிகள் பட்டியலில் இரண்டாமிடம் பிடித்து அரையிறுதிக்கும் முன்னேறியது.
வியாழக்கிழமை நடைபெறும் இரண்டாவது அரையிறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது தென்னாப்பிரிக்கா. இந்த ஆட்டம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த உலகக் கோப்பையில் இதுவரை விளையாடிய 9 ஆட்டங்களில் 7-ல் வெற்றிபெற்றுள்ளது தென்னாப்பிரிக்கா.
ஆஸ்திரேலியா தனது முதல் இரு ஆட்டங்களில் தோல்வியடைந்தாலும் அதன்பிறகு தொடர்ச்சியாக 7 ஆட்டங்களில் வெற்றிபெற்று அரையிறுதியை உறுதி செய்தது. தென்னாப்பிரிக்கா, 1992 முதல் உலகக் கோப்பையில் பங்கேற்றாலும் இதுவரை இறுதிச்சுற்றுக்கு அந்த அணி முன்னேறியதில்லை. நாளைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, இந்த சோதனைப் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா தென்னாப்பிரிக்கா? இரு அணிகளிடம் உள்ள பலம் மற்றும் பலவீனம் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
தென்னாப்பிரிக்க அணியின் பலமான பேட்டிங் வரிசை, லீக் ஆட்டங்களில் சில பிரம்மாண்ட வெற்றியை அந்த அணிக்குப் பெற்றுக்கொடுத்தது. முதலில் பேட்டிங் செய்த 5 ஆட்டங்களில் 300-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளது தென்னாப்பிரிக்கா. டி காக், வேன் டர் டசன், மார்க்ரம், கிளாஸன் ஆகியோர் இந்த உலகக் கோப்பையில் தங்களது அதிரடியை நிரூபித்துள்ளார்கள். இந்த உலகக் கோப்பையில் அதிக ரன் குவித்தவர்களின் பட்டியலில் 591 ரன்களுடன் டி காக் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
ஆனால், இதெல்லாம் முதலில் பேட்டிங் செய்யும்போது மட்டுமே. இலக்கைத் துரத்தும்போது தென்னாப்பிரிக்க பேட்டர்கள் விரைவாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்துவிடுகிறார்கள். ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டாவதாக பேட்டிங் செய்து வெற்றிபெற்றாலும் அதற்கு அந்த அணியின் கீழ்வரிசை பேட்டர்கள் போராட வேண்டியிருந்தது. ஆகவே, இலக்கைத் துரத்த தென்னாப்பிரிக்கா ஒருபோதும் விரும்பாது. இதனை தனக்குச் சாதகமாக ஆஸ்திரேலிய அணி பயன்படுத்திக்கொள்ள முயலும். இதனால், இந்த ஆட்டத்தில் டாஸ் முக்கியக் காரணியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பவர்பிளேவில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அணிகளின் பட்டியலில் தென்னாப்பிரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கிடி, யான்சென் மற்றும் கூட்ஸியா ஆகியோர் வேகப்பந்துவீச்சுப் பொறுப்பை நிறைவாகவே செய்துவருகின்றனர். கேஷவ் மஹாராஜ் சுழற்பந்துவீச்சைக் கவனித்துக்கொள்கிறார். ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்து ஷம்ஸிக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. சென்னையில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஷம்ஸி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதை மறந்துவிட முடியாது.
கொல்கத்தாவில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளம் ஒத்துழைக்கும் என்பதால் ஷம்ஸிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். தேவைப்படும்பட்சத்தில் மார்க்ரம் கூடுதல் சுழற்பந்துவீச்சாளராகவும் இருப்பார் என்பதால் தென்னாப்பிரிக்க அணியின் ஆதிக்கம் அதிகமிருக்கும். பவர்பிளேவில் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், எதிரணியை ஆட்டமிழக்கச் செய்ய சற்றே போராடுகிறார்கள்.
வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் மஹ்மதுல்லா சதம் அடித்ததை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தத் தவறை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மீண்டும் செய்தால் அதற்கு மிகப்பெரிய விலையை தென்னாப்பிரிக்கா கொடுக்க வேண்டியிருக்கும். ஆஸ்திரேலியாவில் நடுவரிசையில் மேக்ஸ்வெல் கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்கோரை உயர்த்தக் கூடியவர். கீழ்வரிசை பேட்டர்களும் பெரிய ஷாட்களை அடிக்கக் கூடியவர்கள் என்பதால் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களுக்கு நிச்சயம் சவால் காத்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை டிராவிஸ் ஹெட்டின் வருகை அந்த அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. இந்த உலகக் கோப்பையில் ஓர் ஆட்டத்தில் அதிகபட்ச ரன்களை குவித்தவர்களின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் மேக்ஸ்வெல் (201), மார்ஷ் (177) மற்றும் வார்னர் (163) ஆகிய மூன்று ஆஸி. பேட்டர்கள் உள்ளார்கள். இப்பட்டியலில் டி காக் (174) மூன்றாம் இடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலிய அணியில் ஐந்தாவது பந்துவீச்சாளர் யார் என்ற கேள்விக்கு நிரந்தர விடை கிடைக்கவில்லை. மேக்ஸ்வெல், மார்ஷ், ஸ்டாய்னிஸ் ஆகியோர் சூழ்நிலைக்குத் தகுந்தபடி பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். கொல்கத்தாவில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும் மேலும், டி காக் ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எதிராக பலமுறை விக்கெட்டைப் பறிகொடுத்துள்ளார் என்பதால் மேக்ஸ்வெல், ஹெட்டுக்கு கூடுதல் ஓவர்கள் வீச வாய்ப்பு கிடைக்கும் என நம்பலாம்.
இந்த ஆட்டம் நடைபெறும் நாளான வியாழனன்று மழைபெய்ய 50 சதவீதம் வாய்ப்பு உள்ளது. ஆகவே, டாஸ் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்கா (உத்தேச அணி)
டெம்பா பவுமா (கேப்டன்), ஜெரால்டு கூட்ஸியா, குயிண்டன் டி காக், மார்கோ யான்சென், ஹென்ரிச் கிளாஸன், கேஷவ் மஹாராஜ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, ககிசோ ரபாடா, வேன் டர் டசன்.
ஆஸ்திரேலியா
பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா.
உலகக் கோப்பைக்கு முன்னர் இரு அணிகள் மோதிய ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்கா 3 - 2 என்ற கணக்கில் கைப்பற்றியது. உலகக் கோப்பை லீக் ஆட்டத்திலும் ஆஸி.யை 134 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா. அந்த அணியின் வெற்றிப் பயணம் அரை இறுதியிலும் தொடருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.