நவம்பர் 21: ஜஸ்டின் லேங்கர் பிறந்தநாள்!
ஆஸி. அணியின் மகத்தான டெஸ்ட் பேட்டர் ஜஸ்டின் லேங்கர் தனது 52-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
22 வயதில் ஆஸி. டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார் லேங்கர். இயன் பிஷப்பின் பந்தால் தலைக்கவசத்தில் தாக்கப்பட்டாலும் முதல் டெஸ்டில் அரை சதமடித்தார். இதுபோல தன் டெஸ்ட் வாழ்க்கையில் பலமுறை பவுன்சர் பந்துகளால் தலைக்கவசத்தில் அடி வாங்கியுள்ளார்.
2001 வரை 3-வது இடத்தில் விளையாடிய லேங்கர், மைக்கேல் ஸ்லேடரின் ஓய்வுக்குப் பிறகு ஆஸி. டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக அசத்தினார். பிறகு லேங்கரும் மேத்யூ ஹேடனும் ஆஸி. அணியின் மகத்தான டெஸ்ட் ஜோடியாகத் திகழ்ந்தார்கள். லேங்கரும் ஹேடனும் 64 டெஸ்டுகளில் 5655 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் எடுத்த தொடக்க வீரர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார்கள்.
டெஸ்டில் 3 இரட்டைச் சதங்கள் எடுத்துள்ளார். 2005 ஆஷஸில் ஆஸி. அணி தோற்றபோது, அதிக ரன்கள் எடுத்தார் லேங்கர். அதற்கடுத்த வருடம், 100 டெஸ்டுகளை விளையாடிய 10-வது ஆஸி. வீரர் என்கிற பெருமையைப் பெற்றார்.
2007 ஜனவரியில் ஆஷஸ் தொடரை 5-0 என ஆஸி. அணி வென்றபோது ஷேன் வார்ன், மெக்ராத், லேங்கர் ஆகிய மூன்று ஜாம்பவான்களும் ஒரே நாளில் டெஸ்டிலிருந்து விடைபெற்றார்கள். 86 வருடங்களில் ஆஷஸ் தொடரை 5-0 என ஆஸி. அணி முழுமையாக வென்றதும் அப்போதுதான்.
105 டெஸ்டுகளில் 23 சதங்களுடன் 7696 ரன்கள் எடுத்துள்ளார். தேர்வாளர்களால் டெஸ்ட் வீரராகப் பார்க்கப்பட்டதால் ஒருநாள் கிரிக்கெட்டில் 8 ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளார். 2001-ல் விஸ்டனின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்றார்.
பந்தைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆஸி. அணி சிக்கித் தவித்தபோது அதன் பயிற்சியாளராகப் பதவியேற்றார் லேங்கர். இவருடைய கண்காணிப்பில் ஆஸி. அணி 2021 டி20 உலகக் கோப்பையை வென்றது. தற்போது ஐபிஎல் போட்டியில் லக்னெள அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.