செய்திகள்

ஐசிசியின் வருவாய்ப் பகிர்மானத் திட்ட முன்வரைவு: போர்க்கொடி தூக்கும் உறுப்பு நாடுகள்!

ஐசிசியின் இந்த முன்வரைவை பாகிஸ்தான் எதிர்த்ததுடன் வளர்ந்துவரும் கிரிக்கெட் அணிகளுக்கு இது பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் எனத் தெரிவித்திருக்கிறது.

ஐசிசி ஆலோசனைக் கூட்டம்  •  Steve Bardens/ICC/Getty Images

ஐசிசி ஆலோசனைக் கூட்டம்  •  Steve Bardens/ICC/Getty Images

சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி 2024 - 27 காலகட்டத்துக்கான வருவாய் பகிர்மானத் திட்டத்தின் முன்வரைவை வெளியிட்டுள்ளது. இது அதில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளை கவலைகொள்ளச் செய்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டின் தலைமையகமாக விளங்குகிறது ஐசிசி. இதில் முழுநேர உறுப்பினராக மொத்தம் 12 நாடுகள் உள்ளன. இவைபோக 94 உறுப்பு நாடுகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஐசிசிக்குக் கிடைக்கும் மொத்த வருமானம் இந்த நாடுகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. இந்தத் தொகையைப் பிரிக்கும் விதிமுறையை ஐசிசி அவ்வப்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றிவருகிறது.
தற்போது 2024 - 27 காலகட்டத்துக்கான வருமான பகிர்வு விதிமுறையின் முன்வரைவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி தோராயமாக ஐசிசியின் ஆண்டு வருமானம் 600 மில்லியன் டாலர்கள். இதில் இந்தியா பெறவிருக்கும் பங்குத் தொகை மட்டும் சுமார் 230 மில்லியன் டாலர்கள். அதாவது மொத்தத் தொகையில் 38.5 சதவீதம்.
ஐசிசிக்கு ஒவ்வொரு நாடுகளின் மூலமும் கிடைக்கும் வருவாய், அந்த நாடுகளில் உள்ள ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் ஆட்டங்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு கிரிக்கெட் அணியும் மதிப்பிடப்படுகிறது. இதன் பின்னணியிலேயே வருவாய்ப் பகிர்வும் நடைபெறுகிறது.
ஐசிசியின் மொத்த வருமானத்தில் 38.5 சதவீதத்தை இந்தியா பெற்றுக்கொள்கிறது. அதே வேளையில் இங்கிலாந்து அணி 6.89 சதவீதத்தைப் (41.33 மில்லியன் டாலர்) பெறுகிறது. மூன்றாவது உறுப்பினரான ஆஸ்திரேலியா 37.53 மில்லியன் டாலரையும் (6.25 சதவீதம்) பாகிஸ்தான் 34.51 மில்லியன் டாலரையும் பெறவிருக்கின்றன. மீதமுள்ள 8 முழு நேர உறுப்பினர்களுக்கு 5 சதவீதத்துக்கும் குறைவான தொகையே கிடைக்கும். முழுநேர உறுப்பினர்களுக்கே இந்த நிலை என்றால் உறுப்பு நாடுகளின் நிலை பற்றிச் சொல்லவே வேண்டாம். இதுதான் இப்போது பேசுபொருளாகியுள்ளது.
பாகிஸ்தான் ஐசிசியின் இந்த முன்வரைவை எதிர்த்ததுடன் வளர்ந்துவரும் கிரிக்கெட் அணிகளுக்கு இது பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் எனத் தெரிவித்திருக்கிறது. இருப்பினும், ஐசிசியின் பொதுச் செயலாளர் வாசிம் கான் இந்தக் கொள்கை மூலமாக அனைத்து உறுப்பினர்களும் முன்பைவிட கூடுதலாக நிதியைப் பெறுவார்கள் எனத் தெரிவித்திருக்கிறார்.
ஐசிசியின் தலைமை நிர்வாகக் கமிட்டியில் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளில் 3 பேர் அங்கம் வகிக்கின்றனர். அவர்களில் ஒருவரும் போட்ஸ்வானா கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவருமான சுமோத் தாமோதர், ஐசிசியின் இந்தப் புதிய கொள்கை உறுப்பு நாடுகளின் தேவையைத் தீர்த்து வைக்காது என்கிறார். மேலும், ஐசிசியின் இந்த முன்வரைவு உறுப்பு நாட்டின் பிரதிநிதியாக தனக்கு எமாற்றமளிக்கிறதாகத் தெரிவித்திருக்கிறார்.
நேபாளம், தாய்லாந்து போன்ற கிரிக்கெட்டில் வளர்ந்துவரும் நாடுகள் இந்தக் கொள்கையால் பாதிக்கப்படும் என சுமோத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது ஒருபக்கம் இருக்க, வனுவாட்டு கிரிக்கெட் சங்கத்தின் தலைமை நிர்வாகி டிம் கட்லர் ஐசிசியின் இந்த முன்வரைவு கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த நாடுகளுக்கும் புதிதாக உள்ளே வரும் நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கும் அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐசிசியின் முன்னாள் தலைவரான எஹ்சான் மணியும் இந்த முன்வரைவுக்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ராய்டர்ஸுடம் இதுகுறித்து அவர் பேசுகையில் இந்தியாவை மட்டுமே வருவாய்க்கு முழுவதுமாக ஐசிசி நம்பி இருப்பது ஆபத்தானது எனத் தெரிவித்திருக்கிறார்.
சீனா, மத்தியக் கிழக்கு நாடுகள், அமெரிக்கா ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக்குவதன் மூலமாக கிரிக்கெட்டை உலகளாவிய விளையாட்டாக மாற்றமுடியும் என்கிறார் அவர். இந்தியாவுக்கு பெரும்பான்மையான தொகை செல்வதில் நியாயம் இல்லை எனக் கூறும் எஹ்சான் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் சமபங்கு தொகை கொடுக்கப்படுவதே சரியானது என்கிறார்.
இப்படி எதிர்க் குரல்கள் எழும்பிவரும் நிலையில் இந்தப் புதிய முன்வரைவு குறித்து முடிவெடுக்க வரும் ஜூலை மாதம் டர்பனில் ஐசிசி கூட்டம் நடைபெறுகிறது. அப்போது இந்த முன்வரைவின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். அதன் அடிப்படையிலேயே முன்வரைவு விதிமுறையாக ஏற்றுக்கொள்ளப்படும்.