பாகிஸ்தான் தேர்வுக்குழுத் தலைவரின் ஆலோசகர்களாக 3 பேர் நியமனம்

ESPNcricinfo staff

கம்ரான் அக்மல் மற்றும் சல்மான் பட் © Getty Images

சமீபத்தில் பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான வஹாப் ரியாஸ் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரின் ஆலோசகர்களாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களான சல்மான் பட், கம்ரான் அக்மல் மற்றும் ராவ் இஃப்திகார் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் மூவரும் உடனடியாக தங்களின் பதவிகளை ஏற்று, பணிகளை தொடங்க உள்ளார்கள். பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் தொடருக்குப் பிறகு, ஜனவரி மாதத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதுவே இவர்களுக்கு முதல் பரீட்சையாக அமையப்போகிறது.

மேலும் இவர்களுக்கு வீரர்களை தேர்வுச் செய்யும் வேலைகள் இல்லாத சமயத்தில், பயிற்சி முகாம்களில் கூடுதல் வேலைகள் இருக்கலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அக்மல், இஃப்திகார் ஆகிய இருவரும் இதற்கு முன்பு இது போன்ற பொறுப்புகளில் பணியாற்றி உள்ளனர். ஆனால், சல்மான் பட் இதுபோன்ற பொறுப்பை ஏற்பது இதுவே முதல் முறை ஆகும்.

முன்னாள் பாகிஸ்தான் வீரர்களுக்கு இப்பொறுப்புகளை அளித்ததன் மூலம், சில கேள்விகள் எழும்ப வாய்ப்புள்ளது. 2010-ம் ஆண்டு ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்ட காரணத்தால் சல்மான் பட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக கம்ரான் அக்மலுக்கும் ஐசிசி சார்பாக மனு அனுப்பப்பட்டிருந்தது. மேலும் 2010-ல் நடைபெற்ற லார்ட்ஸ் டெஸ்டுக்குப் பிறகு வஹாப் ரியாஸிடமும் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இப்படி பல இன்னல்களைத் தொடர்ந்து இவர்கள் அனைவரும் இப்பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இவர்களுடன் சேர்த்து பாகிஸ்தான் அணியின் இயக்குனராக முகமது ஹஃபீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வருகின்ற ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களில் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் செயல்படவுள்ளார்.

Comments