செப்டம்பர் 01: நீது டேவிட் பிறந்தநாள்!
இந்திய மகளிர் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரான நீது டேவிட் இன்று தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் கவனம் பெறக் காரணமாக இருந்தவர்களுள் ஒருவரான நீது டேவிட், இந்தியாவுக்காக 97 ஒருநாள் மற்றும் 10 டெஸ்டுகளில் பங்கேற்றவர். சர்வதேச கிரிக்கெட்டில் 182 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர், 1995-ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதை யாராலும் மறக்க முடியாது.
மகளிர் ஒருநாள் ஆட்டங்களில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியவர்களில் நீது டேவிட்டின் 16.34 சராசரி இன்றளவும் சாதனையாகக் கருதப்படுகிறது. 2008-ல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற நீது டேவிட், 2020-ல் இந்திய மகளிர் தேர்வுக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
**
இந்தியாவின் 22 வருடக் கனவு!
2015-ல் இதே நாளில் தான் இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்டில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்தியா. 1993-க்குப் பிறகு இலங்கை மண்ணில் இந்தியா கைப்பற்றிய முதல் டெஸ்ட் தொடர் இதுதான்.
கொழும்பில் நடைபெற்ற அந்த டெஸ்டின் முதல் நாள் மழையால் பாதிக்கப்பட்டாலும் புஜாராவின் சதத்தால் இந்தியா 312 ரன்கள் குவித்தது. பவுன்சர்களுக்கு ஏற்ற களத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கையைத் திணறடித்தார். இதனால் இந்தியா 111 ரன்கள் முன்னிலை பெற்றது.
இரண்டாம் இன்னிங்ஸில் அஸ்வின், ரோஹித் சர்மா அரை சதம் அடிக்க இலங்கைக்கு 386 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஏஞ்சலோ மேத்திவ்ஸ் சதம் அடித்தாலும் இலங்கை 117 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 2011-க்குப் பிறகு வெளிநாடுகளில் இந்தியா கைப்பற்றிய முதல் தொடராகவும் இது அமைந்தது.