கடைசி டி20 ஆட்டம்: வெற்றி யாருக்கு?

ESPNcricinfo staff

மேத்யூ வேட் மற்றும் சூர்யகுமார் யாதவ் © BCCI

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் பெங்களூரில் நாளை நடைபெறுகிறது.

இந்தத் தொடரை ஏற்கெனவே 3-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிவிட்டது. இருப்பினும், ஆறுதல் வெற்றிகாணும் முனைப்பில் நாளைய ஆட்டத்தில் களமிறங்கவுள்ளது ஆஸ்திரேலியா. இந்தத் தொடரில் 19 வீரர்களை அந்த அணி பயன்படுத்தினாலும் தொடரைத் தக்கவைக்க முடியாமல் போனது. ராய்ப்பூர் ஆட்டத்தில் 5 மாற்றங்களை ஆஸி. செய்தது. ஆனாலும் இந்த முடிவு அந்த அணிக்குக் கைகொடுக்கவில்லை.

ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு பிஸ்னாய் மற்றும் அக்‌ஷர் படேல் இணை சவாலாக இருக்கிறது. இருப்பினும், நாளை ஆட்டம் நடைபெறும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு பெரிதாக ஒத்துழைப்பு கிடைக்காது. மேலும் பேட்டர்களின் சொர்க்கபுரியான இங்கே ஆறுதல் வெற்றிபெற ஆஸி. பேட்டர்கள் போராடுவார்கள்.

இந்தியாவின் வேகப்பந்துவீச்சைப் பொறுத்தவரை தீபக் சஹாரின் வருகை ஓரளவு நிம்மதியைக் கொடுத்திருக்கிறது. ராய்ப்பூரில் பவர்பிளேயில் ரன்களை வாரிக் கொடுத்தாலும் கடைசி ஓவர்களில் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார் சஹார். ஆகவே, நாளைய ஆட்டத்திலும் சஹார், முகேஷ் குமார் மற்றும் அவேஷ் கான் கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

11 சர்வதேச டி20 ஆட்டங்களில் மட்டுமே பங்கேற்றுள்ள ஜெயிஸ்வால் இரு அரை சதங்கள் மற்றும் ஒரு சதத்தை விளாசியுள்ளார். இந்தத் தொடரிலும் முதல் 6 ஓவர்களில் அவருடைய ஸ்டிரைக் ரேட் 174.62 ஆகும். டிராவிஸ் ஹெட் 194.11 ஸ்டிரைக் ரேட்டில் ரன்களைக் குவித்துள்ளார். ஆகவே இருவருடைய அதிரடியையும் நாளை எதிர்பார்க்கலாம்.

இந்தத் தொடரில் ஆரோன் ஹார்டி பெரிதாக சோபிக்கவில்லை. கடந்த பிபிஎல் போட்டியில் அதிக ரன் குவித்தவரான ஹார்டி பலமான ஹிட்டர் என்பதால் நாளைய ஆட்டத்தில் அவர்மீதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய அணி தொடரைக் கைப்பற்றியதால் இந்தத் தொடரில் இதுவரை பங்கேற்காத வாஷிங்டன் சுந்தருக்கு நாளைய ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படலாம். அக்‌ஷர் அல்லது பிஸ்னாய் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்படலாம்.

உத்தேச அணிகள்

இந்தியா: யஷஸ்வி ஜெயிஸ்வால், ருதுராஜ் கெயிக்வாட், சூர்யகுமார் யாதவ், ஜிதேஷ் சர்மா, ரிங்கு சிங், அக்‌ஷர் படேல், தீபக் சஹார், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், அவேஷ் கான்.

ஆஸ்திரேலிய அணி: டிராவிஸ் ஹெட், ஜோஷ் ஃபிலிப்பி, பென் மெக்டெர்மாட், ஆரோன் ஹார்டி, டிம் டேவிட், மேத்யூ ஷார்ட், மேத்யூ வேட், பென் துவார்ஷஸ், கிறிஸ் கிரீன், ஜேசன் பெஹரண்டாஃப், தன்வீர் சங்கா.

சின்னசாமி மைதானத்தில் கடந்த ஐபிஎல் போட்டியில் 14 இன்னிங்ஸ்களில் 9 முறை 180க்கும் அதிகமான ரன்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஆகவே, நாளைய ஆட்டத்திலும் ரன் மழையை எதிர்பார்க்கலாம்.

சில புள்ளி விபரங்கள்

இந்தத் தொடரில் யஷஸ்வி ஜெயிஸ்வால் 117 ரன்களைக் குவித்துள்ளார். முதல் 6 ஓவர்களில் அவருடைய ஸ்டிரைக் ரேட் 174.62 ஆகும்.

ஜேசன் பெஹரண்டார்ஃப் இந்தத் தொடரில் மூன்று ஆட்டங்களில் பங்கேற்று 5.75 எகானமியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தத் தொடரில் குறைவான எகானமியைக் கொண்ட பந்துவீச்சாளர் பெஹ்ரண்டாஃப் தான்.

ரிங்கு சிங் இந்தத் தொடரில் கடைசி ஓவர்களில் களமிறங்கி 20 பந்துகளை சந்தித்து 49 ரன்கள் அடித்துள்ளார். அவருடைய ஸ்டிரைக் ரேட் 245.00 ஆகும்.

Comments