2024 டி20 உலகக் கோப்பை: பின்வாங்கிய டொமினிகா
டி20 உலகக் கோப்பைப் போட்டி 2024 ஜுன் 4 முதல் 30 வரை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இதில் 20 அணிகள் பங்கேற்கின்றன.
மேற்கிந்தியத் தீவுகளின் ஆன்டிகுவா & பார்புடா, பார்படோஸ், டொமினிகா, கயானா, செயிண்ட் லூசியா, செயிண்ட் வின்சென்ட் & கிரீனடைன்ஸ், டிரினாட் & டொபாகோ மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் டி20 உலகக் கோப்பையை நடத்த ஐசிசி முடிவு செய்திருந்தது.
இந்நிலையில், இந்தப் போட்டியை நடத்துவதில் இருந்து டொமினிகா நாடு பின்வாங்கியுள்ளது. அங்குள்ள விண்ட்சர் பார்க் மைதானத்தில் ஒரு குரூப் ஆட்டம் மற்றும் இரண்டு சூப்பர் 8 சுற்று ஆட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. உலகக் கோப்பையை முன்னிட்டு அங்கு பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் உலகக் கோப்பைக்கு முன்னர் முடிவடைய வாய்ப்பில்லை என்பதால் இந்தப் போட்டியை நடத்துவதில் இருந்து அந்த அரசு பின்வாங்கியுள்ளது.
இதுகுறித்து பல ஒப்பந்ததாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் குறிப்பிட்ட காலத்துக்குள் பராமரிப்புப் பணிகளை முடிப்பது சிரமம் என்பதை அனைவரும் உறுதிப்படுத்திய பிறகே உலகக் கோப்பையை நடத்தும் முடிவில் இருந்து பின்வாங்கியதாக டொமினிகா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் ஓர் அங்கமான டொமினிகாவின் இந்த முடிவால் மாற்று இடத்தைத் தேர்வு செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இருப்பினும், டொமினிகாவின் இந்த முடிவு புரிந்துகொள்ளக் கூடியது தான் என்று மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், மாற்று இடத்தைத் தேர்வு செய்வது குறித்து ஐசிசியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகவும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகத் தலைவர் ஜானி கிரேவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து 2024 டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இயக்குனர் ஃபவ்வாஸ் பக்ஷ் பேசியதாவது: இப்படியான பிரம்மாண்ட போட்டிகளை நடத்தும் போது, ஏற்பாட்டாளர்கள் தங்களது திட்டங்களை மாற்றியமைக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இது வழக்கமாக நிகழ்வது தான். மேலும் 2024 ஐசிசி ஆடவர் T20 உலகக் கோப்பையை நடத்துவதற்கான அனைத்து செயல்பாட்டு பகுதிகளுக்கும் தற்காலிக மாற்றுத் திட்டங்களை நாங்கள் வைத்திருக்கிறோம் என்றார்.
முன்னதாக, உலகக் கோப்பையை நடத்தும் நாடுகளின் பட்டியலை ஐசிசி வெளியிட்டபோது அதில் ஜமைக்கா இடம்பெறாதது கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்யமடையச் செய்திருந்தது. இத்தனைக்கும் மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளில் அதிக மக்கள் தொகை கொண்டதும் கிரிக்கெட் வெகு பிரபலமாகவும் உள்ள நாடு ஜமைக்கா. 2007 ஒருநாள் உலகக் கோப்பையில் ஜமைக்காவில் ஆறு முதல் சுற்று ஆட்டங்களும் ஓர் அரையிறுதி ஆட்டமும் நடைபெற்றன. ஆனால், 2010 டி20 உலகக் கோப்பை ஆட்டங்கள் ஜமைக்காவில் இடம்பெறவில்லை.
ஆனால், டி20 உலகக் கோப்பையை நடத்துவதற்கான செலவு மற்றும் அதனால் கிடைக்கும் பலன்களைக் கருத்தில் கொண்டு போட்டியை நடத்த முன்வரவில்லை என ஜமைக்கா அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், டொமினிகாவும் போட்டியை நடத்துவதில் இருந்து பின்வாங்கியுள்ளதால் அங்கு நடைபெற இருந்த ஆட்டங்கள் எங்கு மாற்றப்படும் என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.