நவம்பர் 25: ஜூலன் கோஸ்வாமி பிறந்தநாள்!
இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டனான ஜூலன் கோஸ்வாமி இன்று தனது 41-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
2002-ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் அறிமுகமான கோஸ்வாமி வெகுசீக்கிரத்திலேயே அணியில் தனது இடத்தை உறுதி செய்துகொண்டார். மணிக்கு 120 கி.மீ வேகத்தில் பந்துவீசக்கூடிய கோஸ்வாமி, எதிரணி பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர்.
2006-ல் இங்கிலாந்துக்கு எதிராக முதல்முறையாக டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற கோஸ்வாமி முக்கியக் காரணமாக இருந்தார். அந்தத் தொடரின் இரண்டாவது டெஸ்டில் 78 ரன்கள் கொடுத்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 2007-ல் சிறந்த வீராங்கனைக்கான ஐசிசி விருது கோஸ்வாமிக்கு அளிக்கப்பட்டது. அவ்வருடம் இந்திய ஆடவர் அணி வீரர்கள் யாரும் எவ்வித ஐசிசி விருதையும் பெறவில்லை.
2008-ல் இந்திய மகளிர் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார் கோஸ்வாமி. மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் 255 விக்கெட்டுகளுடன் கோஸ்வாமி முதலிடத்தில் உள்ளார்.
இந்தியாவுக்காக 12 டெஸ்டுகள், 204 ஒருநாள் மற்றும் 68 டி20 ஆட்டங்களில் பங்கேற்றுள்ள இவர் 355 சர்வதேச விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 2022-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற கோஸ்வாமி, பல இளம் வீராங்கனைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.