மேக்ஸ்வெலை டெஸ்டுக்கு அழைக்க வேண்டும்: பாண்டிங்

ESPNcricinfo staff

மேக்ஸ்வெல் © AFP/Getty Images

உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மேக்ஸ்வெல் 201 ரன்கள் குவித்ததைப்போல ஓர் ஆட்டத்தைத் தான் பார்த்ததே இல்லை என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான சிட்னி டெஸ்டுடன், டெஸ்டிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக தொடக்க பேட்டர் டேவிட் வார்னர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். வார்னருக்குப் பிறகு கவாஜாவுடன் தொடக்க பேட்டராக விளையாடப்போவது யார் என்கிற கேள்வி ஆஸ்திரேலியாவில் எழத் தொடங்கிவிட்டது. வார்னர் இடத்துக்கு பேன்கிராஃப்ட், மார்கஸ் ஹாரிஸ் மற்றும் மேத்யூ ரென்ஷா ஆகியோர் போட்டியில் உள்ளார்கள்.

இவர்கள் மூவரும் பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பிரதமர் XI அணிக்காக விளையாடுகிறார்கள். ஆஸ்திரேலிய தேர்வுக் குழுவின் கவனத்தை ஈர்க்க மூவருக்கும் ஒரு வாய்ப்பு உள்ளது.

எனினும், உள்நாட்டுப் போட்டிகளில் நிறைய ரன்கள் குவித்து வருவதால் பேன்கிராஃப்டுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.

ஷெஃபீல்ட் ஷீல்ட் கோப்பை போட்டியில் மேற்கு ஆஸ்திரேலியாவுக்காக விளையாடும் பேன்கிராஃப்ட், சமீபத்திய பருவத்தில் 945 ரன்கள் குவித்துள்ளார். முந்தையப் பருவத்தைக் காட்டிலும் 300 ரன்கள் கூடுதலாக அடித்துள்ளார்.

பேன்கிராஃப்ட் பற்றி பாண்டிங் கூறியதாவது:

"மூன்று பேட்டர்களையும் பார்த்தால், பேன்கிராஃப்ட் நிறைய ரன்கள் குவித்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆஸ்திரேலிய அணி அவரைத் தேர்வு செய்தால் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆறு மாதங்களுக்கு முன்பு நிலைமை வேறாக இருந்திருக்கலாம். அப்போது அவர்களது தேர்வாக ஹாரிஸ் இருந்திருக்கலாம். ஆனால், தற்போது அணியில் இடம்பிடிப்பதற்கான போட்டியில் பேன்கிராஃப்ட் முன்னணியில் இருக்கிறார்" என்றார் பாண்டிங்.

ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கூறுகையில், ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையில் மாற்றம் ஏற்படலாம் எனத் தெரிவித்திருந்தார். இதன்மூலம், ஆல்-ரவுண்டர் கேம்ரூன் கிரீன் டெஸ்ட் லெவனில் மீண்டும் இடம்பெற வாய்ப்புண்டு.

இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாண்டிங், அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்ய உள்நாட்டுப் போட்டியில் விளையாடி நிரூபிக்க வேண்டும் என்கிற நிலைக்கு கிரீனைத் தள்ள வேண்டும் என்றார். ஆஷஸில் மிட்செல் மார்ஷ் சதமடித்ததைத் தொடர்ந்து, கிரீனால் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம்பெற முடியவில்லை.

"கேம்ரூன் கிரீன் காத்திருக்க வேண்டும். அவருக்கான நேரம் வரும் வரை அவர் பொறுமை காக்க வேண்டும். ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் இடம்பிடிக்க, உள்நாட்டுப் போட்டியில் அவர் நிறைய ரன்களைக் குவிக்க வேண்டும். ஆஸ்திரேலிய அணியின் மூன்றாவது வரிசையில் மார்னஸ் லபுஷேன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்" என்றார் ரிக்கி பாண்டிங்.

இந்தியாவில் வெள்ளைப் பந்து போட்டிகளில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய மேக்ஸ்வெல் மீண்டும் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட வேண்டும் என்றும் பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மேலும் கூறிய பாண்டிங், "பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பாகச் செயல்படுவதால் மேக்ஸ்வெல் டெஸ்ட் அணியில் இடம்பெறலாம். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டமிழக்காமல் 201 ரன்கள் குவித்தார். இதுவரை நான் பார்த்ததிலேயே மறக்க முடியாத ஒருநாள் இன்னிங்ஸ் இது. நான் நிறைய ஆட்டங்களில் பங்கெடுத்துள்ளேன். நிறைய பார்த்திருக்கிறேன், நிறைய விளையாடியிருக்கிறேன். ஆனால், இப்படியொரு ஆட்டத்தை நான் பார்த்ததே இல்லை" என்றார் அவர்.

7 டெஸ்டுகளில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல் ஒரு சதம் உள்பட 339 ரன்கள் எடுத்துள்ளார். 8 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான பெர்த் டெஸ்டுக்கான ஆஸ்திரேலிய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆஸ்திரேலிய உள்நாட்டு போட்டி மற்றும் பிரதமர் XI போட்டி நிறைவடைந்தபிறகு ஆஸ்திரேலியாவுக்கான அணி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments