டி20 உலகக் கோப்பை: உறுதியான 20 அணிகள்
2024 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் 20 அணிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
கரீபியன் தீவுகளில் ஏழு நாடுகளும் அமெரிக்காவுடன் இணைந்து 2024 டி20 உலகக் கோப்பைப் போட்டியை நடத்துகின்றன. 2024 ஜுன் 4 முதல் 30 வரை டி20 உலகக் கோப்பைப் போட்டி நடைபெறவுள்ளது. ஆன்டிகுவா & பார்புடா, பார்படோஸ், டொமினிகா, கயானா, செயிண்ட் லூசியா, செயிண்ட் வின்சென்ட் & கிரீனடைன்ஸ், டிரினாட் & டொபாகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் மொத்தம் 20 நாடுகள் பங்கேற்கின்றன. இவற்றுள் 19 நாடுகள் தங்களது இடத்தை உறுதி செய்திருந்த நிலையில், இந்தப் பட்டியலில் உகாண்டா அணியும் இன்று இணைந்துள்ளது.
2024 டி20 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றுள்ள 20 அணிகளின் விவரம்:
போட்டியை நடத்தும் நாடுகள் - மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்கா
2022-ன் முதல் 8 அணிகள் - ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை
டி20 தரவரிசையில் அடுத்த இரு அணிகள் - ஆப்கானிஸ்தான், வங்கதேசம்
தகுதிச் சுற்றில் தேர்வானவை
ஆப்பிரிக்கா: நமீபியா, உகாண்டா அமெரிக்கா: கனடா ஆசியா: நேபாளம், ஓமன் கிழக்கு ஆசிய பசிபிக்: பப்புவா நியூ கினியா ஐரோப்பா: அயர்லாந்து, ஸ்காட்லாந்து
இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவுகளாக விளையாடவுள்ளன. ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்தச் சுற்றுக்குத் தகுதி பெரும். சூப்பர் 8 சுற்றில் மீண்டும் 8 அணிகள் 2 பிரிவுகளாக விளையாடும். இதில் 2 பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.