ஆட்டங்கள் (6)
WC Warm-up (2)
Asian Games (M) (1)
IND v ஆஸி (3)
ரிப்போர்ட்

ஷுப்மன் கில் அதிரடி சதம்: மும்பையை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு நுழைந்த குஜராத்!

கிரீன் வீசிய 15-வது ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்த கில், 49 பந்துகளில் சதம் அடித்தார். கடந்த 4 ஆட்டங்களில் இது அவருக்கு மூன்றாவது சதம்.

இரண்டாவது முறையாக இறுதியாட்டத்துக்கு நுழைந்த குஜராத்  •  BCCI

இரண்டாவது முறையாக இறுதியாட்டத்துக்கு நுழைந்த குஜராத்  •  BCCI

ஷுப்மன் கில் 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தபோது கொடுத்த கடினமான கேட்ச் வாய்ப்பைத் தவறவிட்டார் டிம் டேவிட். இதைப் பயன்படுத்திக் கொண்ட கில் சதமடித்து குஜராத் அணியை அபார வெற்றிபெற வைத்தார்.
மழை காரணமாக ஆட்டம் அரைமணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. எலிமினேட்டரில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த ரோஹித், இன்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
பெஹ்ரன்டார்ஃப் முதல் ஓவரை நன்றாக வீசினார். முதலிரண்டு ஓவர்களில் ஸ்விங் லேசாக எட்டிப் பார்த்தது. இதன்பிறகு, ஷுப்மன் கில் ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். பவர்பிளேயின் கடைசி இரண்டு ஓவர்களில் 23 ரன்கள் அடிக்க, ஆறு ஓவர்களில் குஜராத் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் எடுத்தது.
பவர்பிளே முடிந்தவுடன் பியூஷ் சாவ்லா வந்தார், சஹா விக்கெட்டை வீழ்த்தினார். கூட்டணி முறிந்தது. இவரது இரண்டாவது ஓவரில் சாய் சுதர்சன் ஒரு பவுண்டரியும், கில் ஒரு சிக்ஸரும் அடிக்க 16 ரன்கள் கிடைத்தன. கில் 32 பந்துகளில் அரை சதம் அடித்தார். குஜராத் 10 ஓவர்களில் 91 ரன்கள் எடுத்தது.
கடந்த ஆட்டத்தில் ஹீரோவாக ஜொலித்த ஆகாஷ் மத்வால் 12-வது ஓவரை வீசினார். முதலிரண்டு பந்துகளில் சிக்ஸர் அடித்து அவரை வரவேற்ற கில். 5-வது பந்தையும் சிக்ஸருக்குப் பறக்கவிட அணியின் ரன் ரேட் 10-ஐ தொட்டது.
அடுத்த ஓவரை வீசினார் பியூஷ் சாவ்லா. இந்த ஓவரில் இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்தார் கில். 12, 13-வது ஓவர்களில் மட்டும் குஜராத் 41 ரன்கள் எடுத்தது. குஜராத் ஆட்டத்தை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தியது இந்த இரண்டு ஓவர்கள்.
கிரீன் வீசிய 15-வது ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்த கில், 49 பந்துகளில் சதம் அடித்தார். கடந்த 4 ஆட்டங்களில் இது மூன்றாவது சதம். ரோஹித் சர்மாவே கில்லின் ஆட்டத்தைப் பாராட்டிச் சென்றார். இந்த ஓவரில் இரண்டு சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் அடித்தார். 15 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது குஜராத்.
கில் புயல் வேகத்தில் பயணிக்க, சாய் சுதர்சன் அழகான ஷாட்கள் மூலம் ரன்கள் குவித்து கில்லுக்கு ஒத்துழைப்பு தந்து விளையாடினார். கடைசிக் கட்ட அதிரடிக்கு சாய் சுதர்சன் மாறுவாரா என்ற கேள்வி மட்டும் இருந்தது. இவரும் கிறிஸ் ஜோர்டன் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை அடித்தார்.
17-வது ஓவரை வீசிய ஆகாஷ் மத்வால் ஒரு பவுண்டரி, நோ-பால் கொடுத்தாலும், கில்லின் அட்டகாசமான இன்னிங்ஸை முடிவுக்குக் கொண்டு வந்தார். 60 பந்துகளை எதிர்கொண்ட கில் 10 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் உள்பட 129 ரன்கள் குவித்தார்.
கடைசிக் கட்ட அதிரடிக்கு சாய் சுதர்சன் தடுமாறியது தெரிந்தது. பெஹ்ரன்டார்ஃப் பந்தில் ஸ்கூப் செய்து ஒரு பவுண்டரி அடித்தால், 18-வது ஓவரில் 7 ரன்கள் மட்டுமே கிடைத்தன. மத்வால் வீசிய 19-வது ஓவரை ஹார்திக் பாண்டியா சிக்ஸர் அடித்துத் தொடங்கினாலும், கடைசி இரண்டு பந்துகளில் சாய் சுதர்சனால் ரன் அடிக்க முடியவில்லை. ரிடையர்ட் அவுட் ஆன அவர் 31 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார்.
கடைசி ஓவரில் மில்லர், தெவாடியா களமிறங்குவார்கள் எனப் பார்த்தால் ரஷித் கானைக் களமிறக்கியது குஜராத். இவரும் முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டி தன் மேல் அணி நிர்வாகம் வைத்த நம்பிக்கைக்கு நியாயம் சேர்த்தார். ஜோர்டன் வீசிய கடைசி இரண்டு பந்துகளில் பவுண்டரியும், சிக்ஸரும் அடித்து அதிரடியாக இன்னிங்ஸை நிறைவு செய்தார் ஹார்திக்.
20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 233 ரன்கள் குவித்தது குஜராத். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹார்திக் பாண்டியா 13 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார்.
கடந்த ஆட்டத்தில் ஐந்து ரன்கள் மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய மத்வால், இந்த ஆட்டத்தில் 52 ரன்களைக் கொடுத்து 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.
ஃபீல்டிங்கின்போது ஜோர்டனைத் தட்டி வாழ்த்து சொல்லச் சென்றார் கிஷன். அப்போது, ஜோர்டனின் முழங்கை கிஷனின் கண்ணைத் தாக்கியதில் அவர் களத்திலிருந்து வெளியேறினார். விஷ்ணு வினோத் இவருக்குப் பதில் கீப்பிங் செய்தார். பேட்டிங்கின்போதும் கிஷன் விளையாடவில்லை. தொடக்க பேட்டராக ரோஹித் சர்மாவுடன் நேஹால் வதேரா களமிறங்கினார். முகமது ஷமி வீசிய முதல் ஓவரில் சிறப்பான பவுண்டரி அடித்தாலும், அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.
கிரீன் பவுண்டரி அடித்து இன்னிங்ஸைத் தொடங்கினார். ஆனால், ஹார்திக் பாண்டியா பந்து இவரது முழங்கையைத் தாக்க, இவரும் ரிடையர்ட் ஹர்ட் முறையில் களத்திலிருந்து வெளியேறினார். ஷமி வீசிய அடுத்த ஓவரில் புல் ஷாட் விளையாடப் பார்த்து ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். கிஷன் இல்லை, கிரீன் வெளியேறியிருக்கிறார், ரோஹித்தும் அவுட் என திக்குமுக்காடிப்போனது மும்பை.
இளம் திலக் வர்மா, வந்தவுடன் ஷமி பந்தில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை மும்பைக்கு சாதமாக மாற்ற முயற்சித்தார். அடுத்தது ஹார்திக் பாண்டியா ஓவரில் ஒரு சிக்ஸர். ஷமி வீசிய 4-வது ஓவரில் தொடர்ச்சியாக நான்கு பவுண்டரிகள் அடித்த திலக் வர்மா, இதே ஓவரை சிக்ஸருடன் நிறைவு செய்தார். இந்த ஓவரில் மட்டும் 24 ரன்கள்.
மும்பை அதிரடியாக ஐந்து ஓவர்களில் 65 ரன்கள் எடுக்க, பவர்பிளேயின் கடைசி ஓவரை வீச ரஷித் கானை அழைத்தார் ஹார்திக் பாண்டியா. இவர் பவுண்டரி கொடுத்தாலும், அவர் திலக் வர்மாவை போல்டாக்கினார். திலக் வர்மா 14 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார்.
அடுத்த மூன்று ஓவர்களில் மும்பை 23 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரஷித் கான் வீசிய 10-வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் 2 பவுண்டரிகளையும், கிரீன் ஒரு பவுண்டரியும் அடித்தார்கள். 10 ஓவர்களில் மும்பை 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்தது.
பெரிய பாட்னர்ஷிப்பாக மாற வேண்டிய நேரத்தில் கிரீனை தனது முதல் ஓவரிலேயே அவுட்டாக்கினார் ஜோஷ் லிட்டில். இஷான் கிஷனுக்குப் பதில் விஷ்ணு வினோத் களமிறங்கினார். 12, 13-வது ஓவர்களில் ரன் வேகம் கட்டுப்படுத்தப்பட்டதால் சூர்யகுமார் யாதவுக்கு நெருக்கடி அதிகரித்தது.
லிட்டில் வீசிய அடுத்த ஓவரில் பவுண்டரியும், சிக்ஸரும் அடித்த சூர்யகுமார் 32 பந்துகளில் அரை சதம் அடித்தார். கடைசி ஆறு ஓவர்களில் 85 ரன்கள் தேவைப்பட்டன. மோஹித் சர்மா ஓவரின் இரண்டாவது பந்தை சூர்யகுமார் யாதவ் சிக்ஸருக்கு அனுப்பினாலும், அடுத்த பந்தில் ஸ்கூப் ஷாட் விளையாடப் பார்த்து போல்டானார். இதே ஓவரில் விஷ்ணுவும் எளிதான கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 16-வது ஓவரை வீசிய ரஷித் கான், மும்பையின் கடைசி நம்பிக்கையான டிம் டேவிட்டை எல்பிடபிள்யு செய்தார். அப்போதே ஆட்டத்தின் முடிவு தெரிந்துவிட்டது. 17-வது ஓவரை வீசிய மோஹித் சர்மா முதல் பந்தில் கிறிஸ் ஜோர்டனையும், மூன்றாவது பந்தில் பியூஷ் சாவ்லாவையும் வீழ்த்தினார். 19-வது ஓவரை வீசிய மோஹித், கார்த்திகேயாவை அவுட்டாக்கினார். இது மோஹித் சர்மாவின் ஐந்தாவது விக்கெட்.
மும்பை இந்தியன்ஸ் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற குஜராத் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது.
அஹமதாபாத்தில் குஜராத் - சென்னை இடையிலான ஆட்டத்துடன் தொடங்கிய ஐபிஎல் 2023, அதே அஹமதாபாத்தில் சென்னை - குஜராத் இடையிலான ஆட்டத்துடன் நிறைவுபெறவிருக்கிறது.

Language
Tamil
வெற்றி நிகழ்தகவு
ஜிடி 100%
ஜிடிஎம்ஐ
100%50%100%ஜிடி இன்னிங்ஸ்எம்ஐ இன்னிங்ஸ்

ஓவர் 19 • எம்ஐ 171/10

குமார் கார்த்திகேயா சி மில்லர் பி மோஹித் 6 (7பி 1x4 0x6 10நி) எஸ்ஆர்: 85.71
W
டைட்டன்ஸ் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
ஸ்மார்ட் ஸ்டாட்
AskESPNcricinfo Logo
Instant answers to T20 questions
மும்பை இன்னிங்ஸ்
<1 / 3>
இந்தியன் பிரிமீயர் லீக்
அணிவெதோபிடிNRR
ஜிடி14104200.809
சிஎஸ்கே1485170.652
எல்எஸ்ஜி1485170.284
எம்ஐ148616-0.044
ஆர்.ஆர்1477140.148
ஆர்சிபி1477140.135
கேகேஆர்146812-0.239
பிபிகேஎஸ்146812-0.304
டிசி145910-0.808
எஸ்ஆர்எச்144108-0.590