இறுதிச்சுற்றில் ஆஸி.: போராடித் தோற்ற தென்னாப்பிரிக்கா

ESPNcricinfo staff

ஆஸ்திரேலிய அணி © AFP/Getty Images

நாக் அவுட் சுற்றில் தென்னாப்பிரிக்காவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது ஆஸ்திரேலியா. இலக்கைத் துரத்துவதில் இந்த உலகக் கோப்பையில் தள்ளாடிய தென்னாப்பிரிக்கா, இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்தும் திணறியது. அதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர்கள் ஹேசில்வுட்டும் ஸ்டார்க்கும்.

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் ஆரம்பம் முதலே தென்னாப்பிரிக்கா தடுமாறியது. ஸ்டார்க் தனது முதல் ஓவரிலேயே உள்ளே வெளியே என லைனை மாற்றினார். இந்த வலையில் விழுந்த பவுமா உள் பக்கமாக வந்த லெங்த் பந்தை தடுக்க முயன்று கீப்பரிடம் கேட்ச் ஆனார். அப்போது தொடங்கியது தென்னாப்பிரிக்காவின் வீழ்ச்சி.

தென்னாப்பிரிக்காவுக்கு முதல் 5 ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட கிடைக்கவில்லை. சிங்கிள்களும் கிடைக்காமல் 8 ரன்களில் தென்னாப்பிரிக்கா இருந்த நிலையில் பதற்றத்துடனேயே டி காக் விளையாடினார். அவருக்கு பேட்டின் விளிம்பில் மட்டுமே பந்து பட்டது. இதனைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார் ஹேசில்வுட். அவர் வீசிய 6-வது ஓவரில் லெங்த் பந்தை நேராக தூக்கி அடிக்க முயன்றார் டி காக்.

மிட் ஆனில் நின்ற கம்மின்ஸ் பின்புறமாக ஓடி கச்சிதமாக கேட்சைப் பிடித்தார். இதனால் 8 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்தது தென்னாப்பிரிக்கா. 9-வது ஓவரில் தான் முதல் பவுண்டரி கிடைத்தது அந்த அணிக்கு. 10 ஓவர்கள் முடிவில் 18 ரன்கள் எடுத்தது தென்னாப்பிரிக்கா.

மார்க்ரம் ஆஃப் பக்கம் வீசப்பட்ட பந்துகளை கட் செய்து விளையாட முயற்சித்தார். இதனால் 11-வது ஓவரை வீசிய ஸ்டார்க், ஆஃப் பக்கம் ரூம் கொடுத்து வீச, பாய்ண்டில் நின்ற வார்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் மார்க்ரம். தென்னாப்பிரிக்காவின் முதல் மூன்று பேட்டர்களும் ஒற்றை இலக்கத்தில் விக்கெட்டைப் பறிகொடுக்க கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாத்துடன் களத்துக்கு வந்தார் கிளாஸன்.

ஆனால் அடுத்த ஓவரிலேயே வேன் டர் டசனை ஓய்வறைக்கு அனுப்பிவைத்தார் ஹேசில்வுட். 14-வது ஓவரில் ஆளுக்கொரு பவுண்டரிகளை அடித்தார்கள் கிளாஸனும் மில்லரும். மழை காரணமாக ஆட்டம் 40 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது. அதன்பிறகு இவரும் நிதானமாக ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டார்கள். 17-வது ஓவரில் 50 ரன்களைக் கடந்தது தென்னாப்பிரிக்கா.

ஆடம் ஸாம்பாவைக் குறிவைத்து இருவரும் அடிக்கத் தொடங்கினார்கள். 27-வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்டார் கிளாஸன். அடுத்த ஓவரில் 100 ரன்களைக் கடந்தது தென்னாப்பிரிக்கா.

31-வது ஓவரில் டிராவிஸ் ஹெட்டிடம் பந்தைக் கொடுத்தார் கம்மின்ஸ். முதலிரண்டு பந்துகளில் கிளாஸன் பவுண்டரிகளைப் பறக்கவிட்டார். 47 ரன்கள் எடுத்த கிளாஸனை அதே ஓவரில் போல்ட் செய்து, 95 ரன்கள் கூட்டணியைப் பிரித்தார் ஹெட். கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடக்கூடிய யான்சென் அடுத்தப் பந்திலேயே ஆட்டமிழந்து தென்னாப்பிரிக்க ரசிகர்களின் தலையில் இடியை இறக்கினார்.

அதன்பிறகு கூட்ஸியாவுடன் சேர்ந்து ரன்களைச் சேர்த்தார் மில்லர். இவர்களது கூட்டணி 76 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தது. 44-வது ஓவரில் கம்மின்ஸ் வீசிய ஷார்ட் பந்தை அடிக்க முயன்றார் கூட்ஸியா. பந்து பேட்டுக்கு மிக அருகே கடந்து கீப்பரிடம் சென்றது. நடுவரும் அவுட் கொடுக்கவே ரெவ்யூ கூட எடுக்காமல் கூட்ஸியா வெளியேறினார். பந்து தோளில் பட்டுச் சென்றது பின்னர் தான் தெரியவந்தது.

ஸ்டார்க் வீசிய முழு நீளப்பந்தை பெரிய ஷாட்டுக்கு முயன்று லாங் ஆஃபில் கேட்ச் ஆனார் மஹாராஜ். இதெல்லாம் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க தவறான பந்துகளைத் தண்டித்து வந்த மில்லர் 48-வது ஓவரில் சிக்ஸர் அடித்து தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். இதன்மூலம், நாக் அவுட் சுற்றில் சதம் அடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் எனும் பெருமையையும் பெற்றார் மில்லர். 101 ரன்கள் எடுத்த மில்லர் அதே ஓவரில் குறைவேகப் பந்தை சிக்ஸர் அடிக்க முயன்று டீப் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் ஆனார்.

49-வது ஓவரில் சிக்ஸர் அடித்த ரபாடா. கம்மின்ஸ் வீசிய கடைசி ஓவரில் நேராக சிக்ஸர் அடிக்க முயன்று லாங் ஆனில் கேட்ச் ஆனார். இதனால் 212 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா ஆட்டமிழந்தது. ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகளையும் ஹேசில்வுட் மற்றும் ஹெட் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

இந்த குறைவான இலக்கை வைத்து ஆஸ்திரேலியாவைக் கட்டுப்படுத்த தென்னாப்பிரிக்காவுக்கு பவர்பிளேவில் விக்கெட்டுகள் தேவைப்பட்டன. ஆடுகளத்தில் முதல் இன்னிங்ஸில் இருந்த அளவு இரண்டாம் இன்னிங்ஸில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் பேட்டின் விளிம்புகளில் பந்தை வாங்கினார்கள் வார்னரும் டிராவிஸ் ஹெட்டும்.

வார்னருக்கு ஸ்டம்ப் லைனிலும் ஹெட்டுக்கு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேயும் வீச முயற்சித்தார்கள். ஆனால், யான்சென் லைனைத் தவறவிட்டு வைட்களை வாரி வழங்கினார். அவருடைய 5-வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் சென்றது. ரபாடாவின் அடுத்த ஓவரில் 3 சிக்ஸர்கள் பறந்தன. இதனால் 6 ஓவர்கள் முடிவில் 60 ரன்களை எடுத்தது ஆஸ்திரேலியா.

ஆனால் ஆட்டத்தை மாற்றிய 7-வது ஓவரை வீசினார் மார்க்ரம். 29 ரன்கள் எடுத்த வார்னரை முதல் பந்திலேயே போல்ட் செய்தார் அவர். முதல் ரன்னுக்கான தேடலில் இருந்த மிட்செல் மார்ஷ் அடுத்த ஓவரிலேயே வேன் டர் டசனின் பிரம்மிக்க வைக்கும் கேட்சால் ஆட்டமிழந்தார். 10 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா.

தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவின் ஃபீல்டிங் சுமார் ரகமாகவே இருந்தது. கூட்ஸியாவின் முதல் ஓவரில் ஹெட்டின் கேட்ச் வாய்ப்பைத் தவறவிட்டார் மாற்று ஃபீல்டராக உள்ளே வந்த ரீஸா ஹென்றிக்ஸ். லெங்த் பந்தை நேராக அடிக்க, அதிவேகத்தில் வந்த பந்தை கூட்ஸியால் பிடிக்க முடியாமல் போனது. அதே ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரியை விளாசி 40 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார் டிராவிஸ் ஹெட். 14-வது ஓவரில் 100 ரன்களைக் கடந்தது ஆஸ்திரேலியா.

தென்னாப்பிரிக்காவின் துருப்புச்சீட்டான மஹாராஜ் தனது முதல் பந்திலேயே டிராவிஸ் ஹெட்டை போல்ட் செய்து அசத்தினார். 48 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் எடுத்தார் ஹெட். அந்த ஓவர் தொடங்கி 5 ஓவர்களுக்கு பவுண்டரியே வரவில்லை. ஷம்ஸி வீசிய 16-வது ஓவரில் எல்பிடபிள்யூ-வில் இருந்து தப்பிய லபுஷேன், 22-வது ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

சில்லி பாய்ண்ட், லெக் கல்லி, ஸ்லிப் என அச்சுறுத்தும் வகையில் ஃபீல்டர்களை நிறுத்தி நெருக்கடி கொடுத்தார் பவுமா. இதன் பலனாக ஷம்ஸியின் அடுத்த ஓவரில் மேக்ஸ்வெல் போல்ட் ஆக ரசிகர்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது. அதன்பிறகு ஸ்மித் - இங்லிஸ் கூட்டணி பொறுமையாக விளையாடி சிங்கிள்களாக எடுத்தார்கள். இதன்மூலம் அங்குலம் அங்குலமாக ஆஸ்திரேலியா வெற்றியை நோக்கி முன்னேறியது. 30 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா.

இந்தக் கூட்டணி 39 ரன்கள் எடுத்தது. 62 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த ஸ்மித் 34-வது ஓவரில் கூட்ஸியாவின் கிராஸ் ஸீம் பந்தை புல் ஷாட் அடிக்க முயன்று விக்கெட்டைப் பறிகொடுத்தார். தென்னாப்பிரிக்காவுக்கு முதல் விக்கெட்டை எடுத்துக்கொடுத்த மார்க்ரமிற்கு நடு ஓவர்களில் தாமதமாகவே வாய்ப்பு கிடைத்தது.

49 பந்துகளில் 28 ரன்கள் எடுத்த இங்லிஸை தனது துல்லியமான யார்க்கரில் போல்ட் செய்தார் கூட்ஸியா. 42-வது ஓவரில் 200 ரன்களைக் கடந்தது ஆஸ்திரேலியா. 45-வது ஓவரில் கம்மின்ஸின் கேட்சைத் தவறவிட்டார் டி காக். தேவைப்படும் ரன்கள் ஒற்றை இலக்கத்துக்கு வந்த பின்னரும் வெற்றிக்காக ஆஸ்திரேலியா 21 பந்துகளுக்கு காத்திருக்க வேண்டியிருந்தது. அந்த அளவுக்கு தென்னாப்பிரிக்கா நெருக்கடி கொடுத்தது. இருப்பினும், கடைசி நேரத்தில் ஸ்டார்க் - கம்மின்ஸ் கூட்டணி நிதனமாக விளையாடி 48-வது ஓவரில் வெற்றியை உறுதி செய்தது. டிராவிஸ் ஹெட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இதன்மூலம் ஆஸ்திரேலியா 8-வது முறையாக உலகக் கோப்பை இறுதிச் சுற்றுக்குத் தேர்வானது. உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்காவின் காத்திருப்பு இன்னும் தொடர்கிறது. நவம்பர் 19 அன்று அஹமதாபாதில் நடைபெறும் இறுதிச் சுற்றில் இந்தியாவை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலியா. 2003 உலகக் கோப்பை இறுதிச் சுற்று தோல்விக்குப் பழி தீர்க்குமா இந்தியா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments