முடிவு
2-வது ஒருநாள் (D/N), இந்தூர், September 24, 2023, ஆஸ்திரேலியாவின் இந்தியச் சுற்றுப்பயணம்

இந்தியா 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி (டிஎல்எஸ் வழிமுறை)

ஆட்ட நாயகன்
, இந்தியா
105 (90)
shreyas-iyer
முன்னோட்டம்

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?

இந்த ஆண்டில் மட்டும் 4 ஒருநாள் சதங்களை அடித்துள்ள கில், நாளைய ஆட்டத்தில் இந்தியாவின் துருப்புச்சீட்டாக இருப்பார்.

கேஎல் ராகுல்  •  AFP/Getty Images

கேஎல் ராகுல்  •  AFP/Getty Images

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் ஆட்டம் இந்தூரில் நடைபெறுகிறது. ஏற்கெனவே முதல் ஆட்டத்தில் வெற்றிபெற்ற தன்னம்பிக்கையுடன் இந்த ஆட்டத்தில் களமிறங்குகிறது கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி.
வேகப்பந்துவீச்சில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது. கடந்த ஆட்டத்தில் ஷமியின் பந்துவீச்சில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. முதல் ஒருநாள் ஆட்டத்தில் 78 ரன்களைக் கொடுத்த ஷார்துல் கடந்த முறை இந்தூரில் நியூசிலாந்துக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த முறையும் இந்தூரில் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு உள்ளது.
2-வது ஒருநாள் ஆட்டத்தில் பும்ராவிற்குப் பதில் ஆசியக் கோப்பை இறுதிச் சுற்றில் கலக்கிய சிராஜுக்கு இந்திய அணி வாய்ப்புக் கொடுக்கலாம். சூழ்நிலைக்குத் தகுந்தபடி தகவமைத்துக்கொள்ளும் அஸ்வின் பந்துவீச்சு இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும். உலகக் கோப்பையை கருத்தில்கொண்டு வாஷிங்டன் சுந்தருக்கும் இந்த ஆட்டத்தில் வாய்ப்பளிக்கப்படலாம்.
இந்தியாவின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் கடந்த ஆட்டத்தில் கில், ருதுராஜ், சூர்யகுமார் யாதவ், கேப்டன் ராகுல் என 4 பேரும் அரை சதம் அடித்தார்கள். இந்த ஆண்டில் மட்டும் 4 ஒருநாள் சதங்களை அடித்துள்ள கில், நாளைய ஆட்டத்தில் இந்தியாவின் துருப்புச்சீட்டாக இருப்பார்.
ஷ்ரேயஸ் ஐயர் முதல் ஒருநாள் ஆட்டத்தில் 3 ரன்களில் ரன் அவுட்டானார். காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பிய உடனேயே அவருக்கு முதுகுப் பிடிப்பு ஏற்பட்டது. ஆசியக் கோப்பைப் போட்டியில் விளையாடிய ஒரு ஆட்டத்திலும் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார் ஷ்ரேயஸ். ஆகவே நாளைய ஆட்டத்தில் தனது திறமையை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் அவருக்குத்தான் அதிகமாக உண்டு. ருதுராஜுக்குப் பதிலாக இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படலாம்.
டிராவிஸ் ஹெட் இல்லாத நிலையில் அணிக்குள் சமநிலையை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது ஆஸ்திரேலியா. தென்னாப்பிரிக்கத் தொடரில் 57 சராசரியில் ரன்களைக் குவித்த லபுஷேன் நடு ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நம்பிக்கையாக உருவெடுத்துள்ளார். முதல் ஒருநாள் ஆட்டத்தில் வார்னர் மட்டுமே அரை சதம் அடித்தார். ஆஸி.யின் நடுவரிசை பேட்டர்கள் சிறப்பாகத் தொடங்கினாலும் நிலைத்து ஆடத் தவறிவிட்டார்கள். இந்தூர் போன்ற பேட்டர்களுக்குச் சாதகமான மைதானத்தைப் பயன்படுத்திக்கொள்ள ஆஸ்திரேலிய அணி முயற்சிக்கும்.
தொடர்ச்சியாக விளையாடிவரும் ஸ்டாய்னிஸ்க்கு இந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்படும்பட்சத்தில் ஆரோன் ஹார்டிக்கு வாய்ப்பளிக்கப்படலாம். பேட்டிங் வரிசையை குறைக்க ஆஸி. விரும்பினால் ஸ்டாய்னிஸ்க்குப் பதிலாக ஹேசில்வுட் களமிறங்கலாம். அலெக்ஸ் கேரி மற்றும் ஜாஷ் இங்லிஸ் என இரு கீப்பர்களுக்கும் நாளைய ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்கலாம்.
ஆஷ்டன் அகர் இல்லாத நிலையில் இரண்டாவது சுழற்பந்துவீச்சாளருக்கான தேவையைக் கடந்த ஆட்டத்தில் ஆஸி. எதிர்கொண்டது. கூடுதல் சுழற்பந்துவீச்சாளர் தேவையா என்ற கேள்விக்கு வரும் ஆட்டங்களில் விடை தெரியும் என கம்மின்ஸ் தெரிவித்திருந்தார். இந்த அம்சம் ஆஸ்திரேலியாவுக்கு சவாலாக இருக்கும்.
பேட்டர்களின் சொர்க்கபுரியான இந்தூரில் கடந்த ஜனவரியில் இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஆட்டம் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்தியா 385 ரன்களைக் குவித்தது. 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. ஆகவே நாளைய ஆட்டத்திலும் பேட்டர்களின் ஆதிக்கம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
ரோஹித், கோலி ஆகியோர் ராஜ்கோட்டில் நடைபெறவுள்ள கடைசி ஆட்டத்தில் அணிக்குத் திரும்புகிறார்கள். அதற்குள் கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி இரண்டாவது ஆட்டத்திலும் வென்று தொடரைக் கைப்பற்றுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியா அதனைத் தக்கவைக்கவும், தொடரைக் கைப்பற்றவும் இந்த ஆட்டத்தில் போராடும். இந்த ஆண்டில் ஆஸ்திரேலியா விளையாடிய 9 ஒருநாள் ஆட்டங்களில் 5-ல் தோல்வியடைந்துள்ளது. குறிப்பாக கடைசி 4 ஆட்டங்களிலும் அந்த அணி தோல்வியடைந்துள்ளது. தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆஸ்திரேலியா பாடுபடும் என்பதால் இந்தூர் ஒருநாள் ஆட்டம் சுவாரசியமாகவே இருக்கப்போகிறது.
உத்தேச அணி
இந்தியா: ஷுப்மன் கில், இஷான் கிஷன், ஷ்ரேயஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷார்துல் தாக்குர், முகமது ஷமி, முகமது சிராஜ்.
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், கேம்ரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஸாம்பா, ஜோஷ் இங்லிஸ்/ஆரோன் ஹார்டி, ஷான் அபாட்.

Language
Tamil
AskESPNcricinfo Logo
Instant answers to T20 questions
ஆஸ்திரேலியா இன்னிங்ஸ்
<1 / 3>