நவ்தீப் சைனி திருமணம்: குவியும் வாழ்த்துகள்

ESPNcricinfo staff

நவ்தீப் சைனி © BCCI

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான நவ்தீப் சைனி தனது நீண்ட நாள் தோழியான ஸ்வாதி அஸ்தானாவை மணந்துள்ளார். இதனையடுத்து கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இந்தத் தம்பதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

ஹரியானாவைப் பூர்வீகமாகக் கொண்ட சைனி, 2017-18 ரஞ்சிக் கோப்பையில் தில்லி அணிக்காக 34 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். இதனால் 2019-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 2021 ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் சைனிக்கு சிறப்பானதாக அமைந்தது. சமீபத்தில் நடைபெற்ற இரானி கோப்பை இறுதிச் சுற்றில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி கோப்பையைக் கைப்பற்ற சைனி முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார்.

இந்தியாவுக்காக 2 டெஸ்ட், 8 ஒருநாள் மற்றும் 11 டி20 ஆட்டங்களில் பங்கேற்றுள்ள சைனி, 23 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 5 ஐபிஎல் பருவங்களில் விளையாடியுள்ள சைனி 32 ஆட்டங்களில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில், தனது நீண்ட நாள் தோழியான ஸ்வாதி அஸ்தானாவைக் கரம் பிடித்துள்ளார் சைனி. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: உன்னோடு இருக்கும் ஒவ்வொரு நாளும் அன்பின் நாளாகும். இன்று, நாங்கள் என்றென்றும் ஒன்றாக இருப்பதற்கான முடிவை எடுத்துள்ளோம். எங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்க உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தையும் அன்பையும் எதிர்நோக்குகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, முஹமது சிராஜ், உம்ரான் மாலிக், சஹால், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட வீரர்கள் மற்றும் ரசிகர்கள் நவ்தீப் சைனி - ஸ்வாதி அஸ்தானா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

Comments