நவம்பர் 23: கேரி கிறிஸ்டன் பிறந்தநாள்

ESPNcricinfo staff

கேரி கிறிஸ்டன் © AFP

கேரி கிறிஸ்டன் பிறந்தநாள்!

2011-ல் இந்திய அணிக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்தவர்களில் முக்கியமானவரான கேரி கிறிஸ்டன் தனது 56-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

1993-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் கிறிஸ்டன் அறிமுகமானார். அதிரடித் தொடக்க ஆட்டக்காரரான கிறிஸ்டன் தென்னாப்பிரிக்காவுக்காக 101 டெஸ்டுகளில் 7289 ரன்களும் 185 ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்று 6798 ரன்களையும் எடுத்துள்ளார். டெஸ்டில் 5000 ரன்களைக் கடந்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் கிறிஸ்டன் தான்.

ஓய்வுக்குப் பிறகு வெற்றிகரமான பயிற்சியாளராக அறியப்படுபவர் கிறிஸ்டன். 2007-ல் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவருடைய பயிற்சியின் கீழ் தான் முதன்முறையாக டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தது இந்தியா. தோனி தலைமையிலான இந்திய அணி 2011 உலகக் கோப்பையை வென்றதில் கிறிஸ்டனின் பங்களிப்பும் முக்கியமானது. ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியின் பயிற்சியாளராக கிறிஸ்டன் செயல்பட்டு வருகிறார். இவருடைய பயிற்சியின் கீழ் பங்கேற்ற முதல் ஐபிஎல் போட்டியிலேயே சாம்பியன் பட்டத்தை வென்றது குஜராத் அணி.

நவ்தீப் சைனி பிறந்தநாள்!

நவ்தீப் சைனி © Cricket Australia via Getty Images

இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளரான நவ்தீப் சைனி இன்று தனது 31-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

2017-18 ரஞ்சிக் கோப்பையில் தில்லி அணிக்காக 34 விக்கெட்டுகளை வீழ்த்திய அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் சைனி. இதனால் 2019-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்தியாவுக்காக 2 டெஸ்ட், 8 ஒருநாள் மற்றும் 11 டி20 ஆட்டங்களில் பங்கேற்றுள்ள சைனி, 23 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 5 ஐபிஎல் பருவங்களில் விளையாடியுள்ள சைனி 32 ஆட்டங்களில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பும்ரா, சிராஜ், ஷமி என இந்திய வேகப்பந்துவீச்சுப் படை வலுவானதாக இருப்பதால் தனது வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார் சைனி.

Comments