நவம்பர் 29: யூனிஸ் கான் பிறந்தநாள்!
பாகிஸ்தான் அணியின் மிகச்சிறந்த பேட்டராகக் கருதப்படும் யூனிஸ் கான் இன்று தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
2000-ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் அறிமுகமானார் யூனிஸ். அடுத்த சில வருடங்களிலேயே அணியில் தன்னுடைய இடத்தை உறுதி செய்துகொண்டார். வழக்கமாக 3-ம் வரிசையில் களமிறங்கும் யூனிஸ், பல ஆட்டங்களில் ஆபத்பாந்தவனாக செயல்பட்டு பாகிஸ்தானுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறார்.
இந்தியாவுக்கு எதிராக தொடர்ச்சியான டெஸ்டுகளில் ஓர் இரட்டைச் சதம் உள்பட 4 சதங்களை விளாசியவர் யூனிஸ். இந்தியாவுக்கு எதிராக அவருடைய சராசரி கிட்டத்தட்ட 90 ஆகும். 2009-ல் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் முச்சதம் அடித்தார் யூனிஸ். இதன்மூலம் முச்சதம் அடித்த 3-வது பாகிஸ்தான் வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.
2009-ல் இவருடைய தலைமையிலான பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. இருப்பினும் சர்ச்சைகள் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார் யூனிஸ். 2010 அணிக்குள் மோதல் போக்கை உருவாக்கியதாக அவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. பின்னர் அதே ஆண்டு தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.
2014-ல் 5 டெஸ்டுகளில் 5 சதங்களை அடித்தார். இதன்மூலம் பாகிஸ்தானுக்காக அதிக டெஸ்ட் சதங்களை அடித்த வீரர் எனும் பெருமையைப் பெற்றார். 2015 உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் யூனிஸ் கானுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதே ஆண்டு ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும் டெஸ்டில் அவரது ஆதிக்கம் தொடர்ந்தது.
ஓவல் டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக இரட்டைச் சதம் அடித்து தொடரை சமன் செய்ய உதவினார் யூனிஸ். இதன்மூலம் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியது பாகிஸ்தான். தன்னுடைய கடைசி தொடரில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் பாகிஸ்தான் வீரராக சாதனை படைத்தார். 2017-ல் டெஸ்டில் இருந்தும் ஓய்வு பெற்று தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் யூனிஸ்.