மத்வால் அபார பந்துவீச்சு: லக்னெளவை வீழ்த்திய மும்பை!
சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான சேப்பாக்கம் ஆடுகளத்தில் 5 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் வேகப்பந்து வீச்சாளர் மத்வால்.
ESPNcricinfo staff
24-May-2023
ஆகாஷ் மத்வால் • Associated Press
ஐபிஎல் போட்டியின் ஜாம்பவனாகத் திகழும் மும்பைக்கு இந்த ஆண்டு கடைசி நேரத்தில் பெங்களூரின் தோல்வியால் பிளேஆஃப் வாய்ப்பு கைகூடியது. இந்தப் பருவத்தில் பல ஏற்ற இறக்கங்களைப் பார்த்த லக்னெள அணிக்கு எதிராக எலிமினேட்டர் ஆட்டத்தில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
சேப்பாக்கம் சுழற்பந்துக்குச் சாதகமாக இருக்கும் என்பதால் முதல் ஓவரிலேயே பந்துவீச வந்தார் கிருனாள் பாண்டியா. முதல் பந்திலேயே இஷான் கிஷன் பவுண்டரியை விளாசினாலும் ரோஹித் சர்மாவுக்கு ஸ்டம்ப் லைனிலேயே வீசி அந்த ஓவரை முடித்தார் கிருனாள் பாண்டியா. கிருஷ்ணப்பா கெளதம் வீசிய அடுத்த ஓவரில் இரு பவுண்டரிகளை அடித்தார் இஷான் கிஷன்.
கிருனாள் பாண்டியாவின் 3-வது ஓவரிலும் இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் பறக்க, சுழற்பந்துவீச்சுத் திட்டம் கைகொடுக்கவில்லை என்பதை உணர்ந்த அவர் நவீன் உல் ஹக்கை அழைத்தார். அதற்கான பலனும் கிடைத்தது. 11 ரன்கள் எடுத்து அந்த ஓவரில் பதோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரோஹித். அதிரடியாகத் தொடங்கிய கிரீன் அதே ஒவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்தார்.
யஷ் தாக்குர் வீசிய 5-வது ஓவரில் இஷான் கிஷன் 15 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சூர்யகுமார் யாதவ் தனக்கே உரித்தான ஸ்கூப் ஷாட்டில் சிக்ஸர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். கிருனாளின் ஓவரில் 3 பவுண்டரிகள் கிடைக்க, பவர்பிளேயில் 62 ரன்களைக் குவித்தது மும்பை.
9-வது ஓவரில் ஆளுக்கொரு சிக்ஸரைப் பறக்கவிட்ட கிரீனும் சூர்யகுமார் யாதவும் ரன்ரேட்டைக் குறையாமல் பார்த்துக்கொண்டனர். 10 ஓவரில் 98 ரன்களை எடுத்த மும்பைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் நவீன் உல் ஹக். 33 ரன்களுடன் சூர்யகுமார் யாதவும், கிரீன் 41 ரன்களிலும் ஒரே ஓவரில் வெளியேறினர். நடு ஓவர்களில் 3 ஓவர்களுக்கு மும்பைக்கு பவுண்டரி எதுவும் கிடைக்கவில்லை.
17-வது ஓவர் தொடங்கி திலக் வர்மா, டிம் டேவிட், ஜோர்டான் ஆகியோர் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். வதேராவை இம்பாக்ட் வீரராகக் களமிறக்கியது மும்பை. அது நல்ல முடிவாகவும் அமைந்தது. கடைசி ஓவரில் இரு பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை வதேரா விளாச மும்பை அணி 20 ஓவர்களில் 182 ரன்களைக் குவித்தது. நவீன் உல் ஹக் 4 விக்கெட்டுகளையும் யஷ் தாக்குர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். சேப்பாக்கம் ஆடுகளத்தில் லக்னெளவின் சுழற்பந்து வீச்சாளர்கள் யாரும் விக்கெட்டை வீழ்த்தவில்லை என்பதுதான் ஆச்சர்யமாக இருந்தது.
எலிமினேட்டர் போன்ற முக்கியமான ஆட்டங்களில் இது சவாலான இலக்கு என்றாலும் லக்னெளவிற்கு அதிரடித் தொடக்கம் தேவைப்பட்டது. பெஹ்ரன்டார்ஃப் வீசிய முதல் ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விளாசினார் மேயர்ஸ். அடுத்த ஓவரை அட்டகாசமாக வீசிய மத்வால் 2 ரன்களை மட்டுமே கொடுத்து மன்கட்டை ஆட்டமிழக்கச் செய்தார்.
ஜோர்டனின் குறைவேகப் பந்தில் விக்கெட்டைப் பறிகொடுத்தார் மேயர்ஸ். அவர் 18 ரன்கள் எடுத்தார். 5-வது ஓவரில் ஸ்டாய்னிஸின் கேட்ச்சை நெஹல் வதேரா தவறவிட்டார். அதற்கான தண்டனையை அடுத்த ஓவரிலேயே அனுபவித்தது மும்பை. ஷோகீன் வீசிய 6-வது ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசினார் ஸ்டாய்னிஸ். பவர்பிளேயில் 2 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்கள் எடுத்தது லக்னெள.
சாவ்லா வீசிய 7-வது ஓவரில் கிருனாள் பாண்டியா இரண்டு பவுண்டரிகளை அடித்தார். 9-வது ஓவரில் அவரது விக்கெட்டை வீழ்த்தினார் சாவ்லா. அங்கு தொடங்கியது லக்னெளவின் சரிவு.
இன்றைய நாளின் நட்சத்திரப் பந்துவீச்சாளரான மத்வாலின் அட்டகாசமான ஓவரில் பதோனி, பூரன் வெளியேற அணியைக் கரைசேர்க்க வேண்டிய மொத்த பொறுப்பும் ஸ்டாய்னிஸ் மீது விழுந்தது. ஆனால், அவசரப்பட்டு ஓடி, ரன் அவுட்டாகி ஸ்டாய்னிஸ் வெளியேற ஆட்டத்தின் முடிவு அப்போதே உறுதியானது. ஸ்டாய்னிஸ் 40 ரன்கள் எடுத்தார்.
கிருஷ்ணப்பா கெளதம், ரவி பிஸ்னாய், தீபக் ஹூடா ஆகியோர் வந்த கொஞ்ச நேரத்திலேயெ சொற்ப ரன்களில் வெளியேறினர். மூன்று லக்னெள பேட்டர்கள் ரன் அவுட் ஆகி, நிலைமையை மோசமாக்கினார்கள். கடைசியில் லக்னெள அணி, 16.3 ஓவர்களில் 101 ரன்கள் மட்டும் எடுத்துத் தோல்வியடைந்தது. சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான சேப்பாக்கம் ஆடுகளத்தில் 5 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் வேகப்பந்து வீச்சாளர் மத்வால். வெள்ளியன்று நடைபெறும் குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் குஜராத் - மும்பை அணிகள் மோதவுள்ளன.