குஜராத்தை வீழ்த்தி 10-வது முறையாக இறுதிச்சுற்றுக்குள் நுழைந்த சிஎஸ்கே!
ஐபிஎல் போட்டியில் 10-வது முறையாக இறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ளது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
ESPNcricinfo staff
23-May-2023
ஜடேஜா, தோனி மற்றும் மொயீன் அலி • BCCI
குஜராத்தைச் சொந்த மண்ணில் சிஎஸ்கே வீழ்த்துமா? இந்தக் கேள்விக்கான விடையை அறிந்துகொள்ள அனைத்து ஐபிஎல் ரசிகர்களுக்கும் பெரிய ஆர்வம் இருந்தது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
2-வது ஓவரில் இந்த வருடம் தனது முதல் ஆட்டத்தை விளையாடிய நல்கண்டேவின் பந்தில் ஷுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்தார் ருதுராஜ். இதனால் மைதானமே அமைதியானது. பின்னர் நோ பால் என நடுவர் அறிவித்தார். ஃப்ரீ ஹிட்டில் சிக்ஸரும் அடுத்தப் பந்தில் பவுண்டரியையும் ருதுராஜ் பறக்கவிட ரசிகர்களிடையே உற்சாக அலை எழுந்தது. பவர்பிளேயில் சென்னை அணி விக்கெட் எதுவும் இழக்காமல் 49 ரன்களை எடுத்தது.
நோ பாலால் கிடைத்த மறுவாய்ப்பை நன்குப் பயன்படுத்திக்கொண்ட ருதுராஜ் 36 பந்துகளில் அரை சதம் அடித்தார். 10 ஓவர்களில் 85 ரன்களை எடுத்தது சென்னை அணி. ருதுராஜ் 60 ரன்கள் எடுத்து சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே நூர் அஹமதின் சுழலில் ஸ்டம்புகள் சிதற துபே வெளியேறினார். இதனால் நடு ஓவர்களில் 4 ஓவர்களுக்கு பவுண்டரியே கிடைக்கவில்லை.
நல்கண்டே வீசிய 15-வது ஓவரில் கான்வே ஒரு பவுண்டரி அடிக்க, தன் பங்குக்கு சிக்ஸரைப் பறக்கவிட்ட ரஹானே அடுத்தப் பந்திலேயே ஆட்டமிழந்தார். அதே ஓவரில் பவுண்டரியுடன் இன்னிங்ஸைத் தொடங்கினார் ராயுடு. 15-வது ஓவரில் 18 ரன்கள் கிடைத்தன. இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே திணறிய கான்வே 40 ரன்கள் எடுத்து 16-வது ஓவரில் வெளியேறினார். சென்னை அணி அடுத்த பவுண்டரிக்கு 15 பந்துகள் காத்திருந்தது.
ஒருவழியாக ரஷித் கான் வீசிய 18-வது ஓவரில் ராயுடு சிக்ஸரை அடித்தாலும் அடுத்தப் பந்தில் சனகாவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். தோனி 1 ரன்னில் ஆட்டமிழக்க தலயின் சிக்ஸருக்காகக் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ஷமி வீசிய கடைசி ஓவரில் ஜடேஜா ஒரு பவுண்டரியும் மொயீன் அலி ஒரு சிக்ஸரையும் விளாசினர். கடைசிப் பந்தையும் சிக்ஸருக்கு விளாச முயன்று போல்ட் ஆனார் ஜடேஜா. இறுதியில் 172 ரன்களை எடுத்தது சென்னை.
சுழற்பந்துவீச்சை சரியாகப் பயன்படுத்தினால் வெற்றியை வசமாக்கலாம் என்ற நிலையில் களமிறங்கியது மஞ்சள் படை. 2 பவுண்டரிகள் அடித்த சஹா, 3-வது ஓவரில் சஹார் பந்தில் ஆட்டமிழந்தார். ஆஃப் சைட் பக்கம் ஃபீல்டர்களைக் குவித்து தீக்ஷனாவை அந்தப் பக்கம் வீச வைத்தார் தோனி. இந்த வியூகத்தில் விக்கெட்டைப் பறிகொடுத்தார் ஹார்திக் பாண்டியா. பவர்பிளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 41 ரன்களை எடுத்தது குஜராத்.
10-வது ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்ஸரை அடித்த சனகாவை 11-வது ஓவரில் ஆட்டமிழக்கச் செய்தார் ஜடேஜா. டேவிட் மில்லரை 4 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து மேலும் அசத்தினார் ஜடேஜா. அடுத்த ஓவரில் சஹார் பந்தில் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ஷுப்மன் கில். சிஎஸ்கே ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்தார்கள். தெவாதியா 3 ரன்களுக்கு தீக்ஷனா பந்தில் போல்ட் ஆனார். இதனால் 5 ஓவர்களுக்கு குஜராத் அணியால் ஒரு பவுண்டரியும் அடிக்க முடியாமல் போனது. கடைசி 5 ஓவர்களில் 71 ரன்கள் தேவைப்பட்டன. அடுத்த இரு ஓவர்களில் குஜராத்துக்கு நிறைய ரன்கள் கிடைத்தன. ரஷித் கானும் விஜய் சங்கரும் அதிரடியாக விளையாடி சிக்ஸர்களும் பவுண்டரிகளும் அடித்தார்கள். இதனால் ஆட்டம் பரபரப்பானது. ஆனால் பதிரனா வீசிய 18-வது ஓவரில் கெயிக்வாடின் அட்டகாசமான கேட்சால் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் விஜய் சங்கர். நல்கண்டே முதல் பந்திலேயே ரன் அவுட் ஆனார்.
3 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடித்து மிரட்டிய ரஷித் கான், தேஷ்பாண்டே பந்தில் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அந்தத் தருணம் சிஎஸ்கேவின் வெற்றி உறுதியானது. கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டன. 11 ரன்கள் மட்டும் கொடுத்தார் பதிரனா. 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன குஜராத் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஐபிஎல் போட்டியில் 10-வது முறையாக இறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ளது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.