பெர்த் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

ESPNcricinfo staff

பேட் கம்மின்ஸ் © Getty Images

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்துக்கு பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் டிசம்பர் 14-ம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்துக்கு பேட் கம்மின்ஸ் தலைமையில் 14 வீரர்கள் அடங்கிய ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலையில் நடைபெற்ற கடைசி ஆஷஸ் டெஸ்டில் விளையாடிய 11 வீரர்களில் 10 வீரர்கள் இந்த டெஸ்டுக்கான அணியில் இடம்பெற்றுள்ளார்கள். நேதன் லயன் காயத்திலிருந்து குணமடைந்துவிட்டதால் டாட் மர்ஃபிக்குப் பதில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பிங் இடத்தை ஜோஷ் இங்லிஸிடம் பறிகொடுத்த அலெக்ஸ் கேரி, டெஸ்டில் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளார். கடந்த வாரம் தெற்கு ஆஸ்திரேலியாவுக்காக விளையாடிய கேரி 81 ரன்கள் எடுத்தார்.

ஏற்கெனவே, மிட்செல் மார்ஷ் அணியிலிருக்க கூடுதல் பேட்டர்/ஆல்-ரவுண்டராக கேம்ரூன் கிரீன் சேர்க்கப்பட்டுள்ளார். கடைசியாக விளையாடிய ஆஷஸ் டெஸ்டில் கிரீன் நீக்கப்பட்டிருந்தார். பாகிஸ்தான் விளையாடவுள்ள பயிற்சி ஆட்டத்தில் பிரதமர் லெவன் அணியில் இடம்பெற்றவர்களிலிருந்து கேம்ரூன் கிரீன் மட்டுமே முதல் டெஸ்டுக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளார். கூடுதல் வேகப்பந்துவீச்சாளராக ஸ்காட் போலண்ட் இடம்பெற்றுள்ளார்.

சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெற விரும்பும் டேவிட் வார்னர் முதல் டெஸ்டுக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த இரு ஆண்டுகளில் ஒரேயொரு இரட்டைச் சதம் மட்டுமே அடித்து மோசமான பேட்டிங் ஃபார்மில் உள்ளார். எனினும், தலைசிறந்த தொடக்க பேட்டர்களில் டேவிட் வார்னரும் ஒருவர் என ஆஸ்திரேலிய தேர்வுக் குழு அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி:

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேம்ரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், நேதன் லயான், மிட்செல் மார்ஷ், லேன்ஸ் மோரிஸ், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.

Comments