ரசிகர்கள், பார்வையாளர்கள் எண்ணிக்கையில் சாதனை படைத்த 2023 உலகக் கோப்பை
2023 உலகக் கோப்பை சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் 6-வது முறையாக ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.
இந்தியாவில் நடைபெற்ற இந்த உலகக் கோப்பை, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பில் அதிகம் பார்வையாளர்களைக் கொண்டு சாதனை படைத்துள்ளது. ரசிகர்கள் மைதானத்துக்கு வந்து ஆட்டங்களை நேரில் பார்த்து ரசித்ததிலும் இந்த உலகக் கோப்பை சாதனை படைத்துள்ளது.
2023 உலகக் கோப்பையை 12,50,307 ரசிகர்கள் மைதானத்தில் நேரில் கண்டு ரசித்ததாக ஐசிசி அறிவித்துள்ளது. 2015-ல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையை 10,16,420 ரசிகர்கள் மைதானத்தில் நேரில் கண்டு ரசித்ததே சாதனையாக இருந்தது. இங்கிலாந்தில் நடைபெற்ற 2019 உலகக் கோப்பையை 7,52,000 ரசிகர்கள் மைதானத்தில் நேரில் கண்டு ரசித்தார்கள். இது மூன்றாவது இடத்தில் உள்ளது.
உலகக் கோப்பை நடைபெற்ற ஆறு வாரங்களில் இந்தியாவில் தொலைக்காட்சி பார்வையாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்ததாக டிஸ்னி ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. 51.8 கோடி மக்கள் உலகக் கோப்பையை தொலைக்காட்சியில் பார்த்துள்ளார்கள். பார்க் (Broadcast Audience Research Council - BARC) அளித்த தகவலின்படி, மொத்தம் 422 பில்லியன் நிமிடங்களுக்கு உலகக் கோப்பை ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இதுவரையில் இல்லாத வகையில் வெற்றிகரமான உலகக் கோப்பையாக இது சாதனை படைத்துள்ளது.
உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தை மொத்தம் 30 கோடி மக்கள் தொலைக்காட்சியில் கண்டுள்ளனர். ஒரே நேரத்தில் 130 கோடி பேர் பார்த்திருக்கிறார்கள். இதுவே அதிகம் பேர் பார்த்த கிரிக்கெட் ஆட்டம் என டிஸ்னி ஹாட்ஸ்டார் தெரிவித்துள்ளது. டிஜிட்டலிலும் இறுதிச் சுற்று சாதனை படைத்துள்ளது. டிஜிட்டல் தளத்தில் 5.9 கோடி ரசிகர்கள் இறுதிச் சுற்றைப் பார்த்துள்ளார்கள். நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்ட எந்தவொரு விளையாட்டுக்கும் இதற்கு முன்பு இப்படி ஒரு வரவேற்பு கிடைத்ததில்லை.