டிசம்பர் 01: அர்ஜுனா ரணதுங்கா பிறந்தநாள்!
இலங்கை அணியின் தலைசிறந்த கேப்டனான அர்ஜுனா ரணதுங்கா இன்று தனது 60-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
1982-ல் இலங்கைக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்தது. இலங்கை அணியின் முதல் டெஸ்ட்தான் ரணதுங்காவின் முதல் டெஸ்டும். 18 வயதில் அறிமுக இன்னிங்ஸில் அரை சதம் அடித்தார். இலங்கைக்காக டெஸ்டில் அரை சதம் அடித்த முதல் வீரரும் ரணதுங்கா தான்.
1990-களில் இலங்கை கிரிக்கெட்டைத் தோளில் சுமந்து, 1996-ல் உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்தவர் அர்ஜுனா ரணதுங்கா.
1999 உலகக் கோப்பையில் இலங்கை சோபிக்கத் தவறியதைத் தொடர்ந்து, கேப்டன் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டார். அடுத்த வருடமே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
இலங்கைக்காக அதிக டெஸ்டுகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையுடன் டெஸ்டிலிருந்து விடைபெற்றார். இலங்கையின் முதல் டெஸ்டிலும், 100-வது டெஸ்டிலும் விளையாடிய ஒரே வீரர் ரணதுங்காதான்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 193 ஆட்டங்களில் இலங்கையை வழிநடத்தினார் ரணதுங்கா. அதிக ஆட்டங்களுக்கு கேப்டனாகச் செயல்பட்ட ஆலன் பார்டரின் அப்போதைய சாதனையை முறியடித்தார். டெஸ்டில் 5,105 ரன்களும், ஒருநாளில் 7,456 ரன்களும் எடுத்தார்.
இலங்கைக்கு முதல்முதலாக உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்தவர், கடினமான காலத்தில் முத்தையா முரளிதரனுக்கு ஆதரவாக நின்றவர் என்கிற பேரும் புகழும் ரணதுங்காவுக்கு எப்போதும் இருக்கும்.
முஹமது கைஃப் பிறந்தநாள்!
இந்தியாவின் முன்னாள் வீரரான முஹமது கைஃப் இன்று தனது 43-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
2000-ம் ஆண்டு கைஃப் தலைமையிலான இந்திய அணி முதல் யு-19 உலகக் கோப்பையை வென்றது. அதே ஆண்டில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். 2002-ல் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான நாட்வெஸ்ட் சீரீஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் 6-வது விக்கெட்டுக்கு யுவ்ராஜ் சிங்குடன் அற்புதமான கூட்டணியை அமைத்த கைஃப், விரைவாக 87 ரன்கள் சேர்த்து, இந்தியா கோப்பையை வென்று சாதனை படைக்க உதவினார். இறுதிச் சுற்றில் ஆட்ட நாயகன் விருதும் வென்றார்.
கைஃப் தலைமையில் 2005-06-ல் உத்தரப் பிரதேச அணி முதல்முறையாக ரஞ்சிக் கோப்பையை வென்றது. முதல்தர கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் எடுத்துள்ளார்.
துடிப்பான ஃபீல்டரான கைஃப், இந்தியாவின் கீழ் நடுவரிசை பேட்டிங்கின் தூணாகச் செயல்பட்டவர். கிரேக் சேப்பல் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பதவியேற்றபின், இளம் வீரர்களுக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதனால் ஓரங்கட்டப்பட்டவர்களும் கைஃபும் ஒருவர். 2006-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு கைஃபிற்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்தியாவுக்காக 13 டெஸ்டுகள் மற்றும் 125 ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்ற கைஃப், 2018-ல் நாட்வெஸ்ட் சீரீஸ் இறுதிச்சுற்று நடைபெற்ற அதே ஜூலை 13 அன்று ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். அதன்பிறகு பயிற்சியாளராகவும் வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார்.