மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடர்: இங்கிலாந்துக்குப் பின்னடைவு
இங்கிலாந்து அணி டிசம்பர் முதல் வாரத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்தத் தொடரில் மூன்று ஒருநாள் மற்றும் 5 டி20 ஆட்டங்களில் இரு அணிகளும் விளையாடுகின்றன.
இதற்கான இங்கிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் இடம்பெற்றிருந்த வேகப்பந்துவீச்சாளரான ஜோஷ் டங்க் காயம் காரணமாக இந்தச் சுற்றுப் பயணத்தில் இருந்து விலகியுள்ளார். அமீரகத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமின் போது டங்கிற்குக் காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக மேத்யூ பாட்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
26 வயதான டங்க் இதுவரையில் இரு டெஸ்டுகளில் பங்கேற்று 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வெள்ளைப் பந்துப் போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு இந்தச் சுற்றுப் பயணத்தின் மூலம் அவருக்குக் கிடைத்தது. இந்நிலையில், காயம் காரணமாக அவர் இதிலிருந்து விலகியுள்ளார். இருப்பினும், அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் டங்க் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணிக்கு 90 மைல் வேகத்தில் பந்துவீசக்கூடிய டங்கிற்கு இரு வருடங்களுக்கான ஒப்பந்தத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அளித்திருந்தது.
மேத்யூ பாட்ஸ் இங்கிலாந்து அணிக்காக 6 டெஸ்டுகளில் 23 விக்கெட்டுகளையும் 2 ஒருநாள் ஆட்டங்களில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். கடைசியாக அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் பாட்ஸ் பங்கேற்றார். தற்போது அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.