ஆட்டங்கள் (7)
உலகக் கோப்பை (1)
WC Warm-up (2)
Asian Games (M) (1)
IND v ஆஸி (3)
செய்திகள்

தோனி ஓய்வுக்குப் பிறகு டெஸ்டில் திருப்புமுனை: அஸ்வின்!

கடந்த இரண்டு ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கும்போது, இந்திய டெஸ்ட் அணிக்கு மிகவும் சிறப்பான பயணமாகவே அமைந்துள்ளது என்கிறார் அஸ்வின்.

தோனியுடன் அஸ்வின்  •  AFP

தோனியுடன் அஸ்வின்  •  AFP

2014-இல் எம்எஸ் தோனி ஓய்வு பெற்ற பிறகு இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் திருப்புமுனை ஏற்படத் தொடங்கியதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 7 முதல் 11 வரை நடைபெறுகிறது. தொடர்ந்து, இரண்டாவது முறையாக இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றுள்ள இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
இந்திய அணி தகுதி பெற்றது குறித்து பிசிசிஐ விடியோ வெளியிட்டுள்ளது. இதில் கேப்டன் ரோஹித் சர்மா, சேத்தேஷ்வர் புஜாரா, முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்டோர் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
அஸ்வின் கூறியதாவது:
"ஒரு அணியாகப் போட்ட மிகப் பெரிய உழைப்பு இது. அணி நிர்வாகம், கேப்டன் என அனைவரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெறும் இந்தத் தருணத்துக்காகதான் காத்திருந்தோம். ஓவல் மைதானத்தில் விளையாட வீரர்கள் அனைவரும் உற்சாகமாக உள்ளார்கள்.
இங்கிலாந்து மண்ணில் இந்திய அணிக்கு சில நல்ல நினைவுகள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கும்போது, இந்திய டெஸ்ட் அணிக்கு மிகவும் சிறப்பான பயணமாகவே அமைந்துள்ளது.
நிச்சயமாக, 2014-இல் தான் திருப்புமுனை ஏற்படத் தொடங்கியது. எம்எஸ் தோனி ஓய்வு பெற்றார். நாங்கள் குறைவான டெஸ்ட் ஆட்டங்கள் மட்டுமே விளையாடியிருந்தோம். எங்களது பயணத்தை நாங்களே தொடங்க வேண்டியிருந்தது.
மூத்த வீரர்கள் இல்லாமல் விளையாடுவது எளிதான காரியம் அல்ல. நாங்கள் போட்ட உழைப்பு அனைத்துக்கும் கடந்த இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பலன் கிடைத்துள்ளது என்பதை நான் தைரியமாகக் கூறுவேன்.
தொடர்ந்து இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளோம். இது மிகப் பெரிய சாதனை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 3-1 அல்லது 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்போம்.
ஆனால், ஆஸ்திரேலியா சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தியது. அதனால், எங்களால் அதைச் செய்ய முடியவில்லை. இருந்தாலும், நாங்கள் தொடர்ச்சியாக விளையாடிய விதத்துக்கான பரிசுதான் இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றிருப்பது" என்றார் அஸ்வின்.