மும்பை அணிக்கு மாறினார் ஹார்திக் பாண்டியா: ஆர்சிபியில் கிரீன்

ESPNcricinfo staff

ரோஹித் சர்மா, ஹார்திக் பாண்டியா © BCCI

குஜராத் டைடன்ஸிலிருந்து ஹார்திக் பாண்டியாவை விலைக்கு வாங்குவதற்கான பணியை மும்பை இந்தியன்ஸ் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக நிறைவு செய்தது.

அதே சமயம், ஆல்-ரவுண்டர் கேம்ரூன் கிரீனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு விலைக்குக் கொடுத்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

பிசிசிஐ தரப்பிலிருந்து வீரர்களின் இந்த அணி மாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், ஐபிஎல் அணி நிர்வாகங்கள் இந்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

ஹார்திக் பாண்டியா மும்பைக்கு அணி மாறியதன் மூலம், அவரது ஊதியமான ரூ. 15 கோடி குஜராத் டைடன்ஸின் மீதமிருக்கும் தொகையில் சேர்ந்துள்ளது. மும்பையிடமிருந்து அணி மாற்றத்துக்கான தொகையையும் குஜராத் டைடன்ஸ் பெறவிருக்கிறது. இந்தத் தொகை குறித்து ஐபிஎல்-லிடம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இந்தத் தொகையில் அணி மாற்றத்துக்கான தொகையாக 50 சதவிகிதத்தை ஹார்திக் பாண்டியாவுக்கு வழங்க வேண்டும்.

2024 ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை ஐபிஎல் அணி நிர்வாகங்கள் ஞாயிற்றுக்கிழமை சமர்ப்பித்தன. இந்தப் பட்டியலை சமர்ப்பிக்கும்போதும் குஜராத் டைடன்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்ட வீரராகவே ஹார்திக் பாண்டியா இருந்தார். கேம்ரூன் கிரீனும் மும்பை இந்தியன்ஸால் தக்கவைக்கப்பட்டிருந்தார். இந்தப் பட்டியலை சமர்ப்பித்த பிறகே அணி மாற்றம் பணிகள் நிறைவடைந்தன.

ஐபிஎல் விதிகளின்படி, ஐபிஎல் பருவம் நிறைவடைந்து ஒரு மாதத்திலிருந்து வீரர்கள் அணி மாற்றம் செய்யப்படலாம். ஐபிஎல் ஏலம் நடைபெற்றால் அதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு வரை இந்தப் பணிகள் நடைபெறும். மேலும், ஐபிஎல் ஏலம் முடிந்தவுடன் மீண்டும் அணி மாற்றம் நடைபெறலாம். அடுத்த ஐபிஎல் பருவத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பு வரை இந்தப் பணிகள் மீண்டும் தொடரும்.

டிசம்பர் 19-ம் தேதி ஐபிஎல் ஏலம் நடைபெறுவதால் டிசம்பர் 12-ம் தேதி வரை அணி மாற்றம் பணிகள் நடைபெறலாம். மீண்டும் ஐபிஎல் முடிவடைந்தவுடன், டிசம்பர் 20 முதல் 2024 ஐபிஎல் தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு வரை மீண்டும் அணி மாற்றம் நடைபெறும்.

மும்பை அணி 11 வீரர்களை விடுவித்தது. இதன்மூலம், ரூ. 15.25 கோடியை பெற முடிந்தது. இந்தத் தொகையின் மூலமே ஹார்திக் பாண்டியாவை வாங்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ். இதனால், ஐபிஎல் ஏலத்தின்போது மிகவும் குறைவான தொகையே மும்பையிடம் இருந்திருக்கும். ஆனால், கேம்ரூன் கிரீனை ஆர்சிபி-க்கு கொடுத்ததன் மூலம் ரூ. 17.50 கோடியைப் பெற்றுள்ளது.

Comments