குஜராத் உடன் இறுதி யுத்தம்: ஐந்தாவது ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்பில் தோனி!
சென்னை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் உணர்ச்சிகளை அதிகம் வெளிப்படுத்தாதவர். குஜராத் பயிற்சியாளர் நெஹ்ராவோ இளநீர் சகிதமாக பவுண்டரி லைனை எப்போதும் வலம் வந்துகொண்டிருப்பவர்.
ESPNcricinfo staff
27-May-2023
தோனி உடன் பாண்டியா • BCCI
காடாளும் சிங்கமும் பாயும் புலியும் நேருக்கு நேர் சந்தித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கப் போகிறது அஹமதாபாதில் நாளை நடக்கவிருக்கும் ஐபிஎல் 2023 இறுதியாட்டம். சென்னை - குஜராத் அணிகளுடனான ஆட்டத்துடன் தொடங்கிய இந்தப் பருவம் அதே அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துடன் நிறைவுபெறவிருக்கிறது.
10 அணிகள் கோப்பைக்காகப் பலப்பரீட்சை நடத்தியதால் எப்போதையும் விட இந்த ஆண்டு போட்டி கடுமையானதாக இருந்தது. பல ஆட்டங்கள் கடைசி ஓவர் திரில்லர்களாக மாறி ரசிகர்களுக்கு விருந்து அளித்தன. தில்லி, ஹைதராபாத் அணிகளைத் தவிர மற்ற 8 அணிகளுமே ஃபிளேஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறும் முனைப்பைக் காட்டியதைப் பார்க்க முடிந்தது.
ஐபிஎல் நடப்பு சாம்பியன் குஜராத்தும் கடந்த ஆண்டு புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்த சென்னையும் முதலிரண்டு அணிகளாக பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றன. சென்னை அணி, அனலிடிக்ஸ் (analytics), மேட்ச் அப் (match up) போன்ற நவீன டி20 வஸ்துகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
கேப்டன் தோனி சொல்வதுதான் அங்கு வேதவாக்கு. வீரர்களின் அனுபவத்தின் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் போக்கில் விட்டுவிடுவார். உதாரணமாக குஜராத்துக்கு எதிரான முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் கான்வே குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியதை அவர் அலட்டிக்கொள்ளவே இல்லை. குஜராத்தோ யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் நல்கண்டேவை களமிறக்கியது.
சென்னைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் உணர்ச்சிகளை அதிகம் வெளிப்படுத்தாதவர். குஜராத் பயிற்சியாளர் நெஹ்ராவோ இளநீர் சகிதமாக பவுண்டரி லைனை எப்போதும் வலம் வந்துகொண்டிருப்பவர். இரு அணிகளும் அசாத்தியமான் அணிகள் என்றாலும் இருவரின் ஆட்டப் பாணியும் முழுக்க மாறுபட்டது.
இந்தப் பருவத்தில் 851 ரன்களைக் குவித்து 'இந்திய கிரிக்கெட்டின் இளவரசர்' கிரீடத்தை சூடிக்கொண்டுள்ளார் ஷுப்மன் கில். மாசற்ற மாணிக்கம் போல பேட்டிங் தொழில்நுட்பம் கொண்ட இவருக்கு எதிராக ஒரு பலே வியூகத்தை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் தோனி. குஜராத்துக்காக அதிக ரன்கள் குவித்த பேட்டர்களின் பட்டியலில் கில்லுக்கு அடுத்ததாக 325 ரன்களுடன் பாண்டியா உள்ளார்.
பேட்டிங்கில் கில்லை மட்டுமே நம்பிருந்தாலும் குஜராத்தின் பந்துவீச்சு எதிரணி பேட்டர்களை அச்சுறுத்தும் விதமாக உள்ளது. அதிக விக்கெட்டுகள் குவித்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிரு இடங்களில் ஷமி, ரஷித் கான் இருவரும் உள்ளார்கள். இறுதிக்கட்ட ஓவர்களில் பேட்டர்களின் பொறுமையைச் சோதிக்கும் மோஹித் சர்மா, 24 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
பவர்பிளேவுக்கு ஷமி, நடு ஓவர்களுக்கு ஆஃப்கானிஸ்தான் சுழல் கூட்டணி, இறுதிக்கட்டத்துக்கு மோஹித் என்பது பாண்டியா - நெஹ்ரா கூட்டணியின் வியூகம். ஷமி, பாண்டியா, ரஷித், கில் போன்ற நட்சத்திரப் பெயர்கள் சென்னையில் இல்லை; ஆனால், ஹேடனின் வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் குப்பையைப் புதையலாக மாற்றும் வித்தை தெரிந்த தோனி இருக்கிறார்.
15 ஆட்டங்களில் விளையாடியுள்ள கான்வே 6 அரை சதங்களுடன் 625 ரன்கள் குவித்துள்ளார்; ருதுராஜ் 4 அரை சதங்களுடன் 564 ரன்களைக் குவித்துள்ளார். குஜராத்தின் அபாயகரமான பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு இவர்களின் தொடக்கம் ரொம்பவே முக்கியம். வேகப்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்ளும் ரஹானே 299 ரன்களையும் 'ஸ்பின் ஹிட்டர்' ஷிவம் துபே 33 சிக்ஸர்களுடன் 386 ரன்களையும் குவித்துள்ளார்கள்.
தோனியின் இளம் வேகப்பந்து வீச்சுப்படை இந்த வருடம் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. டுவைன் பிராவோவின் மேற்பார்வையில் 'குட்டி மலிங்கா' பதிரானா அசைக்க முடியாத இறுதிக்கட்ட ஓவர் பந்துவீச்சாளராக உருவெடுத்துள்ளார். தேவைக்கு அதிகமான ரன்களை விட்டுக்கொடுத்தாலும் 21 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தோனியின் முக்கியத் தளபதியாக தேஷ்பாண்டே மாறியுள்ளார்.
இந்தப் பருவத்தில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணி பேட்டர்களின் சிம்ம சொப்பனாமாக மாறியுள்ளார் ஜடேஜா.
தொடர் முழுக்கவும் சரியான ஃபார்மில் இல்லாத தீக்ஷனா குஜராத்துக்கு எதிரான முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் தான் யார் என்பதை நிரூபித்தார். ஆல்ரவுண்டர் மொயீன் அலியும் கைகொடுக்கும் பட்சத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பை வெல்லத் துடிக்கும் குஜராத்துக்கு 'தல' தோனியால் நெருக்கடி கொடுக்க முடியும்.
குஜராத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் நாளை விளையாடுவதன் மூலம் ஐபிஎல்-லில் 250 ஆட்டங்கள் விளையாடிய ஒரே வீரர் என்ற சாதனையை தோனி படைக்கவிருக்கிறார். இதுவே ஐபிஎல்-லில் தனது கடைசி ஆண்டாக இருக்கும் என்று தோனியே சூசகமாகத் தெரிவித்துவிட்டதால், கேப்டனை வெற்றியுடன் வழியனுப்பி வைக்க வேண்டும் என்கிற உறுதியுடன் சென்னை அணி நாளை விளையாடும் என எதிர்பார்க்கலாம்.
கடைசியாக இரு அணிகளும் விளையாடிய நான்கில் மூன்று ஆட்டங்களில் குஜராத் அணி வெற்றிபெற்றுள்ளது. ஆனால் மிகச் சமீபத்தில் விளையாடிய ஆட்டத்தில் வெற்றிபெற்றதால் சென்னை அணி அதிக நம்பிக்கையுடன் உள்ளது. 2008 ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் ஷேன் வார்னை எதிர்கொண்ட தோனி, இந்தமுறை ஹார்திக் பாண்டியாவை எதிர்கொள்ளவுள்ளார்.
10 முறை இறுதிச்சுற்றுக்கு சென்ற ஓர் அணி, தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிச்சுற்றுக்கு சென்ற அணியை நாளை எதிர்கொள்ள உள்ளது. 1,32,000 இருக்கைகள் கொண்ட அஹமதாபாத் நரேந்திர மோதி மைதானத்தில் நாளை மஞ்சள் ஆர்மி ஆர்ப்பரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாய்ப்புள்ளஅணி
சிஎஸ்கே: ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்யா ரஹானே, ஷிவம் துபே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (வி, கே), தீபக் சஹார், மதீஷா பதிரானா, மஹீஷ் தீக்ஷனா.
குஜராத்: விருத்திமான் சஹா (வி), ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஹார்திக் பாண்டியா (கே), டேவிட் மில்லர், ராகுல் தெவாதியா, விஜய் சங்கர், ரஷித் கான், நூர் அஹமது, முஹமது ஷமி, மோஹித் சர்மா.