ஆட்டங்கள் (7)
உலகக் கோப்பை (1)
WC Warm-up (2)
Asian Games (M) (1)
IND v ஆஸி (3)
செய்திகள்

ஆஷஸ்: ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லேனிங் விலகல்!

மெக் லேனிங் ஏற்கெனவே 2017-18 ஆஷஸ் தொடரிலிருந்து தோள்பட்டைக் காயம் காரணமாக விலகினார்.

மெக் லேனிங்  •  ICC/Getty Images

மெக் லேனிங்  •  ICC/Getty Images

ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மெக் லேனிங் மருத்துவக் காரணங்களுக்காக ஆஷஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார். இவருக்குப் பதில் அலிஸா ஹீலி அணியை வழிநடத்தவுள்ளார்.
மன அழுத்தம் காரணமாக கிரிக்கெட்டிலிருந்து நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்ட மெக் லேனிங் கடந்த ஜனவரியில் மீண்டும் விளையாட்டுக்குத் திரும்பினார். மார்ச் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பையில் அணியை வழிநடத்தி கோப்பை வென்று கொடுத்தார். தொடர்ந்து அறிமுக மகளிர் பிரீமியர் லீக்கில் தில்லி கேபிடல்ஸ் அணியை வழிநடத்தினார்.
மூன்று வகை கிரிக்கெட் போட்டிகள் அடங்கிய ஆஷஸ் தொடர் ஜூன் 22-ம் தேதி தொடங்குகிறது. நாட்டிங்ஹாமில் ஒரேயொரு டெஸ்ட் ஆட்டம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து தலா மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள், டி20 தொடர்கள் நடைபெறவுள்ளன.
இதில் விளையாடுவதற்கு லேனிங் தயாராக இருந்த நிலையில், தற்போது மருத்துவக் காரணங்களுக்காக போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
"மெக் லேனிங் வீட்டில் இருந்தபடியே மருத்துவப் பணியாளர்களுடன் இணைந்து செயல்படவுள்ளார். இந்த நேரத்தில் அவரது தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும்" எனக் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இவர் மீண்டும் களத்துக்குத் திரும்பும் காலவரையறை குறித்து எதுவும் தெளிவுபடுத்தப்படவில்லை.
ஆஷஸ் தொடரில் அலிஸா ஹீலி அணியை வழிநடத்துகிறார். துணை கேப்டனாக தஹிலா மெக்ராத் அறிவிக்கப்பட்டுள்ளார். மெக் லேனிங்குக்கு மாற்றாக யாரும் அறிவிக்கப்படவில்லை.
மெக் லேனிங் ஏற்கெனவே 2017-18 ஆஷஸ் தொடரிலிருந்து தோள்பட்டைக் காயம் காரணமாக விலகினார். தற்போது இரண்டாவது முறையாக ஆஷஸ் தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார்.