நவம்பர் 26: சமனில் முடிந்த டெஸ்ட்
2011
சமனில் முடிந்த டெஸ்ட்
2011-ல் இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான மும்பை டெஸ்ட் சமனில் முடிந்தது.
டெஸ்ட் வரலாற்றில் சமனில் முடிந்த இரண்டாவது டெஸ்ட் இது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 590 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. டேரன் பிராவோ 166 ரன்கள் குவித்தார். இந்திய அணியில் 8-வது வீரராகக் களமிறங்கிய அஸ்வின் சதமடிக்க, 482 ரன்கள் குவித்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் ஓஜா 6 விக்கெட்டுகளையும், அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்த மேற்கிந்தியத் தீவுகள் 134 ரன்களுக்குச் சுருண்டது. இந்திய அணியின் வெற்றிக்கு 243 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
கடைசி நாள் தேநீர் இடைவேளையின்போதுகூட இந்திய அணியின் வெற்றிக்கு 94 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 5-க்கும் குறைவாக இருந்ததால் வெற்றி இந்திய அணியின் பக்கம் இருந்தது.
கடைசி இரு ஓவர்களில் 6 ரன்கள் தேவைப்பட்டன. கடைசிக்கு முந்தைய ஓவரில் இஷாந்த் சர்மாவும் ஆட்டமிழந்துவிட, கடைசி ஓவரில் 3 ரன்கள் தேவைப்பட்டன. முதல் மூன்று பந்துகளைக் கவனமாக தடுத்து விளையாடிய வருண் ஆரோன், 4-வது பந்தில் 1 ரன் எடுத்து ஸ்டிரைக்கை அஸ்வினிடம் ஒப்படைத்தார். 5-வது பந்தில் ரன் எடுக்கவில்லை. கடைசிப் பந்தை லாங் ஆனிடம் அடித்து இரு ரன்கள் ஓட முயன்றார் அஸ்வின். இரண்டாவது ரன் எடுக்கும்போது ரன் அவுட் ஆனார். இதனால், ஆட்டம் சமனில் முடிந்தது.
1984
ஆஸ்திரேலிய கேப்டன் கிம் ஹியூக்ஸ் கண்ணீர் மல்க ராஜிநாமா செய்த நாள் இன்று.
1984-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஹியூக்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 28 ஆட்டங்களில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்றது.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர் மல்க தனது ராஜிநாமா கடிதத்தை வாசிக்க முடியாமல் பாதியில் வெளியேறினார் ஹியூக்ஸ்.
இதன்பிறகு, அணியில் வீரராக மட்டும் தொடர்ந்தார். எனினும் அவரால் பேட்டிங்கில் ஜொலிக்க முடியவில்லை. நான்கு இன்னிங்ஸில் இரண்டு ரன்கள் மட்டுமே அவர் எடுத்தார். ஆஸ்திரேலியாவுக்காக தனது கடைசி டெஸ்டை 30-வது வயதில் விளையாடினார்.