நவம்பர் 28: ருதுராஜ் கெயிக்வாட் உலக சாதனை!
2022
ருதுராஜ் உலக சாதனை
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 7 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்கிற உலக சாதனையை ருதுராஜ் கெயிக்வாட் இந்த நாளில் படைத்தார்.
2022 விஜய் ஹசாரே காலிறுதிச் சுற்றில் உத்தரப் பிரதேசத்துக்கு எதிராக ஷிவா சிங் என்ற இடக்கை பந்துவீச்சாளர் ஓவரில் நோ-பாலில் சிக்ஸர் அடித்தது உள்பட மொத்தம் 7 பந்துகளிலும் சிக்ஸர்களை விளாசி புதிய உலக சாதனை படைத்தார் ருதுராஜ் சிங். அந்த ஓவரில் 43 ரன்கள் மஹாராஷ்டிர அணிக்குக் கிடைத்தன.
இந்த ஆட்டத்தில் ருதுராஜ் கெயிக்வாட் ஆட்டமிழக்காமல் 159 பந்துகளில் 16 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 220 ரன்கள் குவித்தார்.
1979
ஃபீல்டிங் கட்டுப்பாடுகளுக்கு காரணமான ஆட்டம்!
1979-ல் சிட்னி ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்தும் மேற்கிந்தியத் தீவுகளும் மோதின. கடைசிப் பந்தில் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டன. இங்கிலாந்து கேப்டன் மைக் பிரேர்லி, விக்கெட் கீப்பர் உள்பட அனைத்து ஃபீல்டர்களையும் பவுண்டரி எல்லையில் நிறுத்தினார். அப்போது இது விதிமுறைக்கு உட்பட்டதாகவே இருந்தது. இங்கிலாந்தின் இந்தச் செயலுக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் ஒருநாள் கிரிக்கெட்டில் வட்டத்துக்கு வெளியே ஃபீல்டர்களை நிறுத்துவதற்கான விதிகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டன.