அனல் பறந்த பேட்டிங்: 2-வது டி20 ஆட்டத்திலும் இந்தியா வெற்றி
இரண்டாவது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்தியா.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. மழைக்கான வாய்ப்பு ஒருபக்கம் இருந்தாலும் ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும் என பிட்ச் ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டது.
அதற்குத் தகுந்தாற்போல், இரண்டாவது ஓவரிலேயே பந்து பவுன்ஸ் ஆகி தாமதமாக பேட்டுக்கு வந்தது. இதனால் மேக்ஸ்வெல் 3-வது ஓவரை வீச வந்தார். ஆனால், இதனை பிரமாதமாகக் கையாண்ட ஜெயிஸ்வால் அதே ஓவரில் 3 பவுண்டரிகளைப் பறக்கவிட்டு அதிரடிக்கான கதவைத் திறந்துவைத்தார். அபாட் வீசிய அடுத்த ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களை விளாசித் தள்ளினார் ஜெயிஸ்வால்.
இந்த அதிரடியால் 4-வது ஓவரிலேயே 50 ரன்களைக் கடந்தது இந்தியா. இந்த ரன் வேகத்தைக் கட்டுப்படுத்த ஸாம்பாவிடம் பந்தைக் கொடுத்தார் வேட். ஆனால், முதல் பந்தையே ஸாம்பாவின் தலைக்கு மேலே அடித்து பவுண்டரிக்கு அனுப்பினார் கெயிக்வாட். ஸ்டம்ப் லைனில் வீசி கட்டுப்படுத்த முயன்ற ஸாம்பாவை ஸ்டிரைட் டிரைவ் மூலமாக இருவரும் கையாண்டார்கள். அந்த ஓவரில் ஜெயிஸ்வால் ஒரு பவுண்டரியை அடித்து வேடுக்கு நெருக்கடி கொடுத்தார்.
எல்லிஸ் வீசிய 6-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை நொறுக்கிய ஜெயிஸ்வால் 24 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார். 53 ரன்கள் எடுத்த அவர் அதே ஓவரில் முழு நீளப்பந்தை முன்கூட்டியே விளையாட முயன்று, ஷார்ட் தேர்ட் மேனில் நின்ற ஸாம்பாவிடம் கேட்ச் ஆனார்.
ரன் குவிப்பைக் கட்டுப்படுத்த முதல் 10 ஓவர்களுக்குள்ளேயே 6 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தினார் வேட். ஜெயிஸ்வாலின் விக்கெட்டுக்குப் பிறகு ரன் வேகம் குறைந்தது. பவுண்டரிகள் வரவில்லை என்றாலும், சிங்கிள்களாக எடுத்தார்கள் இஷான் கிஷனும் கெயிக்வாடும். 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்தது இந்தியா.
நிதானமாகத் தொடங்கிய இஷான் கிஷன் 12-வது ஓவரில் ஸ்டாய்னிஸ் பந்தை டீப் மிட்விக்கெட்டில் சிக்ஸர் அடித்து கியரை மாற்றினார். முதல் 15 பந்துகளில் 12 ரன்களை மட்டுமே எடுத்திருந்த இஷான் அடுத்த 15 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். 15-வது ஓவரில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். இஷானின் அதிரடியால் அதே ஓவரில் 150 ரன்களைக் கடந்தது இந்தியா.
ஆஃப் பக்கம் நல்ல ரூம் கொடுத்து குறைவேகப் பந்துகள் மூலம் இஷானுக்கு தொந்தரவு கொடுக்கத் தொடங்கினார்கள் ஆஸி. பந்துவீச்சாளர்கள். இதனை விக்கெட்டாக அறுவடை செய்தார் ஸ்டாய்னிஸ்.
சிக்ஸருடன் இன்னிங்ஸைத் தொடங்கிய சூர்யகுமாருக்கு ஆஃப் பக்கம் ஷார்ட் ஆஃப் த லெங்த் பந்துகளை வீசி வலை விரித்தார்கள். மறுபுறம் நிலைத்து விளையாடிய ருதுராஜ் 39 பந்துகளில் அரை சதம் அடித்தார். ஸ்டாய்னிஸின் லெங்த் பந்தை எக்ஸ்ட்ரா கவரில் சிக்ஸர் அடிக்க முயன்று கேட்ச் ஆனார் சூர்யகுமார் யாதவ்.
ரிங்கு சிங் கடைசி நேர அதிரடிக்காக முன்கூட்டியே களமிறக்கப்பட்டார். தனக்கு ஒதுக்கப்பட்ட வேலையை சிறப்பாகச் செய்த அவர் அபாட் வீசிய19-வது ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். இதனால் இந்தியா 200 ரன்களை எளிதாகக் கடந்தது.
எல்லிஸ் வீசிய கடைசி ஓவரை சிக்ஸருடன் தொடங்கிய ருதுராஜ் அடுத்த பந்தையும் லாங் ஆனில் அடித்து கேட்ச் ஆனார். 58 ரன்களுடன் ருதுராஜ் வெளியேற, திலக் வர்மா ஒரு சிக்ஸரையும் ரிங்கு சிங் ஒரு பவுண்டரியும் விளாச 235 ரன்களைக் குவித்தது இந்தியா. வெறும் 9 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 31 ரன்கள் குவித்தார் ரிங்கு சிங். கடைசி 7 ஓவர்களில் மட்டும் இந்தியா 111 ரன்களைக் குவித்து அசத்தியது. டி20 போட்டியில் இந்தியாவின் 5-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
இரண்டாவது இன்னிங்ஸில் ஈரப்பதம் அதிகம் இருந்ததால் இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் சிரமப்பட்டார்கள். அர்ஷ்தீப் வீசிய முதல் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் சென்றன. பிரசித் கிருஷ்ணா தனது முதல் ஓவரிலேயே 20 ரன்களை வாரி வழங்கினார். இதனால் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பை பிஸ்னாயிடம் கொடுத்தார் சூர்யகுமார் யாதவ்.
19 ரன்கள் எடுத்த ஷார்ட், பிஸ்னாயின் சுழலில் போல்ட் ஆனார். தனது அடுத்த ஓவரில் இங்லீஸை வந்த வேகத்திலேயே ஓய்வறைக்கு அனுப்பிவைத்தார் பிஸ்னாய். அதிரடியாகத் தொடங்கிய மேக்ஸ்வெல்லும் அக்ஷர் படேலின் சுழலில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதனால் வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து ஓவர்களைத் தள்ள முடிவெடுத்தார் சூர்யகுமார்.
19 ரன்கள் எடுத்த ஸ்மித், பிரசித் கிருஷ்ணாவின் குறைவேகப் பந்தில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஆனால் ஸ்டாய்னிஸ் - டிம் டேவிட் இணை சுதாரிப்புடன் விளையாடியது. முகேஷ் குமாரின் வேகத்தைப் பயன்படுத்திக்கொண்ட டேவிட் 10-வது ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை அடிக்க ஆஸ்திரேலியாவும் 100 ரன்களைக் கடந்தது.
ஸ்டாய்னிஸ் - டிம் டேவிட் கூட்டணி 38 பந்துகளில் 81 ரன்களை எடுத்தது. ஈரப்பதம் அதிகம் இருந்ததால் ரூம் கொடுக்காமல் லெக் ஸ்டம்புக்கு நெருக்கமாக குறைவேகத்தில் பந்துவீசினார் பிஸ்னாய். இதனால் பேட்டர்களுக்கு விலகி அடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 37 ரன்கள் எடுத்த டேவிட், பிஸ்னாயின் திடீர் வேகத்தைக் கணிக்கத் தவறி ருதுராஜிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
25 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த ஸ்டாய்னிஸும் முகேஷ் குமார் வீசிய அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியாவின் சரிவும் அந்தப் புள்ளியில் தொடங்கியது. ஸ்டம்ப் லைனில் முழு நீளத்தில் பந்துவீசத் தொடங்கினார்கள் இந்திய பந்துவீச்சாளர்கள்.
பிரசித் கிருஷ்ணா வீசிய 16-வது ஓவரில் அபாட் மற்றும் எல்லிஸ் தலா ஒரு ரன்னின் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார்கள். அடுத்த ஓவரில் ஸாம்பாவையும் போல்ட் செய்து ஓய்வறைக்கு அனுப்பிவைத்தார் அர்ஷ்தீப் சிங். கடைசி வரை கேப்டன் மேத்யூ வேட் மட்டும் அதிரடியாக விளையாடி ரன்கள் வித்தியாசத்தைக் குறைத்தார். 20 ஓவர்கள் முடிவில் ஆஸி.யால் 191 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. வேட் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 23 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். பிஸ்னாய் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
அதிரடித் தொடக்கத்தைக் கொடுத்த ஜெயிஸ்வாலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியின்மூலம் 5 ஆட்டங்களைக்கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது இந்தியா.