நவம்பர் 17: ஆரோன் ஃபிஞ்ச் பிறந்தநாள்!
ஆஸ்திரேலிய அணிக்கு டி20 உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்த ஆரோன் ஃபிஞ்ச், தனது 37-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
வெள்ளைப் பந்து போட்டிகளில் பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர் ஆரோன் ஃபிஞ்ச். சர்வதேச டி20-யில் ஓர் ஆட்டத்தில் அதிகபட்ச ரன்களைக் குவித்தவர்களின் பட்டியலில் முதல் மற்றும் மூன்றாவது இடம் ஆரோன் ஃபிஞ்சுக்குத்தான். 2018-ல் ஜிம்பாப்வேவிற்கு எதிராக 172 ரன்களும் 2013-ல் இங்கிலாந்துக்கு எதிராக 156 ரன்களும் குவித்தார்.
2017 ஜூன் முதல் 2018 ஜுன் வரையில் 14 ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்ற ஃபிஞ்ச் 4 சதங்கள் மற்றும் 3 அரை சதங்களுடன் 781 ரன்கள் சேர்த்தார். 2018-ல் பந்தைச் சேதப்படுத்தியதாக ஸ்மித்திற்கு தடை விதிக்கப்பட்டபோது ஆரோன் ஃபிஞ்சிடம் டி20 மற்றும் ஒருநாள் கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டது.
93 ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்ற பிறகுதான் ஆரோன் ஃபிஞ்சிற்கு டெஸ்டில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. குறைந்த ஓவர் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய ஃபிஞ்ச், மொத்தமே 5 டெஸ்டுகளில் மட்டுமே பங்கேற்றுள்ளார். 2019 ஒருநாள் உலகக் கோப்பையில் இரண்டு சதங்கள் மற்றும் 3 அரை சதங்களை விளாசினார். அந்த உலகக் கோப்பையில் இவருடைய தலைமையிலான ஆஸி. அணி அரையிறுதிக்கு முன்னேறியது. 2021-ல் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி டி20 உலகக் கோப்பையை முதல்முறையாகக் கைப்பற்றியது.
யூசுஃப் பதான் பிறந்தநாள்!
இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான யூசுஃப் பதான் இன்று தனது 41-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
ஐபிஎல் போட்டியின் முதல் பருவத்தில் 4 அரை சதங்கள் உள்பட 435 ரன்கள் குவித்து ராஜஸ்தான் அணி முதல் ஐபிஎல் கோப்பையை வெல்ல உதவினார். இறுதிச் சுற்றில் ஆட்ட நாயகன் விருதும் வென்றார். இதன்மூலம் இந்தியாவுக்கான ஒருநாள் போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
2010-ல் பெங்களூரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் 96 பந்துகளில் 123 ரன்கள் குவித்ததோடு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். பதானின் இந்த அதிரடியால் 315 என்கிற கடினமான இலக்கை வெற்றிகரமாகத் துரத்தியது இந்திய அணி. இதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவிலும் 68 பந்துகளில் சதம் விளாசினார். 2010 துலீப் கோப்பை இறுதிச் சுற்றில் 190 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்து மேற்கு மண்டலத்தின் சாதனை வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார்.
2011 ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 2.1 மில்லியன் டாலர்களுக்கு (ரூ. 9.4 கோடி) பதானைத் தேர்வு செய்தது. அந்த அணியில் ஆறு வருடங்கள் விளையாடி இருமுறை ஐபிஎல் கோப்பைகளை வெல்ல உதவினார். 2010 ஐபிஎல்-லில் மும்பைக்கு எதிராக 37 பந்துகளில் சதமடித்தும் 2014 ஐபிஎல்-லில் 15 பந்துகளில் அரை சதமடித்தும் சாதனை நிகழ்த்தினார். 2018, 2019-ல் சன்ரைசர்ஸ் அணிக்காகவும் விளையாடினார்.
2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பைகளை இந்திய அணி வென்றபோது அவற்றில் யூசுப் பதானும் இடம்பெற்றிருந்தார். 2007 டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றிலும் 2011 உலகக் கோப்பையில் 6 ஆட்டங்களிலும் விளையாடினார்.
இந்தியாவுக்காக 2007 முதல் 2012 வரை 57 ஒருநாள், 22 டி20 ஆட்டங்களில் யூசுப் பதான் விளையாடியுள்ளார். 2021-ல் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். அதன் பிறகு டி20 லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
கில்கிறிஸ்ட்டின் சிக்ஸர்கள் சாதனை
2007-ல் இதே நாளில் தான் டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக 100 சிக்ஸர்களை அடித்த வீரர் எனும் பெருமையைப் பெற்றார் ஆஸ்திரேலியாவின் கில் கிறிஸ்ட்.
ஹோபார்ட்டில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் முத்தையா முரளீதரன் பந்தில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாசி இந்தச் சாதனையை கில்கிறிஸ்ட் படைத்தார். இது அவருடைய 92-வது டெஸ்ட் ஆகும். அதன்பிறகு 4 டெஸ்டுகளில் பங்கேற்ற கில்கிறிஸ்ட் அவற்றில் ஒரு சிக்ஸரைக் கூட அடிக்கவில்லை.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை அடித்தவர்களின் பட்டியலில் 100 சிக்ஸர்களுடன் கில்கிறிஸ்ட் மூன்றாம் இடத்தில் உள்ளார். 124 சிக்ஸர்களுடன் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்திலும் 107 சிக்ஸர்களுடன் பிரெண்டன் மெக்குல்லம் இரண்டாவது இடத்திலும் உள்ளார்கள்.