கதாநாயக பிம்பம் தேவையா?: வார்னரை சாடிய ஜான்சன்
சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெற நினைக்கும் டேவிட் வார்னரின் விருப்பத்தை ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் சாடியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் பாகிஸ்தான் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. கடைசி டெஸ்ட் சிட்னியில் நடைபெறுகிறது. இந்த டெஸ்டுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற தொடக்க பேட்டர் டேவிட் வார்னர் விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதற்கேற்ப பெர்த்தில் டிசம்பர் 14-ம் தேதி தொடங்கவுள்ள முதல் டெஸ்டுக்கான 14 வீரர்கள் அடங்கிய அணியில் வார்னர் இடம்பெற்றுள்ளார். விளையாடும் அணியில் வார்னர் இடம்பெறுவார் என தேர்வுக் குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெற நினைக்கும் வார்னரின் விருப்பத்தை ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன் சாடியுள்ளார்.
கடந்த இரு வருடங்களில் டேவிட் வார்னரின் பேட்டிங் சராசரி, 36 டெஸ்ட் இன்னிங்ஸில் 26.74. இதுபோல பேட்டிங்கில் தடுமாறி வரும் வார்னரின் விருப்பத்துக்குத் தேர்வுக்குழு மதிப்பளிப்பது ஏன் என தி வெஸ்ட் ஆஸ்திரேலியனில் எழுதியுள்ள கட்டுரையில் ஜான்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
ஐந்து ஆண்டுகள் ஆனபோதிலும், பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் டேவிட் வார்னர் முழுப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. இதிலிருக்கும் ஆணவமும், நாட்டின் அவமதிக்கும் செயலும் டெஸ்டிலிருந்து ஓய்வு பெறும் முறையில் வெளிப்படுகிறது. டேவிட் வார்னரின் கடைசி டெஸ்ட் தொடருக்கு நாம் ஏன் தயாராக வேண்டும்?
தொடக்க பேட்டிங்கில் தடுமாறி வரும் வீரரால், ஓய்வு பெறும் நாளை எப்படி தீர்மானிக்க முடிகிறது? ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்ந்த மிகப் பெரிய அவமானத்துக்குரிய சம்பவத்தில், முக்கிய அங்கமாக இருந்த ஒருவர் கதாநாயகப் பிம்பத்துடன் விடைபெற முனைவது ஏன்?
டேவிட் வார்னர் டெஸ்ட் கேப்டன் இல்லை. அதற்கானத் தகுதியும் அவருக்கு இல்லை. சொல்லப்போனால், கேப்டன் பொறுப்புக்கான வாழ்நாள் தடையுடன்தான் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.
ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையைப் பார்த்தால், அவர் நல்ல பேட்டிங்கையே வெளிப்படுத்தியிருக்கிறார். சிலர் தலைசிறந்த தொடக்க பேட்டர்களுள் ஒருவர் என்றும் வர்ணிப்பார்கள். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக அவரது டெஸ்ட் சராசரி, கீழ்வரிசை பேட்டர்கள் மகிழ்ச்சி கொள்ளும் சராசரிக்கு நிகராக சுமாராகத்தான் உள்ளது.
பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தை நிறைய பேரால் மறக்கவே முடியாது. இதில் வார்னர் மட்டுமே ஈடுபடவில்லை என்றாலும், இவர் அப்போது அணியில் மூத்த வீரர்.
ஓய்வு பெறுவதற்கான நாளை ஓராண்டு முன்பே தீர்மானிக்க, இவர் கிரிக்கெட்டை விடவும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியைவிடவும் பெரிய மனிதரா என்ன?
கடந்தாண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மெல்போர்னில் இரட்டைச் சதம் அடித்தார். ஆனால், கடந்த சில வருடங்களில் இவர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது அந்த ஆட்டத்தில் மட்டுமே. ஆஷஸில் விளையாடுவதற்கு முன்பு கடைசி 17 டெஸ்ட் இன்னிங்ஸில் ஒருமுறை மட்டுமே அரை சதத்தைக் கடந்திருக்கிறார் வார்னர் என்ற ஜான்சன், வார்னரைத் தேர்வு செய்த தேர்வுக்குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லியையும் தன்னுடைய கட்டுரையில் விமர்சித்துள்ளார்.