அம்சங்கள்

ஸ்டீபன் ஃபிளமிங்: சிஎஸ்கேவின் வாத்தியார்!

யாருக்கு என்ன பொறுப்பை கொடுக்க வேண்டும், எப்படி முன்னின்று அணியை வழிநடத்த வேண்டும் என்ற கலையை ஃபிளமிங் இளம் வயதிலேயே கற்றுக் கொண்டார் என்கிறார் மார்ட்டின் குரோ

ஸ்டீபன் ஃபிளமிங் உடன் தோனி  •  BCCI

ஸ்டீபன் ஃபிளமிங் உடன் தோனி  •  BCCI

சிஎஸ்கே அணி ஐபிஎல்-லில் கோலோச்சுவதற்கு பிரதான காரணம் தோனியின் கேப்டன்சி. அதே சமயம், களத்துக்கு வெளியே ஒரு பெரும் படையே சிஎஸ்கேவின் வளர்ச்சிக்குப் பாடுபடுகிறது. அந்தப் படையில் முக்கியப் பாத்திரம் வகிப்பவர் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பால் ஃபிளமிங். சிஎஸ்கே அணி நிர்வாகத்தில் எத்தனையோ ஆளுமைகள் வந்து போயிருக்கிறார்கள். ஆனால் தோனிக்கு நிகரான அதிகாரம் மையம் என்றால் அது ஸ்டீபன் ஃபிளமிங் மட்டும்தான்!
2008 ஐபிஎல் போட்டியில் தொடக்க வீரராக சிஎஸ்கேவில் இணைந்த ஃபிளமிங், அடுத்த இரண்டு வருடங்களில் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு உயர்ந்தார். அவர் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் போது அவருடைய வயது 39. தோனி தலைமையிலான சிஎஸ்கே 5 கோப்பைகளை வெல்வதற்கு உறுதுணையாக இருந்த அவர், சிஎஸ்கேவின் சோதனைக் காலங்களிலும் தோனியுடனே நின்றார். ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியில் தோனியுடன் இணைந்து பணியாற்றினார் அவர்.
உலகின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக போற்றப்பட்ட ஸ்டீபன் ஃபிளமிங், நியூசிலாந்து கிரிக்கெட்டின் அதிகார மையங்களில் ஒருவர். "நியூசிலாந்து அரசியல் உலகில் அரசியல்வாதிகளை விட ஸ்டீபன் ஃபிளமிங்கிற்கு செல்வாக்கு அதிகம்" என்கிறார் நியூசிலாந்து முன்னாள் கேப்டன் மார்ட்டின் குரோ. தாயின் அரவணைப்பில் வளர்ந்தவரான ஃபிளமிங், சிறு வயதிலேயே குடும்பத்தின் தலைவன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக மதிக்கப்பட்ட ஸ்டீபன் ஃபிளமிங் வீரர்களைக் கையாள்வதில் (Man management) தேர்ச்சியும் நாட்டமும் கொண்டவர். 'அனைவரும் சமம்' என்ற தத்துவத்தில் தனக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்ததில்லை என்கிறார் ஃபிளமிங். ஐபிஎல் போன்ற கடும் அழுத்தம் நிறைந்த போட்டியில் வீரர்களை அவரவர் போக்கில் விட்டு வேலை வாங்குவதில் ஃபிளமிங் கில்லாடி என்கிறார் 'கிரிக்கெட் 2.0' (cricket 2.0) புத்தகத்தை டிம் விக்மோருடன் இணைந்து எழுதிய ஃபிரெடி வைல்ட்.
கிறிஸ்ட்சர்ச்சில் முதல்த் தரக் கிரிக்கெட் விளையாடும் காலத்திலேயே தனக்கு விசுவாசமான ஓர் குழுவை ஃபிளமிங் உருவாக்கியிருந்தார். கிறிஸ் கெயின்ஸ், கிரேக் மெக்மில்லன், நேதன் ஆஸ்டல் ஆகியோர் அவருடைய முக்கிய தளகர்த்தர்கள். பின்னாளில் நியூசிலாந்தின் கேப்டன் பொறுப்பை ஃபிளமிங் ஏற்ற போது அவருடைய அணியில் இவர்கள் முக்கியப் பங்கு வகித்தனர். "யாருக்கு என்ன பொறுப்பை கொடுக்க வேண்டும், எப்படி முன்னின்று அணியை வழிநடத்த வேண்டும் என்ற கலையை ஃபிளமிங் இளம் வயதிலேயே கற்றுக் கொண்டார்" என்கிறார் குரோ.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2009 ஐபிஎல் போட்டியில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் மேத்யூ ஹேடனை அவர் கையாண்ட விதம் அவருடைய தலைமைத்துவத்துக்கு ஓர் உதாரணம். "ஹேடன் போன்ற ஒரு சிறந்த வீரருக்கு நான் எப்படி பயிற்சியளிக்க முடியும்? அவருக்குத் தெரியாத ஒன்றையா நான் தெரிந்து வைத்திருக்கப் போகிறேன்? எனவே நான் அவரிடம் சென்று "தென்னாப்பிரிக்காவில் ஆட்டம் இல்லாத ஓய்வு நேரங்களில் என்ன செய்ய விரும்புகிறாய்?" என்று கேட்டேன். அவர் தனக்கு மீன் பிடிப்பதில் விருப்பம் என்று சொன்னார். அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் (அணி நிர்வாகம்) செய்து கொடுத்தோம். ஆட்டம் நடைபெறும் நாட்களில் அவர் அணியுடன் இணைந்து விட வேண்டும். அந்த வருடம் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் ஹேடன்" என்கிறார் ஃபிளமிங்.
சர்வதேச கிரிக்கெட்டுக்கு 21 வயதில் அறிமுகமான ஃபிளமிங், 23 வயதில் கேப்டன் பொறுப்பை ஏற்றார். பேட்டிங்கில் கவனத்தைக் குவிக்க வேண்டிய வயதில் வெற்றி என்ற வார்த்தையை மறந்திருந்த ஓர் அணியை வழிநடத்தத் துணிந்தார் அவர். 111 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடியுள்ள ஃபிளமிங் 40.07 என்ற சுமாரான சராசரியுடன் 9 சதங்களை மட்டுமே குவித்துள்ளார். ஆனால் அவருக்கு இருந்த திறமைக்கு குறைந்தது 20 சதங்களாவது குவித்திருக்க வேண்டும் என்கின்றனர் கிரிக்கெட் நிபுணர்கள். ஏன் முடியவில்லை?
பேட்டிங்கில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும் அணியை வழிநடத்துவதில் தான் ஃபிளமிங் தன் சுயத்தை உணர்ந்தார் என்கிறார் மார்ட்டின் குரோ. 1999 - 2003 காலகட்டத்தில் உலகின் சிறந்த கேப்டன் என்று கிரிக்கெட் உலகம் ஃபிளமிங்கைப் போற்றியது. ஆரம்ப காலத்தில் ஃபிளமிங்கின் கவர் டிரைவைப் பார்த்தவர்கள் அடுத்த டேவிட் கோர் என்று புகழாரம் சூட்டினார்கள்; ஆனால் காலம் செல்ல செல்ல அவர் போற்றுதலுக்கு உரிய தலைவராக மாறினார்; ரசிகர்களின் விருப்பத்துக்கு உரிய பேட்டராகத் தொடரவில்லை என்கிறார் ஆண்ட்ரூ மில்லர்.
"தோனியும் ஃபிளமிங்கும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மதிப்பு கொண்டுள்ளனர்." என்கிறார் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ். தோனி தன்னுடைய வியூகங்களை ஃபிளமிங்கிடம் கொண்டு செல்வார்; ஆனால் தோனி சொல்கின்ற எல்லாவற்றையும் ஃபிளமிங் ஏற்றுக்கொள்ள மாட்டார்; இருவருக்கும் இடையே ஆரோக்கியமான விவாதம் நடைபெறும் என்கிறார் டிம் விக்மோர். 2018-ல் சிஎஸ்கேவில் இணைந்த தீபக் சஹாரின் பந்துவீச்சுக் குறித்து ஃபிளமிங்கிற்கு பெரிய அபிப்ராயம் இல்லை. ஆனால் சஹாருக்கு ஆதரவாக நின்ற தோனி, 14 ஆட்டங்களிலும் அவர் விளையாட வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தார்.
பொதுவாக கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்கள் சிறந்த பேட்டராக இருக்க மாட்டார்கள். கேப்டன்சி காரணமாக மட்டுமே அணியில் இடம்பிடித்திருப்பார்கள். தங்களுடைய தனிப்பட்ட ஆட்டத்தை நினைத்து தாழ்வு மனப்பான்மை கொண்டிருப்பார்கள். இங்கிலாந்து முன்னாள் கேப்டன்கள் மைக் பிரயர்லி, நாஸர் ஹூசைன் இருவரையும் உதாரணங்களாக சொல்லலாம். ஆனால் நியூசிலாந்து பேட்டிங் பாரம்பரியத்தின் இளவரசராகப் பார்க்கப்பட்ட ஃபிளமிங், தனது கேப்டன்சிக்காக தனது ஆட்டத்தை காவு கொடுத்தவர். அதே போல, நியூசிலாந்தை வழி நடத்திய காலத்தில் அவர் எப்போதும் பாதுகாப்பின்மையை உணர்ந்ததில்லை.
ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட் அணியில் விளையாடும் போது ஃபிளமிங்கைத் தான் 'ஃபிளம்' என்றுதான் அழைப்பேன் என்கிறார் வாஷிங்டன் சுந்தர். அப்போது சுந்தருக்கு வயது 17 மட்டுமே. இதுகுறித்து கிரிக்கெட் மன்த்லி இதழில் கேட்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஃபிளமிங் "ஒருவருக்கு மரியாதை கொடுக்க வேண்டுமா இல்லையா என்பதை அவருடைய வயது தீர்மானிப்பதில்லை." என்றார்.
ஒரு ஹீரோவைப் போல சாந்த சொரூபியாகத் தெரியும் ஃபிளமிங், அணிக்குத் தேவைப்பட்டால் ஆன்டி ஹீரோவாக மாறவும் தயங்க மாட்டார்; 2004-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் எதிரணி கேப்டன் கிரேம் ஸ்மித்தை வம்புக்கு இழுத்தே வெற்றிக் கோப்பையைத் தட்டிச் சென்றார். "தந்திரோபாய, உளவியல் ரீதியாக சிறந்த கேப்டனாக இருந்த ஃபிளமிங், சீக்கரமாகவே கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த கேப்டன்கள் வரிசையில் இடம்பிடித்தார்" என்கிறார் நீல் மான்தோர்ப்.
ஐபிஎல் 2023-ல் சமூக வலைதளங்களில் அதிகம் பேசுபொருளான பயிற்சியாளர் ஆஷிஸ் நெஹ்ரா. இளநீர் சகிதமாக மைதானத்தை அந்நியன் 'அம்பி' கணக்காக அவர் சுற்றிக் கொண்டிருந்தது ரசிகர்களைக் கவர்ந்தது. ஆனால் ஸ்டீபன் ஃபிளமிங்கோ உணர்ச்சிகளை அதிகம் வெளிப்படுத்தாதவர். குஜராத்துக்கு எதிரான முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் தொடக்க வீரர் கான்வே குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியதை அவர் அலட்டிக்கொள்ளவே இல்லை. " உங்களுடைய முக்கிய பேட்டராலேயே சரியாக விளையாட முடியவில்லை என்றால் கீழ் வரிசையில் உள்ளவர்களுக்கு இன்னும் சிரமமாகத் தானே இருக்கப் போகிறது?" என்கிறார் ஃபிளமிங்.
அதே சமயம், ஃபிளமிங், தரவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேகேஆர் பாணி பயிற்சியாளரும் அல்ல. தரவுகளை விட வீரர்களின் உடல் மொழிதான் எனக்கு முக்கியம் என்று சொல்லும் ஃபிளமிங். "நான் தரவுகளை வீரர்கள் மீது திணிப்பவன் அல்ல; விபரங்களுக்கும் சிறிய விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவன். அது பார்ப்பதற்கு வசீகரமாகத் தெரியாமல் போகலாம். ஆனால் எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை." என்கிறார்.
ஐபில் போட்டியில் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பது என்பது கத்தி மேல் நடப்பதற்கு சமமானது. ஒரு வருடம் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை என்றாலும் பந்தாடப்படுவது உறுதி. ஆனால் சிஎஸ்கே நிர்வாகம், ஸ்டீபன் ஃபிளமிங்கிற்கு மிகப் பெரிய முடிவுகளை எடுக்கும் சுதந்திரத்தைக் கொடுத்துள்ளது. தற்போது அணியில் உள்ள பயிற்சியாளர்களில் பெரும்பாலானவர்கள் கடந்த காலங்களில் ஏதோவொரு வகையில் ஃபிளமிங் உடன் தொடர்பில் இருந்தவர்கள் தாம். மைக் ஹஸ்ஸி, டுவைன் பிராவோ இருவரும் சிஎஸ்கேவின் முன்னாள் வீரர்கள். சிஎஸ்கேவின் முன்னாள் பயிற்சியாளர் எல்.பாலாஜியும் சிஎஸ்கேவுக்கு விளையாடியிருக்கிறார்.
இந்த வருடம் சிஎஸ்கே கோப்பை வென்றதில் ரஹானேவின் அதிரிபுதிரி ஆட்டத்துக்கு ஒரு முக்கியப் பங்குண்டு. ஏலத்தில் ரஹானேவை எடுத்தே ஆக வேண்டும் என்று ஃபிளமிங் மட்டும்தான் உறுதியாக இருந்தார். ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியை வழிநடத்திய காலத்தில் ரஹானேவை அருகில் இருந்துப் பார்த்தவர் அவர். " இன்னிங்ஸைக் கட்டமைக்கும் ஆங்கர் (anchor) என்ற முத்திரை எப்படியோ ரஹானே மீது விழுந்துவிட்டது. அதை உடைக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அவருடைய இயல்பான ஆட்டத்தை விளையாடுவதற்கு நாங்கள் உறுதுணையாக நின்றோம்" என்கிறார் ஃபிளமிங்.
சிஎஸ்கேவின் பந்துவீச்சுப் பயிற்சியாளர்களை ஃபிளமிங் கையாளும் விதம் வேலைப் பகிர்வில் (work allocation) அவருக்கு இருக்கும் நிபுணத்துவத்தை வெளிப்படுத்துகிறது. சிஎஸ்கே முன்னாள் வீரர் பிராவோ தற்போது சிஎஸ்கேவின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக உள்ளார். பிராவோ ஒரு இறுதிக்கட்ட ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என்பதால் அவருடைய சேவை சிஎஸ்கேவுக்குத் தேவை. ஆனால் பிராவோவிற்காக நீண்ட காலமாக பந்துவீச்சுப் பயிற்சியாளராக இருக்கும் எரிக் சைமனை ஃபிளமிங் கைவிட்டுவிடவில்லை. பவர்பிளே பந்து வீச்சாளர்களுக்கு எரிக் சைமன்; இறுதிக்கட்ட ஓவர் பந்து வீச்சாளர்களுக்கு பிரேவோ!
கேப்டன் - பயிற்சியாளர் உறவு என்பது நவீன கிரிக்கெட்டில் ரொம்பவும் முக்கியமாது. குறிப்பாக ஒரு நொடியில் ஆட்டம் கைவிட்டுப் போக வாய்ப்புள்ள டி20-ல் கேப்டனின் மனசாட்சியாக பயிற்சியாளர் இருக்க வேண்டியது அவசியம். ஃபிளமிங்கிற்கு நியூசிலாந்து கிரிக்கெட்டின் தலைவனாக வேண்டுமென்ற விருப்பம் உள்ளது என்று என்றார் மார்ட்டின் குரோ. அது நடக்குமோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். எப்போதுமே அவர் 'தல' தோனியின் மனசாட்சி!