செய்திகள்

மல்யுத்த வீரர்கள் போராட்டம்: ஆதரவுக் குரல் எழுப்பும் கிரிக்கெட் வீரர்கள்!

மல்யுத்த வீரர்களின் நிலை கவலையளிப்பதாகவும் உடனடியாக இதற்குத் தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறார் இர்ஃபான் பதான்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்கள்  •  Hindustan Times via Getty Images

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்கள்  •  Hindustan Times via Getty Images

இந்திய மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடர்ந்துவரும் நிலையில் கும்ப்ளே, இர்ஃபான் பதான், ராபின் உத்தப்பா போன்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இதற்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிமல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் குதித்தனர். வினீஷ் போகாட், சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா என ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன் பட்டம் வென்ற வீரர்கள் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகின்றனர்.
மத்திய தில்லியில் போராட்டம் நடத்திவந்த வீரர்கள், கடந்த 28-ம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரால் வீரர்கள் கைது செய்யப்பட்டனர். வலுக்கட்டாயமாக அவர்களை காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றும் காட்சிகள் நாடு முழுவதும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், மல்யுத்த வீரர்களுக்கு கிரிக்கெட் வீரர்களிடையே ஆதரவு பெருகிவருகிறது. இந்தியாவின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே தனது ட்வீட்டில், "கடந்த மே மாதம் 28-ம் தேதி நமது மல்யுத்த வீரர்கள் தாக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். முறையான பேச்சுவார்த்தை மூலம் எதையும் தீர்க்க முடியும். விரைவில் இந்த விஷயத்தில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, ராபின் உத்தப்பா தனது ட்விட்டர் செய்தியில்,"நமது மல்யுத்த வீரர்களுக்கு என்ன நடக்கிறது என்பதைக் கேள்விப்பட்டு வருத்தப்படுகிறேன். இதை அமைதியான முறையில் நிவர்த்தி செய்ய வழி உள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அது விரைவில் நடக்க பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்திய முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான இர்ஃபான் பதான் மல்யுத்த வீரர்களின் நிலை கவலையளிப்பதாகவும் உடனடியாக இதற்குத் தீர்வு காண வேண்டும் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார். முன்னதாக கபில் தேவ், வீரேந்தர் சேவாக், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் மல்யுத்த வீரர்களுக்கு தங்களது ஆதரவை தெரிவித்திருந்தனர்.