2-வது டி20: ஆதிக்கத்தைத் தொடருமா இளம் இந்திய அணி?

ESPNcricinfo staff

சூர்யகுமார் யாதவ், மேத்யூ வேட் © AFP/Getty Images

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டி20 ஆட்டம் திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகள் பயணத்தின்போது அறிமுகமான முகேஷ் குமார் முதல் ஆட்டத்திலும் கடைசி கட்டத்தில் யார்க்கர்களை சிறப்பாகச் செயல்படுத்தினார். கடைசி ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டும் கொடுத்தது ஆட்டத்தின் முக்கிய அம்சமாக அமைந்தது. பிரசித் கிருஷ்ணா மற்றும் பிஸ்னாய்-க்கு முதல் ஆட்டம் மோசமாக அமைந்தது. இந்த ஆட்டத்தில் இவர்கள் எழுச்சி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாகப்பட்டினம் பேட்டிங்குக்குச் சாதகமான ஆடுகளமாக இருந்தாலும், திட்டங்களைச் செயல்படுத்த பந்துவீச்சாளர்கள் சிரமப்பட்டார்கள். திருவனந்தபுரம் ஆடுகளத்தில் ரன்கள் குவிப்பது எளிதான காரியம் அல்ல. இங்கு பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங்கில் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் அரை சதங்கள் அடித்து நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஜெயிஸ்வால் 21 ரன்கள் எடுத்தாலும், அதிரடியான தொடக்கத்தைத் தந்த பிறகே ஆட்டமிழந்தார். கெயிக்வாட்டுக்கு பேட்டிங் வாய்ப்பே கிடைக்கவில்லை. இந்திய அணியைப் பொறுத்தவரை அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது.

ஆஸ்திரேலிய அணியில் ஜோஷ் இங்ஸிஸ் தவிர மற்ற பேட்டர்கள் டைமிங் இல்லாமல் திணறினார்கள். ஸ்டீவ் ஸ்மித் அரை சதம் அடித்திருந்தாலும்கூட மிகவும் தடுமாற்றத்துடனே விளையாடி வந்தார். இங்லிஸ் 50 பந்துகளில் 110 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்டர்கள் 71 பந்துகளில் 91 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள். உலகக் கோப்பையில் விளையாடியதால் மேக்ஸ்வெல், ஹெட், ஸாம்பா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு முதல் ஆட்டத்தில் ஓய்வளிக்கப்பட்டது. பேட்டிங்கை பலப்படுத்த இரண்டாவது ஆட்டத்தில் இவர்களில் எவரேனும் விளையாட வாய்ப்புண்டு.

பந்துவீச்சில் ஐந்தாவது பந்துவீச்சாளருக்கான இடத்தை ஆல்-ரவுண்டர்கள் மூலம் நிரப்பியது ஆஸ்திரேலியா. இதனால், பேட்டர்களை கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா சிரமப்பட்டது. இந்த ஆட்டத்தில் கூடுதல் பந்துவீச்சாளருடன் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடுகளம்:

திருவனந்தபுரத்தில் இதுவரை மூன்று சர்வதேச டி20 ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. இரண்டு ஆட்டங்களில் இரண்டாவது பேட்டிங் செய்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன. 2017-ல் நடைபெற்ற முதல் ஆட்டம் மழையால் 8 ஓவர்கள் ஆட்டமாக விளையாடப்பட்டது. மற்ற இரு ஆட்டங்களில் முதல் பேட்டிங்கின் சராசரி 138 ரன்கள்.

Comments