சில்ஹெட் டெஸ்ட்: ஃபிளிப்ஸ் உமிழ்நீரைப் பயன்படுத்தியதால் சர்ச்சை
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டின் மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது, நியூசிலாந்து வீரர் கிளென் ஃபிளிப்ஸ் உமிழ்நீரைப் பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
வங்கதேசம், நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் சில்ஹெட்டில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 310 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து 317 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
10 ரன்கள் பின்தங்கியிருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
மூன்றாவது நாள் ஆட்டத்தில் கிளென் ஃபிளிப்ஸ் உமிழ்நீரைப் பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது. 34-வது ஓவரின் முதல் பந்துக்குப் பிறகு, ஃபிளிப்ஸ் இருமுறை இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.
கள நடுவர்கள் அசன் ராஸா மற்றும் பால் ரீஃபல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனினும், ஃபிளிப்ஸ் பந்துவீசுவதற்கு முன்பு இருமுறை உமிழ்நீரைப் பயன்படுத்தியது தொலைக்காட்சி ஒளிபரப்பில் பதிவாகியுள்ளது. கரோனாவுக்குப் பிறகு பந்தில் உமிழ்நீரைப் பயன்படுத்தக் கூடாது என விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு கடந்தாண்டு அக்டோபர் 1 முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பு நவம்பர் 2022-ல் ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் இடையிலான ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக வீரர் அலிஷன் ஷரஃபு உமிழ்நீரைப் பயன்படுத்தினார். இதற்கு அபராதமாக நேபாளத்துக்கு 5 ரன்கள் வழங்கப்பட்டன.