டிசம்பர் 03: மார்க் பௌச்சர் பிறந்தநாள்!

ESPNcricinfo staff

மார்க் பெளச்சர் © Getty Images

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரரான மார்க் பெளச்சர் தனது 47-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

உலகின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவர் எனப் பாராட்டப்பட்ட பெளச்சர், 1997-ல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். டெஸ்ட் வரலாற்றில் 500 கேட்சுகளைப் பிடித்த முதல் விக்கெட் கீப்பர் எனும் பெருமையை 2011-ல் பெற்றார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்த ஒரே சதத்தையும் 44 பந்துகளில் விளாசினார்.

2012-ல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது பயிற்சி ஆட்டத்தில் ஸ்டம்புகளின் பெயில்ஸ், பெளச்சரின் கண்களைத் தாக்கியதன் காரணமாக, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2019-ல் தென்னாப்பிரிக்க அணிக்கும் 2022-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

மிதாலி ராஜ் பிறந்தநாள்!

இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டனான மிதாலி ராஜ் தனது 41-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முகமாக அறியப்படும் மிதாலி ராஜ், தனது 16 வயதில் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் பங்கேற்று சதம் அடித்தார். நேர்த்தியான பேட்டிங் தொழில்நுட்பத்தைக் கொண்ட இவர், தனது 3-வது டெஸ்டிலேயே 214 ரன்கள் குவித்து மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரைப் பதிவு செய்தார். அப்போது அவருடைய வயது 19.

2017 ஒருநாள் உலகக் கோப்பையின்போது, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை மற்றும் 6,000 ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றார். அந்தப் போட்டியில் அதிக ரன் குவித்தவர்களின் பட்டியலில் 409 ரன்களுடன் 2-வது இடம் பிடித்தார்.

இவருடைய தலைமையிலான இந்திய அணி இரு முறை ஒருநாள் உலகக் கோப்பைகளில் இறுதிச் சுற்று வரை முன்னேறியது. 10 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களைக் குவித்ததன் மூலம் 2021-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த வீராங்கனையானார்.

இந்தியாவுக்காக 12 டெஸ்டுகள், 232 ஒருநாள் மற்றும் 89 டி20 ஆட்டங்களில் பங்கேற்ற மிதாலி ராஜ், 2022-ல் ஓய்வு பெற்றார்.

Comments